நளகுவாரன் | |
---|---|
கிருஷ்ணர் நளகுவாரரையும் மணிபத்திரரையும் அவர்களின் சாபத்திலிருந்து விடுவிக்கிறார். | |
வேறு பெயர்கள் | நளகுபேரன், குபேரபுத்ரன், குபேரபுத்ரன், மயூரிராஜா, காமயக்கன்[1] |
வகை | தேவர்கள், இயக்கர் |
இடம் | அலாக்காபுரி |
மந்திரம் | ஓம் குபேரபுத்ர கம்யுக்ஷஹா நளகுபேர நம |
ஆயுதம் | வில் மற்றும் அம்பு |
துணை | அரம்பை, சோமபிரபா |
சகோதரன்/சகோதரி | மணிபத்ரன் |
நளகுவாரன், (Nalakuvara) நளகுபாரன் ( சமக்கிருதம்: नलकूबर ), என்றும் அழைக்கப்படும் இவர் இயக்கர்களின் மன்னன் குபேரனின் மகனான மணிக்ரீவனின் ( மணிபத்ரன் என்றும் அழைக்கப்படுபவன்) சகோதரனாகவும், அரம்பா மற்றும் இரத்னமாலாவின் கணவராகவும் இந்து மற்றும் பௌத்த புராணங்களில் தோன்றுகிறார். இந்து மற்றும் பௌத்த இலக்கியங்களில் நளகுவரன் ஒரு பாலியல் தந்திர உருவமாக அடிக்கடி தோன்றுகிறார்.
பல்வேறு சமசுகிருத மற்றும் பிராகிருத நூல்கள் குபேரனின் மகனை விவரிக்க "நளகுவாரன்", "நளகுவலன்", "மயூராஜா", "நரகுவேரன்" மற்றும் "நடகுவேரன்" ஆகிய பெயர்களை குறிப்பிடுகின்றன. சீன நூல்களில் "நஜா" என்றும், பின்னர் " நெஜா " என்றும் தோன்றுகிறார். இது "நளகுவாரன்" என்ற வார்த்தையின் சுருக்கமான ஒலிபெயர்ப்பாகும். [2]
வால்மீகியின் இராமாயணத்தில், நளகுவாரனின் முதல் மனைவி அரம்பை, இவரது மாமா இராவணனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். இதனால், நளகுவாரன் இராவணனை தன் அன்பைப் பகிர்ந்து கொள்ளாத வரை, அவனால் இன்னொரு இளமைப் பெண்ணை அணுக முடியாது என்று சபிக்கிறான்; காமத்துடன் அணுகினாலோ, தன்னைக் காதலிக்காத எந்தப் பெண்ணுடனும் அவன் வன்முறையில் ஈடுபட்டாலோ, அவனுடைய தலை ஏழு துண்டுகளாகப் பிளந்துவிடும் என்று சபிக்கிறான். [3] இந்த சாபம் இராவணனால் கடத்தப்பட்ட இராமனின் மனைவி சீதையின் கற்பைக் காத்தது. [4] [5]
பாகவத புராணத்தில், நளகுவாரனும், அவனது சகோதரன் மணிக்ரீவனும், நாரத முனிவரால் மரமாகும்படி சபிக்கப்பட்டனர். [6] அவர்கள் பின்னர் பால கிருஷ்ணனால் (கிருட்டிணனின் குழந்தைப் பருவம்) விடுவிக்கப்பட்டனர்.
நளகுவாரனும் மணிபத்ரனும் நிர்வாணமாக, கங்கையில், அரம்பையர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, நாரதர் விஷ்ணுவை தரிசனம் செய்துவிட்டு அவ்வழியே சென்றார். நாரதரைக் கண்டவுடன், கன்னிகள் தங்கள் உடலை மூடிக்கொண்டனர். அதே நேரத்தில் நளகுவாரனும் மணிபத்ரனும் நாரதரைக் கவனிக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்தனர். மேலும் ஆடையின்றி இருந்தனர். சகோதரர்கள் தங்கள் தவறை உணர உதவுவதற்காக, நாரதர் அவர்களை இரண்டு மருத மரங்களாக சபித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர்கள் கிருஷ்ணரைச் சந்திக்கும் போது சாபத்திலிருந்து தங்களை விடுபடலாம் என்றும் நாரதர் கூறுகிறார். மற்ற கணக்குகளில், சகோதரர்களிடம் கண்ணியம் மற்றும் மரியாதை இல்லாததால் நாரதர் மிகவும் கோபமடைந்து இவர்களை மரங்களாக சபித்தார் என்றும் கூறப்படுகிறது. சகோதரர்கள் இருவரும் நாரதரிடம் முறையிட்ட பிறகு, கிருஷ்ணர் இவர்களைத் தொட்டால் விமோசனம் அடையலாம் என்று சாப விமோசனம் அளித்தார். [7] [8]
பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் இருந்தபோது, அவர் மண் சாப்பிடுவதைத் தடுக்க அவரது வளர்ப்புத் தாய் யசோதை அவரை ஒரு உரலில் கட்டிவிடுகிறார். கிருஷ்ணன் உரலை தரையில் இழுத்து நளகுவாரன் மற்றும் மணிக்ரீவனாக இருந்த இரண்டு மரங்களுக்கு இடையே கட்டி இழுத்தான். கிருஷ்ணனின் தொடுதலால் இவர்களுக்கு பழைய உருவம் திரும்பக் கிடைத்தது. பின்னர் சகோதரர்கள் கிருஷ்ணரை வணங்கி, தங்கள் முந்தைய தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு, புறப்படுகின்றனர். [9]
காகத்தி சாதகக் கதையில், நளகுவாரன் (இங்கே நாகுவேரா), பெனாரசு (வாரணாசி) மன்னரின் அரசவை இசைக்கலைஞராகத் தோன்றுகிறார். மன்னரின் மனைவி காகத்தி ராணி கருட மன்னனால் கடத்தப்பட்ட பிறகு, பெனாரசு மன்னர் நாகுவேராவை அவளைத் தேட அனுப்புகிறார். கருட மன்னனின் இறகுகளுக்குள் நாகுவேரா ஒளிந்து கொள்கிறார். அவர் நாகுவேரை தனது கூட்டிற்கு கொண்டு செல்கிறார். அவர் வந்தவுடன், ராணி காகத்தியுடன் நாகுவேரா பாலியல் உறவில் ஈடுபடுகிறார். அதன்பிறகு, நாகுவேரா கருடனின் இறக்கையின் உதவியுடன் பெனாரசுக்குத் திரும்பினார். மேலும் காகத்தியுடன் தனது அனுபவங்களைக் கூறும் ஒரு பாடலை இயற்றினார். கருடன் பாடலைக் கேட்டதும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காகத்தியை அவளது கணவனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். [10]
தாந்திரீக வல்லுநர்கள் நளகுவாரனை குபேரனின் இயக்கர்களின் சேனாதிபதியாக அழைத்தனர். இவர் "பெரிய மயில்-ராணி மந்திரம்" என்ற தாந்த்ரீக உரையில் தோன்றுகிறார். இது அவரை ஒரு வீர இயக்கத் தளபதியாக சித்தரிக்கிறது. மேலும், பாம்புக்கடிகளை குணப்படுத்துவதற்கான ஒரு வழியாக நளகுவாரனின் பெயரைக் குறிப்பிடுகிறது. "பெரிய மயில்-ராணி மந்திரத்தின்" சில பதிப்புகள் (மகாமயூரிவித்யாராக்னி மற்றும் "அமோக-பாசா" ஆகியவை இவருக்கு "பெரிய இயக்கத் தளபதி" [11] என்ற பட்டத்தை வழங்குகின்றன. மேலும் "யக்ச நர்தகப்பரின் தந்திரம்," மற்றும் "பெரிய யக்ச தளபதி நாடகபராவின் தாந்த்ரீக சடங்குகள்." [12] என்ற இரண்டு தாந்த்ரீக நூல்களிலும் தோன்றுகிறார்:
நளகுவாரன் புத்த நூல்கள் மூலம் சீனாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு இவர் நெஜா (முன்னர் நஜா என்று அறியப்பட்டார்) என்று அறியப்பட்டார். சீன புராணங்களில், நெஜா டவர் கிங்கின் மூன்றாவது மகன், எனவே பலர் நெஜாவை மூன்றாவது இளவரசர் என்றும் அழைக்கிறார்கள். நெஜா "மத்திய பலிபீடத்தின் படைத்தளபதி" என்றும் அழைக்கப்படுகிறார்.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான தலைவராக உள்ள மீர் சகரின் கூற்றுப்படி, "நெஜா" என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல், "நளகுவார" என்ற சமசுகிருதப் பெயரின் சுருக்கப்பட்ட (மற்றும் சிறிது சிதைந்த) படியெடுத்தல் என்பதைக் காட்டுகிறது. [13] நெஜாவைச் சுற்றியுள்ள புராணக்கதைகள் நளகுவாரன் மற்றும் குழந்தைக் கடவுளான கிருஷ்ணப் (பால கிருஷ்ணன்) புராணங்களின் கலவையாகும் என்று சகர் பரிந்துரைத்துள்ளார்.
நெஜா ஜப்பானில் நன்கு அறியப்பட்ட தாவோயிய தெய்வம். ஜப்பானியர்கள் நெஜாவை நடகு அல்லது நாடா என்று குறிப்பிடுகின்றனர், இது மேற்கு நோக்கிய பயணத்தின் வாசிப்புகளில் இருந்து வந்தது.