கிராண்திவர் நாக்நாத் அண்ணா என்று பிரபலமாக அறியப்பட்ட நாக்நாத் நாயக்வாடி(Nagnath Naikwadi) (1922–2012) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலரும், சமூக சேவகரும், அரசியல்வாதியும் மற்றும் கல்வியாளருமாவா. மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது புரட்சிகர செயல்பாட்டிற்கு பெயர் பெற்றவருமாவார். [1] வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இவர் நானா பாட்டீலின் கூட்டாளியாக இருந்தார். மேலும் இவர்கள் ஒன்றாக மகாராட்டிராவின் சதாரா-சாங்லி பகுதியில் ஒரு இணையான அரசாங்கமான பிரதி சர்க்காரை நிறுவி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். [2] இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட இவர், சாங்லியை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [3] இந்திய சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது. [4]
நாயக்வாடி 1922 சூலை அன்று மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள புனேவின் சாங்குலி மாவட்டத்தின் அருகே உள்ள வால்வா என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் இராமச்சந்திர கணபதி நக்வாடி மற்றும் லக்ஷ்மிபாயிக்கு பிறந்தார். [5] வால்வா மற்றும் அஷ்டா உள்ளூர் பள்ளிகளில் ஆரம்ப பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் படிப்புகளில் இடைவெளி ஏற்பட்டாலும், கோலாப்பூரின் இராசாராம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1948 இல் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். பின்னர் உயர் படிப்புகளுக்காக இராசாராம் கல்லூரியில் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில், இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டார். சுதந்திர செயற்பாட்டாளர்களின் மன்றமான இராட்டிர சேவா தளத்தில் சேர்ந்தார், இது இவருக்கு நானா பாட்டீலின் கூட்டாளியாக வாய்ப்பு கிடைத்தது. [6] 1940 களின் முற்பகுதியில், இவரும் இவரது சகாக்களும் பிரித்தன் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை மேற்கொண்டனர். மேலும், அதிகாரிகளுடன் சண்டையில் ஈடுபட்டனர். இயக்கத்திற்கு நிதித்தேவையின் பொருட்டு, இவரது குழு துலே என்ற இடத்திலுள்ள கருவூலத்தை கைப்பற்றினர். ஐதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். [3] பிரித்தானிய் காவலர்களுடனான ஒரு போரில், இவர் குண்டடிபட்டு காயமடைந்தார். பின்னர் இவர் சதாரா சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து இவர் சக ஊழியர்களுடன் சேர்ந்து ஒரு சிறைச்சாலையை உடைத்து தப்பித்தார். பிரித்தன் அரசாங்கம் இவரது தலைக்கு ஒரு வெகுமதியை அறிவித்தது. ஆனால் நாயக்வாடி நான்கு ஆண்டுகள் தலைமறைவாகவே இருந்தார். [2] 1943 ஆம் ஆண்டில், நானா பாட்டீல், கிசான்ராவ் அகிர் மற்றும் இன்னும் சிலருடன், இவர் ஒரு இணையான அரசாங்கத்தை அறிவித்தார், பிரதி சர்க்கார், இது மேற்கு மகாராட்டிரா பிராந்தியத்தில் சுமார் 150 கிராமங்களில் செயல்பட்டு வந்தது. இதில் சதாரா மற்றும் சாங்கலி ஆகிய ஊர்களும் அடங்கும்.
1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாயக்வாடி தனது கவனத்தை சமூகப் பணிகளுக்கு மாற்றினார். இவர் கல்வியியல் கல்லூரி, மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களை நிறுவினார். [7] [8] 1950 ஆம் ஆண்டில், குசூம் என்பவருடான இவரது திருமணத்திற்குப் பிறகு, செட்டாமசூர் கட்கரி செட்டகரி சங்கதான சீர்திருத்தவாதிகளுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் சன்யுக்தா மகாராட்டிரா இயக்கத்திலும் ஈடுபட்டார். 1957 இல் தேர்தல் அரசியலில் நுழைந்த இவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகரமாக போட்டியிட்டு 1962 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [5] சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் முடிந்ததும், இவர் தனது சமூகப் பணிகளுக்குத் திரும்பி, ஜிஜாமாதா வித்யாலயா மற்றும் சாவித்ரிபாய் பூலே பெண்கள் விடுதி ஆகியவற்றை நிறுவினார். இவரது வாழ்க்கையின் அடுத்த இரண்டு தசாப்தங்கள் கூட்டுறவு இயக்கம் மற்றும் கரும்பு விவசாயத்துடன் தொடர்புடையது, இது 1972 இல் கிசான் லிஃப்ட் பாசனத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கி 1984 இல் கூட்டத்மா கிசான் அகிர் சகாகரி சகார் கர்கானாவை நிறுவுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இடையில், அவர் மற்றொரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்; [3] பின்னர் 2004 மக்களவைத் தேர்தலில் இவர் மீண்டும் தோற்றார். [9] லாத்தூர் பூகம்ப நிவாரணப் பணிகளிலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பானி பரிசத் அமைப்பதிலும் ஈடுபட்டார்.