நான்காம் சேனன் என்பவன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களில் ஒருவன். முன்னர் பகுதி ஒன்றின் ஆளுனனாகவும், மூன்றாம் உதயன் காலத்தில் துணை அரசனாகவும் நியமிக்கப்பட்ட இவன், மூன்றாம் உதயனுக்குப் பின்னர் அரசனாகி, கி.பி. 954 தொடக்கம் கி.பி. 956 வரை ஆட்சியில் இருந்தான்.
இவன் ஒரு மதிநுட்பம் வாய்ந்த அரசன் என்றும், சிறந்த கல்விமானாக இருந்ததுடன், செயல்வீரனாக இருந்ததாகவும், நண்பர்களையும் எதிரிகளையும் அளவோடு நடத்தினான் என்றும், இவன் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. புத்தரின் தந்ததாது வைத்துள்ள பேழையை இரத்தினங்களால் அழகூட்டுவித்தான் என்றும், தந்ததாதுவுக்கு நான்கு விகாரைகளிலும் விழா எடுப்பித்தான் என்றும் தெரிகிறது. முன்னர் அவன் வாழ்ந்துவந்த சித்தகமை என்னும் இடத்தில் பிரிவேனா ஒன்றையும் கட்டினான்.[1] இவன் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க குழப்பங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
குறுகிய காலமே ஆட்சியில் இருந்த நான்காம் சேனன், தனது மூன்றாவது ஆட்சியாண்டில் காலமானான். இவனைத் தொடர்ந்து துணை அரசானாக இருந்த நான்காம் மகிந்தன் அரசனானான்.[2]