நான்காம் தப்புலன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னர்களுள் ஒருவன். இவனது தந்தையான ஐந்தாம் கசபன் இறந்த பின்னர் இவன் அரசனானான். கி.பி. 923 இல் அரியணை ஏறிய இவன் கி.பி. 924 வரை குறுகிய காலமே பதவியில் இருந்தான். இவன் ஆட்சியில் இருந்தபோது மிரிசவெட்டி விகாரைக்கு ஒரு ஊரைக் கொடையாகக் கொடுத்தான். பொதுவாக இவன் முன்னோர்களைப் பின்பற்றியே ஆட்சி நடத்தினான். முன்னர் செய்த பாவங்களினால் நீண்டகாலம் இவ்வுலக வாழ்க்கையை அவனால் அனுபவிக்க முடியவில்லை எனக்கூறும் மகாவம்சம்[1] இப்பாவங்கள் குறித்த விபரங்களைத் தரவில்லை.
ஏழு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த நான்காம் தப்புலன் காலமான பின்னர் அதே பெயர் கொண்டவனும், துணை அரசனாக இருந்தவனுமான ஐந்தாம் திப்புலன் அரசனானான்.