நிதின் போசு | |
---|---|
![]() நிதின் போசு 2013 அஞ்சல் முத்திரையில் | |
பிறப்பு | கொல்கத்தா, இந்தியா | 26 ஏப்ரல் 1897
இறப்பு | 14 ஏப்ரல் 1986 கொல்கத்தா, இந்தியா | (அகவை 88)
பணி | திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் |
நிதின் போசு (Nitin Bose 26 ஏப்ரல் 1897 - 14 ஏப்ரல் 1986) இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் மற்றும் திரைக் கதை ஆசிரியரும ஆவார். இவர் கொல்கத்தாவில் பிறந்து அங்கேயே இறந்தார். 1930கள் மற்றும் 1940களின் முற்பகுதியில், இவர் நியூ தியேட்டர்ஸ் என்ற படப்பிடிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். வங்காளம் மற்றும் இந்தி இரண்டிலும் இருமொழி திரைப்படங்களை உருவாக்கினார். பின்னர், மும்பைக்குச் சென்று பம்பாய் டாக்கீஸ் மற்றும் பிலிமிஸ்தான் என்ற படப்பிடிப்பு நிறுவனங்களில் கீழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்தியப் படங்களில் பின்னணி பாடலின் முதல் பயன்பாடு 1935இல் போஸ் இயக்கிய படங்களில் நிகழ்ந்தது: முதலில் பாக்யா சக்ரா, என்ற வங்காளத் திரைப்படம், அதே ஆண்டு அதன் இந்தி மறு ஆக்கமான தூப் சாவோன் ஆகியவற்றில் இடம் பெற்றது. இவரது கங்கா ஜமுனா என்ற திரைப்படம் மிகவும் புகழ்பெற்ற படைப்பாகும்.
நிதின் போசு வங்காளத் தொழிலதிபர் ஹேமேந்திர மோகன் போஸ் மற்றும் மிருணாளினி ஆகியோருக்கு மகனாவார்.
போசுக்கு சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒரு தீவிர புகைப்படக் கலைஞராக இருந்த இவரது தந்தை, தனது மகனின் ஆர்வத்தையும் வளர்த்தார்.[1]
திரைப்பட இயக்கத்தில் போசின் முதல் முயற்சி பெல்ஜியப் பேரரசரின் இந்திய வருகை (1921) குறித்த ஆவணப்படமாகும்.
போசு 1926 இல் புனர்ஜன்மா என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] நியூ தியேட்டர்ஸ் தயாரிப்பின் கீழ் தேவதாசு (1928) என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நடன-நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து இயக்கிய நதிர் பூஜா (1932) என்ற ஒரே படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தார்.