நாபிசு சாதிக்கு (Nafis Sadik) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த மகளிர் மருத்துவராவார். 1929 ஆம் ஆன்டு இவர் பிறந்தார். ஆசியாவில் எச்.ஐ.வி/எய்ட்சு சிறப்பு தூதுவராக கூடுதல் பொறுப்புகளுடன் ஐ.நா பொதுச் செயலாளரின் சிறப்பு ஆலோசகராகவும், 1987 ஆம் ஆன்டு முதல் 2000 ஆம் ஆன்டு வரை வரை ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வேலையில் இருந்து நாபிசு ஓய்வு பெற்றார். [1] [2] [3] [4]
ஐக்கிய நாடுகள் சபையில் சேருவதற்கு முன்பு, மருத்துவர் நாபிசு பாக்கித்தான் மத்திய குட்டும்பக் கட்டுப்பாடு திட்டமிடல் குழுவின் பொது இயக்குநராக இருந்தார். 1966 ஆம் ஆண்டு திட்டமிடல் மற்றும் பயிற்சி இயக்குநராக இம்மன்றத்தில் நாபிசு சேர்ந்தார். 1968 ஆம் ஆண்டு துணை பொது இயக்குநராகவும் 1970 ஆம் ஆன்டு பொது இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, 1964 ஆம் ஆண்டில், மருத்துவர் நாபிசு சாதிக் அரசாங்கத்தின் திட்டமிடல் ஆணையத்தின் சுகாதாரப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாபிசு பல்வேறு பாக்கித்தான் ஆயுதப்படை மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். [3]
ஐநா பொதுச் செயலாளரின் சிறப்பு ஆலோசகரும், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் எச்.ஐ.வி/எய்ட்சுக்கான சிறப்புத் தூதருமான மருத்துவர் நாபிசு சாதிக், 1971 ஆம் ஆண்டு ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தில் சேர்ந்தார். இங்கு நிர்வாக இயக்குனராக இருந்த மருத்துவர் ரஃபேல் சலாசு திடீர் மரணத்திற்குப் பிறகு, ஐநா செயலாளர் நாயகம் இயேவியர் பெரெசு டி கியூல்லர் நாபிசை அவருக்குப் பிறகு நியமித்தார். இதனால் 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய தன்னார்வத் திட்டங்களில் ஒன்றிற்கு தலைமை வகிக்கும் முதல் பெண்ணாக நாபிசு சிறப்பு பெற்றார். . [3]
பெண்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும், அபிவிருத்தி கொள்கையை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் பெண்களை நேரடியாக ஈடுபடுத்துவதிலும் நாபிசு சாதிக் தொடர்ந்து கவனம் செலுத்தினார். மூன்றாம் உலகம் மற்றும் வளரும் நாடுகளில் மக்கள் தொகைக் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு இது மிகவும் முக்கியமானது. இந்த நாடுகளில், பெண்களுக்கு கல்வி மற்றும் அவர்களின் சொந்த கருவுறுதலைக் கட்டுப்படுத்தும் கருவிகளை வழங்குவதற்கான அவரது வியத்தகு உத்தி உலகளாவிய பிறப்பு விகிதத்தை வியத்தகு முறையில் பாதித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் , ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், 1994 ஆம் ஆண்டு நாபிசு சாதிக்கை மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச மாநாட்டின் (ICPD) பொதுச் செயலாளராக நியமித்தார்.[4]
உலகளாவிய சமூகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாபிசு சாதிக்கின் பங்களிப்பு அவருக்கு பல சர்வதேச விருதுகளையும் கௌரவங்களையும் அளித்துள்ளது.
அவர் மனித மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், ஆசியப் பிரிவில் தெற்காசிய ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். நாபிசு சாதிக் 1994-1997 காலகட்டத்தில் பன்னாட்டு மேம்பாட்டு சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியிலிருந்து இவர் ஓய்வு பெற்ற பிறகு, உலக மக்கள்தொகைக்கான செருமன் அறக்கட்டளையின் ஆலோசகர் வாரியம் உட்பட மக்கள் தொகை கட்டுப்பாட்டு பகுதியில் பல இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் ஆலோசனை குழுக்களில் பணியாற்றியுள்ளார். நாபிசு சாதிக் மக்கள்தொகை செயல்பாட்டு பன்னாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ளார். [3]
பாக்கித்தான் நாட்டில் நாபிசு சாதிக் பிறந்தார் பிரித்தானிய இந்தியாவின் இயான்பூரில் இஃபாட் ஆரா மற்றும் முன்னாள் பாக்கித்தான் நிதியமைச்சரான முகம்மது சோயிப் தம்பதியருக்கு மகளாக இவர் பிறந்தார். . கராச்சியில் உள்ள டவ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். நாபிசு சாதிக் பாக்கித்தான் மத்திய குடும்பக் கட்டுப்பாடு மன்றத்தின் தலைமை இயக்குனராக இருந்தார். பாக்கித்தான் ஆயுதப்படை மருத்துவமனைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவுகளில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [3] பின்னர் அவர் மேரிலாந்தின் பால்டிமோர் நகர மருத்துவமனையில் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் பயிற்சியில் பணியாற்றினார் மற்றும் இயான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் தனது மேலதிக கல்வியை முடித்தார். [3] [4]
நாபிசு சாதிக் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு பகுதிகளில் பரவலாக நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.[4]