நர்ஹரி துவாரகதாஸ் பாரிக் (Narhari Dwarkadas Parikh) இவர் இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், சுதந்திர ஆர்வலரும் மற்றும் சமூக சீர்திருத்தவாயும் ஆவார். மகாத்மா காந்தியால் செல்வாக்கு பெற்ற இவர், வாழ்நாள் முழுவதும் காந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். இவர் சுயசரிதைகளை எழுதினார். கூட்டாளிகளின் படைப்புகளைத் திருத்தியுள்ளார். மேலும் சில படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். இவரது எழுத்து காந்திய செல்வாக்கையும் பிரதிபலித்தது.
பாரிக் 1891 அக்டோபர் 17 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். இவரது குடும்பம் காத்லால் (இப்போது கேதா மாவட்டம் ) பகுதியைச் சேர்ந்தது. அகமதாபாத்தில் படித்த இவர் 1906 இல் மெட்ரிகுலேசன் முடித்த பின்னர், 1911 இவர் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் மற்றும் 1913 இல் இளங்கலைச் சட்டமும் பெற்றார். இவர் தனது நண்பர் மகாதேவ் தேசாயுடன் இணைந்து 1914 இல் சட்டப்பயிற்சி செய்யத் தொடங்கினார். 1916இல், இவர் சட்டப்யிற்சியை விட்டுவிட்டு, மகாத்மா காந்தியுடன் சமூக சீர்திருத்த இயக்கங்களிலும் பின்னர் இந்திய சுதந்திர இயக்கத்திலும் சேர்ந்தார்.
தீண்டாமை, குடிப்பழக்கம் மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். பெண்களுக்கான சுதந்திரம், சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்காகவும் பணியாற்றினார். இவர் 1917இல் சபர்மதி ஆசிரமத்தால் நடத்தப்பட்ட தேசிய பள்ளியுடன் தொடர்பிருந்தார். 1920இல் குசராத் வித்யாபீடத்தில் சேர்ந்தார். இவர் 1935முதல் சபர்மதி ஆசிரமத்தை நிர்வகித்தார். 1937இல் அடிப்படை கல்வி வாரியத்தின் தலைவராக பணியாற்றினார். 1940இல் கிராமசேவக வித்யாலயாவின் தலைவராகவும் இருந்தார். சில ஆண்டுகள் காந்தியின் செயலாளராகவும் இருந்தார்.[1]
இவர் நவஜீவன் அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றினார்.[2]
பாரிக் தனது கூட்டாளிகளின் சில சுயசரிதைகளை எழுதினார்; மகாதேவ் தேசாயின் மகாதேவபைனு பூர்வாச்சரிதம் (1950), வல்லபாய் படேலின் சர்தார் வல்லபாய் பகுதி 1-2 (1950, 1952) மற்றும் கிசோர்லால் மஷ்ரூவாலாவின் சிரேயார்த்தினி சாதனா (1953). மானவ் அர்த்தசாத்திரம் (1945) மனித பொருளாதாரம் குறித்த இவரது படைப்பு. கல்வி, அரசியல் மற்றும் காந்திய சிந்தனை பற்றிய இவரது எழுத்துக்களில் சம்யவத் மற்றும் சர்வோதே (1934), வர்தா கெல்வானினோ பிரயோக் (1939), யந்திரணி மரியாதா (1940) போன்றவை.[1] அட்லு தூ ஜான்ஜோ (1922), கராண்டியோ (1928) மற்றும் கன்யானே பட்ரோ (1937, மகாதேவ் தேசாயுடன்) கல்வி குறித்த இவரது எண்ணங்களை உள்ளடக்கியது. கௌதும்பிக் அர்த்தசாத்திரம் (1926), பர்தோலினா கெதுடோ (1927) ஒரு சர்வோதே சமஜ்னி ஜான்கி போன்றவை சமகால சமூகப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கின்றன
ரவீந்திரநாத் தாகூரின் ஒரு சில படைப்புகளான மாகாதேவ சித்ரங்கதா (1916), விதே அபிசாப் (1920), பிராச்சின் சாகித்யா (1922) போன்றவற்றை மாகதேவ் தேசாயுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். லியோ டால்ஸ்டாயின் சில படைப்புகளையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.: ஜேட் மஜூரி கர்னாரோன் (1924) மற்றும் தியாரே கரிஷு ஷு? (1925-26, ரங் அவதூத் என்பவருடன் இணைந்து ).[1]
பாரிக் மணிபென் என்பவரை மணந்தார், இவர்களுக்கு வனமாலா என்ற ஒரு மகளும் மற்றும் மோகன் என்ற ஒரு மகனும் இருந்தனர்.[3] வனமாலா பாரிக், கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கை வரலாறான, அமரா பா (1945), என்பதை சுசீலா நய்யாருடன் இணைந்து எழுதினார்.
இவருக்கு 1947 இல் பக்கவாதம் ஏற்பட்டது, ஆனால் அப்போது உயிர் பிழைத்த இவர், முடக்கம் மற்றும் இருதய அடைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து 1957 சூலை 15 ஆம் தேதி பர்தோலியில் உள்ள சுவராஜ்ஜிய ஆசிரமத்தில் இறந்தார்.[1]
காந்தி இறந்த பிறகு, இவரது அஸ்தி சபர்மதி ஆற்றில் கரைப்பதற்கு முன்பு அகமதாபாத்தில் உள்ள இவரது அவேலியில் வைக்கப்பட்டது.[4]