பிறப்பு | 18 ஆகத்து 1954 கல்லூர், திருச்சூர், இந்தியா |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | விபச்சாரி பாலியல் தொழிலாளி செயற்பாட்டாளர் எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாலியல் தொழிலாளியின் சுயசரித(2005) ஒரு பாலியல் தொழிலாளியின் காதல் சந்திப்புகள் (2018) |
நளினி ஜமீலா (Nalini Jameela) என்பவர் (பிறப்பு 18 ஆகஸ்ட் 1954) இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தக எழுத்தாளர், [1] பாலியல் தொழிலாளர் நல ஆர்வலர் மற்றும் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த முன்னாள் பால்வினைத் தொழிலாளி ஆவார். இவர் ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை (2005) மற்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் காதல் சந்திப்புகள் (2018) ஆகிய புத்தகங்களின் ஆசிரியர் ஆவார். இவர் கேரள பாலியல் தொழிலாளர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.[2] இவர் அரசு சாரா அமைப்புக்கள் பலவற்றில் உறுப்பினராகவும் உள்ளார்.[3]
நளினி ஜமீலா 18 ஆகஸ்ட் 1954 அன்று இந்தியாவின் திருச்சூரில் உள்ள கல்லூர் கிராமத்தில் பிறந்தார்.
இவர் தனது ஏழாவது வயதில் 3ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பை நிறுத்தி வெளியேறினார்.[1] பின்னர் 1990களில் கல்லூர் அரசுப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார், இறுதியில் 12ஆம் வகுப்பை அடைந்தார்.[4]
விவசாயத் தொழிலாளியான ஜமீலாவின்[5] 24 வயதில் இவருடைய கணவர் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார். [6] இதனால் இவரது இரண்டு இளம் குழந்தைகளை வளர்க்க வாழ்வாதாரம் இல்லாமல் போனது.[7] இச்சூழலில் பாலியல் தொழிலாளியான ரோச்சேரியின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.[6] ரோச்சேரி தனது வாடிக்கையாளரான மூத்த காவல்துறை அதிகாரியை ஜமீலாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் ஜமீலாவுக்கு ஏராளமான அரசியல்வாதிகள் சந்திப்பு ஏற்பட்டது. இச்சந்திப்புகள் திருச்சூரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இச்சூழலில் ஒரு நாள் காலையில் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறும்போது, இவரை காவல்துறையினர் கைது செய்து தாக்கினார்கள்.[7]
2001 ஆம் ஆண்டில் இவர் கேரளாவின் பாலியல் தொழிலாளர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக ஆனார்.[4] இவரது தலைமையின் கீழ் பாலியல் தொழிலாளர்களின் அவலநிலைக்குக் கவனத்தை ஈர்க்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.[8]
ஜமீலா, அரசு சாரா அமைப்புகள் ஐந்தில் உறுப்பினராக உள்ளார்.[3] பெங்களூரில் நடந்த எய்ட்ஸ் ஆலோசனை திட்டத்தின் நான்காவது கூட்டத்தில், இவர் ஆணுறைகளை விநியோகிப்பது மட்டுமல்லாமல், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை வழங்க அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.[9]
2005ஆம் ஆண்டில் ஜமீலா சுயசரிதை புத்தகமான ஒரு இலிமிககாதொழிலியூதே ஆத்மகாதா (ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை) பாலியல் தொழிலாளி ஆர்வலர் ஐ. கோபிநாத்தின் உதவியுடன் எழுதினார்.[1] இப்புத்தகம் 13,000 பிரதிகளுக்கு மேல் விற்றது. வெளியான 100 நாட்களுக்குள் ஆறு பதிப்புகள் இடப்பட்டன.[10] மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் 2007இல் ஜே. தேவிகாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர், அடுத்த ஆண்டில் பிரஞ்சு மொழியில் சோஃபி பாஸ்டைட்-ஃபோல்ட்ஸ் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த புத்தகம் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கியது.[9] கேரளாவில் பல விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.[3] இந்த புத்தகத்திற்குப் பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த புத்தகம் பாலியல் தொழிலை மகிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த விடயத்தை விளம்பரப்படுத்தக்கூடாது என்றும் பழமை வாதிகள் கருத்துரைத்தனர்.[1]
2018இல் ஜமீலாவின் இரண்டாவது புத்தகம் ஒரு பாலியல் தொழிலாளியின் காதல் சந்திப்புகள்[11] வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் ரேஷ்மா பரத்வாஜால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.[5] மேலும் குஜராத்தி, வங்காள மொழி,மற்றும் தமிழ் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[3] இந்தப் புத்தகத்தில் 1970களிலிருந்து 2000 வரை தனது வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட உறவுகள் குறித்த எட்டு கதைகளுடன் தொகுத்து நாவலாக உருவாக்கியுள்ளார்.[8][10]
பிரபல திரைப்பட இயக்குநர் சந்தோஷ் சிவனின் இளைய சகோதரர் சஞ்சீவ் சிவன், 2013ல் ஜமீலாவின் வாழ்க்கை குறித்து 28 நிமிடசெக்ஸ், லைஸ் அண்ட் எ புக் என்ற ஆவணப்படத்தைத் தயாரித்தார். இந்த ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் பொதுச் சேவை ஒளிபரப்பு அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. இதில் ஜமீலா தோன்றினார்.[3]