நரேந்திர நாயக் | |
---|---|
![]() நரேந்திர நாயக் | |
பிறப்பு | பெப்ரவரி 5, 1951 மங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | பகுத்தறிவாளர், ஐயுறவுவாதி, எழுத்தாளர் |
வலைத்தளம் | |
Narendra Nayak's blog posts |
நரேந்திர நாயக் (Narendra Nayak) என்பவர் கர்நாடகத்தைச் சார்ந்த நன்கு அறியப்பட்ட பகுத்தறிவாளர், ஐயுறவியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர்.[1] நாயக் இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவையின் தற்போதைய தலைவராக உள்ளார். இவர் 1976 இல் தட்சிண கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியத்தை நிறுவி அதன் செயலாளராக இருந்து வருகிறார்.[1] இவர் 2011 சூலையில் எய்டு வித்தவுட் ரிலீஜயன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நிறுவினார்.[2] இவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான பட்டறைகளை நடத்துகிறார். அற்புதங்களையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டுள்ளார். ஆத்திரேலியா, கிரேக்கம், இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் 2000க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்சிகளையும் இவர் நடத்தியுள்ளார்.[3] இவருக்கு கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், உள்ளிட்ட 9 மொழிகள் சரளமாக உரையாடத் தெரியும். இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே உரையாட இவருக்கு உதவியாக உள்ளது.
சுவாமி விவேகானந்தரின் நினைவாக இவருக்கு நரேந்திர நாயக் என்று பெயரிடப்பட்டது. மங்களூருவில் வழக்கறிஞர் ஆஷா நாயக் என்பவரை சமயமறுப்பு முறையில் திருமணம் செய்து கொண்டார். 1978 இல் நாயக் மங்களூரில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் உயிர் வேதியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.[4][5] 1982 இல், இவர் கேரளத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் பசவ பிரேமானந்த்தைச் சந்தித்த பிறகு அவரால் தாக்கம் பெற்றார்.[6]
2004 ஆம் ஆண்டு கருநாடகத்தின், குல்பர்காவில் ஒரு பெண் பலியிடப்பட்டதைக் கேள்விப்பட்ட நாயக், முழுநேரமாக மூடநம்பிக்கை எதிர்ப்புப் பணிகளில் ஈடுபட முடிவு செய்தார்.[3] உயிர் வேதியியலில் உதவிப் பேராசிரியராக இருந்த இவர், 28 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு,[4][5] 25 நவம்பர் 2006 அன்று விருப்ப ஓய்வு பெற்றார்.[1]
2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு, வரவிருக்கும் தேர்தல்கள் குறித்த 25 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்குமாறு நாயக் அனைத்து ஜோசிக்காரர்களுக்கும் பகிரங்க சவால் விடுத்தார். அதற்கான பரிசு என ரூ 1,000,000[7] ஐ நிர்ணயித்தார். ஏறக்குறைய 450 பதில்கள் இவருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டன. ஆனால் அதில் எதுவுமே சரியானதாகக் கண்டறியப்படவில்லை.[8][9] இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை இத்தகைய சவால்களை 1991 முதல் நடத்தி வருகிறது.[10] மே 2013 கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, இத்தகைய சவால் ஒருதலைப்பட்சமாக இருந்ததால் ஏமாற்றமடைந்த நாயக், இந்த முறை ஜோதிடர்களுக்கு சவால் விடும் யோசனைக்கு எதிராக இருக்க முடிவு செய்தார். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த ஜோதிடர் ஷங்கர் ஹெக்டே தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பதாகக் கூறியதால் அது இவருக்கு ஒரு சவாலாக ஆனது. 20 முடிவுகளில் 19 முடிவுகள் சரியென நிரூபிக்கப்பட்டால், ரூ.10 லட்சம் காசோலையை (வருமான வரிச் சட்டத்தின் கீழ் பொருந்தக்கூடிய வரிகளைக் கழித்த பிறகு) வழங்க நாயக் முன்வந்தார்.[11] ஆனால், பின்னர் ஜோதிடர் ஹெக்டே போட்டிக்கு வரவில்லை.
இவர் நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக்காட்சி நிகழ்ச்சியான இது உண்மையா?[12] என்ற நிகழ்ச்சி, டிஸ்கவரி தொலைக்காட்சி போன்றவற்றில் தோன்றினார்.[6] மங்களூர் டுடே என்ற நாளிதழின் தொடக்கத்திலிருந்தே இவர் வழக்கமாக கட்டுரைகளை எழுதி வருகிறார்.[5] ஃபோக்ஸ் இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார்.[13]
இவர் தனது செயல்பாட்டிற்காக சில முறை தாக்கப்பட்டதாகக் கூறுகிறார்.[14] ஒரு ஜோதிடர் இவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படும் என்று முன்னறிவித்த பிறகு, இவரது குதியுந்தின் (ஸ்கூட்டர்) நிருத்திய கிராமம் (பிரேக்) கம்பிகள் துண்டிக்கப்பட்டதை ஒருமுறை கண்டுபிடித்ததாகவும் கூறினார்.[8] இவர் கௌரி லங்கேசு, எம். எம். கல்புர்கி, நரேந்திர தபோல்கர் ஆகியோருடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அந்த மூவரும் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் மேலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான முறையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[15]
2017 மார்ச்சில், நரேந்திர நாயக்கைக் கொல்ல முயற்சி நடந்தது. அதிகாலையில், மங்கள நீச்சல் குளத்திற்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்த போது, தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், டயர்கள் பஞ்சராகி இருப்பதை சைகையில் கூறினர். குழப்பமடையாத நாயக் அவர்களின் கூற்றை சந்தேகித்தார். மேலும் அருகிலுள்ள எரிவாயு நிலையத்திற்குச் சென்று பார்த்தால், எல்லாம் ஒழுங்காக இருப்பதை உணர்ந்தார். உடனே காவல் துறையில் புகார் கொடுத்தார். இந்த நிகழ்வுக்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் விநாயக் பாலிகாவின் நீதிக்கான தனது போராட்டத்தின் எதிரொலியாக இந்த கொலை முயற்சி இருக்கலாம் என்று நாயக் சந்தேகித்தார். அப்போது நாயக்கின் தனிப்பட்ட துப்பாக்கிதாரி விடுமுறையில் சென்றிருந்தார். இன்றுவரை மங்களூர் காவல்துறையினரால் அனுப்பப்பட்ட துப்பாக்கிதாரி நாயக்கிடம் உள்ளார்.[16]
2021, மார்ச், 17-20, அன்று நடைபெற்ற அறிவியல் சிந்தனை மற்றும் செயல் குறித்த முதல் உலகளாவிய பேராயத்தில் நரேந்திர் உரையாற்றினார். மாற்று மருத்துவம் குறித்த மூன்றாம் அமர்வின் போது, ஓமியோபதி உட்பட இந்தியாவில் மாற்று மருந்துகளின் பரவலான பயன்பாடு குறித்து பேசினார். சிகிச்சைகள் பெரும்பாலும் இந்திய மரபிலானவை என்று கூறப்படுகின்றன. இந்தியாவில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவதைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, "அவை தடை செய்யப்பட வேண்டும்" என்று திட்டவட்டமாக கூறினார்.[17][18]
நன்கு அறியப்பட்ட அறிவியலாளர்கள், போலி அறிவியலுக்கு எதிராக அழுத்தக் குழுக்களை உருவாக்கி, அதில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்.[19] இந்திய நாடாளுமன்றத்தில் அரசையும் சமயத்தையும் பிரிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தவேண்டும் என்று இவர் வலியுறுத்துகிறார்.[20][21] மகாராட்டிர மாநிலத்தில் இயற்றபட்ட மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டத்தைப் போன்று, கருநாடகத்தில் இதே போன்ற சட்டம் தேவை என்று நாயக் கூறுகிறார்.[22]
...said Narendra Nayak, national president of the FIRA. "There was a similar offer in 2009 too, but no astrologer came even five percent near to accuracy. There were some counter challenges also but, they withdrew at the last minute proving that astrology can not predict election results," he said.