நாராயண பிள்ளை (Naraina Pillai) ஒரு சமூக முனைவோர் மற்றும் தொழிலதிபர் ஆவார், அவரது பெரும்பாலான வாழ்நாளைக் காலனித்துவ காலத்தின் பொழுது சிங்கப்பூரில் கழித்தார். அவர் சிங்கப்பூரிலுள்ள தமிழ் சமூகத்திற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தவர் ஆவார்.
1819க்கு முன்னதாக, நாராயண பிள்ளை பினாங்கில் பணியாற்றினார். அங்கு அப்பொழுது பிரித்தானிய ஆட்சி நடைபெற்றது. அப்பொழுது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் மூத்த அதிகாரியான இசுடாம்போர்டு இராபிள்சுவின் அறிமுகம் கிடைத்தது, அவர் மலாக்கா நீரிணையின் தென் கோடியில் ஒரு புதிய வணிகப் பகுதியை நிறுவ ஆர்வமாக இருந்தார். இதன் விளைவாக, 1819ல் நவீன சிங்கப்பூர் நிறுவப்பட்டது. பினாங்கில் இருந்த பிள்ளையை, ராஃபிள்ஸ் அவரது புதிய குடியேற்றத் திட்டத்தில் பணியில் சேர வற்புறுத்தினார்.[1]
1819ல் 'இந்தியானா' கப்பலில் பிள்ளை இராபிள்சுடன் சிங்கப்பூர் வந்தார். அதன் மூலம் சிங்கப்பூரில் கால்பதித்த முதல் தமிழனாக ஆனார். அவர் அரசு கருவூலத்தில் தலைமை கணக்காளராகப் பணிபுரிந்தார், அங்கே அவர் நாணயத்தின் நம்பக்த்தன்மையை உறுதிசெய்யும் பணியிலிலிருந்தார், எனினும், அவரது சொந்த முயற்சியின் காரணமாக விரைவில் வெற்றிகரமான தொழிலதிபராக மற்றும் சமூகத் தலைவராக உருவெடுத்தார்.
சிங்கப்பூர் நகரின் வளர்ச்சியை கவனித்தவர் பினாங்கிலிருந்து கொத்தனார், தச்சன், நெசவாளி ஆகியோரை கூட்டி வந்தார், தற்போது தஞ்சோங் பகாரிலுள்ள நகரின் முதல் செங்கல் உலையை அமைத்தார், இந்த முயற்சிகளின் விளைவாக நகரின் முதல் கட்டிட ஒப்பந்ததாரர்-ஆக உருவெடுட்த்தார்.
அவர் துணிந்து பருத்தி பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். 1822ல் ஏற்பட்ட தீ விபத்து அவரது வியாபாரத்தினை குலைத்து அவரை பெரிய கடன் சூழ்நிலைக்கு தள்ளியது, இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்தார்.
1827ல், தெற்கு பால சாலையில்('south bridge road') சிறீ மாரியம்மன் கோவில்-ஐ நிர்மாணித்தார்.[2], இது இன்று சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும்உள்ளது. பிரித்தானிய அரசு பிள்ளையை இந்திய மக்களின் தலைவராக நியமித்தது. இதன் மூலம் இந்திய மக்களிடையே ஏற்படும் சச்சரவுகளுக்கு தீர்வு வழங்கும் பொறுப்புகளை வழங்கியது.