நாஸ் பவுண்டேசன் (இந்தியா) அறக்கட்டளை (Naz Foundation (India) Trust) இந்தியாவில் செயல்படும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பாகும். இதன் நிறுவனர் அஞ்சலி கோபாலன் ஆவார். இந்த அமைப்பு எச்.ஐ.வி/எயிட்சு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மறுவாழ்விற்காகவும், மாறுபட்ட பாலீர்ப்பாளர்களின் உரிமைகளுக்காகவும் பணியாற்றி வருகிறது. இது புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
1994 ஆம் ஆண்டு இந்நிறுவனம் அஞ்சலி கோபாலனால் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகச் செயலாளராக அஞ்சலி கோபாலன் பொறுப்பு வகிக்கிறார்.[1] இந்தியாவில் எச்.ஐ.வி/எயிட்சு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு சார்பில் எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாததைக் கண்ட அஞ்சலி கோபாலன் இந்நிறுவனத்தை 1990 களின் தொடக்கத்தில் நிறுவினார். எச்.ஐ.வி பாதிப்புக்குட்படாமல் தவிர்ப்பதற்கான தடுப்புமுறைப் பயிற்சிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தகுந்த சிகிச்சைகளும் தரும் பணிகளில் இவ்வமைப்பு முனைப்புடன் செயற்படுகிறது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை சமுதாயத்தினர் இவ்வமைப்பின் பணிகளால் பலனடைகின்றனர். இந்த அமைப்பு இந்தியாவில் எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களுக்கு நல்லமுறையில் ஆதரவும் கவனிப்பும் அளித்து அவர்களின் நலனுக்காகப் போராடி வருகிறது.
நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் எச்.ஐ.வி/எயிட்சால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்காக பல செயற்பாடுகளை நாஸ் பவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. ஓர்பாலீர்ப்பாளர்களுக்கான செயற்திட்டங்கள்; பாலினம், எச்.ஐ.வி/எயிட்சு மற்றும் பாலின சுகாதாரம் குறித்து சகமாணவர்களுக்குப் பயிற்சியளிக்க மாணவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளித்தல்; எச்.ஐ.வி/எயிட்சு பாதிப்புடையோரைப் பராமரித்தல்; எச்.ஐ.வி/எயிட்சால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம்; புது தில்லியில் எச்.ஐ.வி/எயிட்சு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வெளிநோயாளிப் பிரிவு மருத்துவகம்; பாலினம், பாலீர்ப்பு மற்றும் பாலின சுகாதாரம் குறித்த செயற்பாடுகளில் பயிற்சியளித்தல், அறிவூட்டுதல், சமுதாயத்தினரையும் ஈடுபடுத்துதல்; அடிநிலையிலுள்ள வாய்ப்பற்ற பெண்குழந்தைகளுக்கு ஆதரவளித்தல் (GOAL program) போன்றவை இவ்வமைப்பின் செயற்பாடுகளில் அடங்கும்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் (MSM) மற்றும் திருனர்களுக்காக (TG) இந்நிறுவனம் மேற்கொண்ட ’மிலன் செயற்திட்டம்’ 2006 மற்றும் 2007 ஆண்டுகளுக்கான எம்டிவி விருதினை வென்றது (MTV Staying Alive Foundation Award) இத் திட்டத்தின் மூலம், விளிம்புநிலை ஆண்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்குகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் திருனர்களும் சந்திப்பதற்காக ஒரு பாதுகாப்பான, நம்பகமான மையம் ஒன்றை அமைத்துத் தந்துள்ளது. வெளிக்களப் பணியாளர்கள் அவர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான விவரங்கள், ஆணுறைகள், நெய்மம் போன்றவற்றை வினியோகிக்கிறார்கள்.
எச்.ஐ.வி/எயிட்சு நோயுடன் வாழும் மக்களுக்கு வீட்டுப் பராமரிப்பு அளிப்பதற்கானத் திட்டம் (PLWHA) இந்நிறுவனத்தால் 2001 இல் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் எச்.ஐ.வி/எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நலப் பரமாரிப்பு மற்றும் சட்டரீதியான ஆலோசனைகளும் உதவிகளும் கிடைப்பதற்கும், சிறு தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்புப் பெறும்வகையில் மூலதனத்திற்குக் கடனுதவிகள் பெறவும் இத் திட்டம் வழிசெய்கிறது. எச்.ஐ.வி/எயிட்சு குறித்த அச்சம் மற்றும் தவறான கண்ணோட்டத்தால், எச்.ஐ.வி/எயிட்சால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து எந்தவொரு ஆதரவும் உதவியும் கிடைக்காத இக்கட்டான சூழ்நிலையில் நாஸ் பவுண்டேஷன் அவர்களுக்கு உதவுகிறது.
லெவி ஸ்ட்ராஸ் நிறுவனத்தின் (Levi Strauss Foundation) நிதியுதவியுடன் ’சகமாணவர் அறிவூட்டும் திட்டம்’ (Peer Education Programme) தொடங்கப்பட்டுள்ளது. பாலினம், பாலீர்ப்பு, பாலின சுகாதாரம், மற்றும் எச்.ஐ.வி/எயிட்சு குறித்து மாணவர்களின் அறிவு, மனப்போக்கு, நடத்தை, திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். முதலில் முறையான பயிற்சியாளர்கள் மூலம் குறிப்பிட்ட சில மாணவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் அந்த மாணவப் பயிற்சியாளர்கள் சக மாணவர்களிடம் தாங்கள் பயிற்சியில் பெற்ற விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவ்வாறாக, மாணவ சமுதாயத்தினரிடையே சரியான விவரங்களும் முறைகளும் பரப்பப்படுகின்றன.
2000 இல் ஆதரவற்ற, எச்.ஐ.வி+ குழந்தைகளுக்காக ஒரு பராமரிப்பு இல்லம் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு நலமான வாழ்வு, சுகாதாரம், கல்வி, தவறானவர்களென்ற சமூக முத்திரையின்றி வாழும் சுமுகமான சூழ்நிலை ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதே இந்த இல்லம் தொடங்கப்பட்டதின் நோக்கமாகும். இந்த இல்லத்தில் பராமரிக்கப்படும் அனைத்துக் குழந்தைகளும் கல்விபயில பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது; மருத்துவரின் கண்காணிப்பு அளிக்கப்படுவதுடன் தடுப்பூசிகளும் தவறாது போடப்படுகின்றன. மேலாக, அவர்களின் மனநலனும் நன்கு பேணப்படுகிறது. 2010 இல் இந்த இல்லம் அதிகளவிலான குழந்தைகளைப் பராமரிக்க மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[2]
இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானதென தில்லி உயர்நீதி மன்றத்தில் 2001 இல் நாஸ் பவுண்டேஷன் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இ. பி கோ. 377:
ஆண்கள், பெண்கள் அல்லது மிருகங்களுடன், யாரேனும் சுயமாக (கட்டாயப்படுத்தப்படாமல்) இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொண்டால், அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ஆயுள் சிறை தண்டனையோ விதிக்கலாம். அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.[3][4][5]
2003 இல் அந்த மனுவை தாக்கல் செய்ய நாஸுக்கு உரிமையில்லை எனக் கூறி டெல்லி உயர் நீதி மன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் மீண்டும் 2008 இல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 14 ஜூலை 2009 இல் இந்த மனுவின் மீது இறுதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி முரளீதர் ஆகியோர் கொண்ட இரு நபர் பெஞ்சு, 377 பிரிவின் சில அம்சங்கள் இந்திய அரசியலமைப்பில் உள்ள சில அடிப்படை உரிமைகளை மறுப்பதாக உள்ளதால், அப்பிரிவு 18 வயதுக்கு மேற்பட்ட ஒப்புதலோடு பாலுறவு கொள்பவருக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் 18 வயதுக்கு உட்பட்டோருக்கும், ஒப்புதலின்றி வன்புணருவோருக்கும் இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறினர். தீர்ப்பிர்க்கேற்றவாறு சட்டத்தை திருத்த இந்திய நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்தனர். இத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் நல உரிமை அமைப்புகளாலும், எய்ட்சு நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களாலும் வரவேற்கப்பட்டது[6].
பிரிவு 377 வழக்கின் பங்களிப்பிற்காக நாஸ் பவுண்டேஷனுக்கு, ”2009 ஆம் ஆண்டின் மிக முக்கியம் வாய்ந்த அமைப்பு” என்ற பட்டத்தை சிஎன்என் வழங்கியது[7].
இது ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியுடன் இணைந்து அடிநிலை சமூகத்தில் வாழும் இளம் பெண்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கவும், மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தரவும் மேற்கொள்ளப்பட்ட திட்டம்[8]
இந்தியாவில் ஊடக அமைப்புகள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடன் இணைந்து செயற்பட, 2004 இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஹெச்.ஐ.வி/எயிட்சு செயற்திட்டத்தில் நாஸ் பவுண்டேஷனும் பங்கேற்றது. ஹெச்.ஐ.வி/எயிட்சு பற்றிய விஷயங்களை விவாதிப்பதும், ஆலோசனை மற்றும் தொடர்பாடல் மூலம் ஹெச்.ஐ.வி/எயிட்சு பாதிப்புடையவர்களை ஒதுக்கி வைத்தலைக் குறைப்பதும் இத் திட்டத்தின் நோக்கமாகும். [9]
பொது மக்களுக்கு ஆணுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆணுறை பயன்படுத்துவதால் ஹெச்.ஐ.வி/எயிட்சு பாதிப்பையும் பரவலையும் தடுக்கமுடியும் என்பதை விளக்கவும் இத் திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தில் நாஸ் பவுண்டேஷனும் இணைந்து செயற்பட்டது. கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இவ்விவரங்கள் விளக்கப்பட்டன.[10]
இந்த அறக்கட்டளைக்குத் தேவையான பெரும்பாலான நிதி, தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அளிக்கும் நன்கொடைகள் மூலம் பெறப்படுகிறது. இதற்கு நிதியுதவியளிக்கும் நிறுவனங்கள் ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி[11] மற்றும் லெவி ஸ்ட்ராஸ் பவுண்டேஷன்[12] ஆகும். மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் தன்னார்வலர்களின் ஆதரவினையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.