நாசா தலைமை விஞ்ஞானி (NASA Chief Scientist) என்பவர் அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அல்லது நாசாவில் பணிபுரியும் மிக மூத்த அறிவியல் அறிஞர் ஆவார். அறிவியல் பிரச்சினைகளிலும், தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்தினருக்கு இடையில் இடைமுகமாகவும் நாசா நிர்வாகத்திற்கு முதன்மை ஆலோசகராக இவர் பணியாற்றுகிறார். நாசாவின் ஆராய்ச்சி திட்டங்கள் நன்கு நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ரீதியானவை என்றும், இவற்றின் பயன்பாடுகள் நாசாவின் இலக்குகளுக்கு பொருத்தமானவையாகவே உள்ளன என்பதையும் இவரே உறுதிசெய்கிறார்.[1]
நாசாவின் நிதிநிலை அறிக்கையில் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், மூலோபாய இலக்குகளை நிர்ணயித்தல், நாசாவின் நடப்புத்திட்டங்களின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்காகவே தலைமை விஞ்ஞானி என்ற நிலை நாசாவில் உருவாக்கப்பட்டது. மூலோபாய முயற்சிகள் மற்றும் கள மையங்களில் நாசாவின் பிரதிநிதியாக தலைமை விஞ்ஞானி நெருக்கமாகப் பணிபுரிவார். இவைமட்டுமின்றி ஆலோசனைக்குழு, வெளிப்புற சமுகத் தொடர்பு ஆகியவற்றிலும் இவர் முக்கியப் பங்கு வகிப்பார். முகமையின் அறிவியல் நோக்கங்கள் மற்றும் பிற கூட்டாட்சி நிறுவனங்களின் சாதனைகள், தொழிற்சாலை, கல்வி, ஏனைய அரசாங்க நிறுவனங்கள், சர்வதேச சமூகம் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு நாசாவின் பிரதிநிதியாக தலைமை விஞ்ஞானி பிரதிபலிப்பார்.[1]
அறிவியல் துறைகளின் பார்வையில் நாசாவின் கொள்கைகள், நடைமுறைகள், மற்றும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கான நாசாவின் அறிவியல் மன்றத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் தலைமை விஞ்ஞானியாக இவர் பங்கேற்பார்.[2]
செப்டம்பர் 2005 இல் தலைமை விஞ்ஞானி நிலை தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து செயல்பாடுகளும் அறிவியல் திட்ட இயக்குனரகத்திற்கு மாற்றப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் தலைமை விஞ்ஞானி நிலை மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது.[3]