நவ்ரங் லால் திப்ரேவால் (Navrang Lal Tibrewal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியும் இராசத்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார். [1] 1937 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் நாள் இராசத்தான் மாநிலத்திலுள்ள சுன்சுனூ மாவட்டத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் லடு ராம் திபர்வால் என்பதாகும்.. [2] இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். [3] தனது ஆரம்பக் கல்வியை சுன்சுனூவில் முடித்தார், செய்ப்பூர் மகாராசா கல்லூரியில் பட்டம் பெற்றார்,. 1959 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார். மூத்த வழக்கறிஞராக 6 மாதங்கள் பயிற்சி முடித்த பிறகு, திப்ரேவால் சுன்சுனூ மாவட்டம் மற்றும் துணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். மேலும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 1965 ஆம் ஆண்டில் சோத்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாறினார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டில் செய்ப்பூர் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட பிறகு செய்ப்பூருக்கு மாறினார். 1982 ஆம் ஆண்டில் இராசத்தான் வழக்கறிஞர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதி எம்.பி சிங் ஓய்வு பெற்ற பிறகு ஏப்ரல் 10 அன்று அதன் செயல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். [4] சட்ட உதவி சேவை வாரியத்தின் தலைவராக 6 ஆண்டுகள் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ஆனார். 1998 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று தர்பரா சிங்கிற்குப் பதிலாக இராசத்தான் மாநிலத்தின் தற்காலிக ஆளுநரானார் [5] தற்போது செய்ப்பூரில் 1 நிறுவனத்திலும் சுன்சுனூவில் 3 கல்வி நிறுவனங்களிலும் தலைவராக உள்ளார்.