நாதாலி ஏ. காபிரோல் (Nathalie A. Cabrol) (பிரெஞ்சு உச்சரிப்பு: [natali kabʁɔl] (ⓘ)) ஒரு பிரெஞ்சு அமெரிக்க வானுயிரியலாளர் ஆவார். 1963 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இவர் கோள் அறிவியலில் சிறப்பு வல்லுனர் ஆவார். இவர் செவ்வாயின் தொன்மையான ஏரிகளை ஆய்வு செய்கிறார். இவர் உயர் ஏரித் திட்டத்தின் கீழ் சிலியின் நடுவண் ஆண்டெசு மலையில் மீக் குத்துயரத் தேட்டங்களில் முதன்மை ஆய்வளராக ஈடுபடுகிறார். இத்திட்டம் நாசாவின் வானுயிரியல் நிறுவனத் திட்டமாகும் அங்கு இவரும் இவரது குழுவும் அறுதிநிலைச் சூழல்களில் உயிரினங்களின் தகவமைப்பை ஆவணப்படுத்துகிறார் விரைவான காலநிலை மாற்றம் ஏரிச் சூழல் அமைப்புகளிலும் வாழிடங்களிலும் ஏற்படுத்தும் விளைவுகளையும் புவிஉயிரியல் பதிவுகளையும் கோள் தேட்டக் கண்ணோட்டத்தில் ஆய்கிறார்.
கப்ரோல் பிரான்சின் பாரிசு நகரத்திற்கு அருகே பிறந்தார். நான்டெர்ரே பல்கலைக்கழகம் மற்றும் சோர்போன் (முதுகலை பட்டம்; முனைவர்., 1991) பல்கலைக்கழகங்களில் பயின்றார். 1986 ஆம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தில் உள்ள குசேவ் பள்ளத்தை விரிவாக ஆய்வு செய்த முதல் நபர் என்ற சிறப்புக்கு உரியவரானார். சோவியத் அறிவியல் அகாடமியின் வலேரி பார்சுகோவின் ஆர்வத்தையும் பாராட்டையும் இவர் ஈர்த்தார். அவர் மாசுகோவிற்கு விரிவுரை வழங்க இவரை அழைத்தார்.[2]