நாசா புவி அறிவியல் (NASA Earth Science) என்பது அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் ஓர் ஆராய்ச்சித் திட்டமாகும். முன்னதாக புவி அறிவியல் நிறுவனம் என்றும் புவிக் கோள் திட்டம் என்றும் இந்த ஆராய்ச்சித் திட்டம் அழைக்கப்பட்டது.[1] பூமியின் அமைப்பு பற்றிய அறிவியல் புரிதலையும், இயற்கை மற்றும் மனிதனால் மேற்கொள்ளப்படும் தூண்டல்களுக்கு பூமி வெளிப்படுத்தும் எதிர்வினைகளையும் இத்திட்டம் ஆய்வு செய்கிறது. இதனால் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான காலநிலை, வானிலை மற்றும் இயற்கை ஆபத்துகள் பற்றிய மேம்பட்ட கணிப்பை செயல்படுத்த முடியும்.[2] 2006 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்நிறுவனத்தின் இயக்குநராக மைக்கேல் ஃப்ரீலிச் செயல்பட்டார்.
புவி அறிவியலில் ஆராய்ச்சியை நாசா நிறுவனம் ஆதரிக்கிறது. பூமி கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, காலநிலை, வளிமண்டல வேதியியல், கடல் மற்றும் நில சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையை கண்காணிக்க பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை ஏவி பராமரிக்கிறது. புதைபடிவ எரிபொருட்களை மனிதர்கள் எரிப்பதன் மூலம் உமிழப்படும் பைங்குடில் வாயுக்களால் புவி வெப்பமடைகிறது என்ற அபாயத்தைக் குறித்து முதலில் உலகை எச்சரித்த டாக்டர் யேம்சு ஏன்சன் என்பவர் நாசாவின் புவி அறிவியல் விஞ்ஞானியாவார்.
புவி அறிவியல் ஆராய்ச்சித் திட்டம், நாசா வானுயிரியல் நிறுவனத்தின் மூலம் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை தேடுவதற்கான புரிதலின் அடித்தளத்தையும் வழங்குகிறது, குறிப்பாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கான அதிகபட்ச சாத்திய நிலைமைகளை ஆராய்வதற்கு பெரும்பாலும் இத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.[3]