நினா சிபல் | |
---|---|
பிறப்பு | 1948 புனே |
இறப்பு | 2000 |
தொழில் | இந்திய வெளியுறவுப் பணி |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | தில்லி பல்கலைக்கழகம் |
துணைவர் | கபில் சிபல் |
நினா சிபல் (Nina Sibal)(1948 - 2000) என்பவர் இந்தியத் தூதர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது பரிசு வென்ற நாவல் யாத்ரா மற்றும் பிற ஆங்கில மொழி புனைகதைகளுக்காகவும் இந்திய வெளியுறவு சேவையில் செய்த பணிக்காகவும் நன்கு அறியப்பட்டவர்.
நினா சிபல் மகாராட்டிர மாநிலம் புனேவில்[1] இந்தியத் தந்தை ஒருவருக்கும் கிரேக்கத் தாய்க்கும் மகளாகப் பிறந்தார்.[2] தில்லி பல்கலைக்கழகத்தில் (மிராண்டா அவுசில்) ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, மூன்று ஆண்டுகள் விரிவுரையாளரக பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று பிரெஞ்சு மொழியைப் படித்தார். 1972-ல் சிபல் இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார். நியூயார்க்கு நகரில் ஐக்கிய நாடுகள் அபையில் பணியாற்றத் தொடங்கினார், சிபல். பின்னர் இவர் ஒரு பத்திரிகையாளரிடம் இது தன்னை "ஆழ்ந்த கலாச்சார அதிர்ச்சியில்" தள்ளியது என்று கூறினார்.[2] மற்ற இடுகைகளில் கெய்ரோ மற்றும் மூன்று ஆண்டுகள் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழுவின் துணை இயக்குநர் எனப் பணியாற்றினார். 1992-ல் சிபல் பாரிஸில் உள்ள ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியானார். மேலும் 1995-ல் நியூயார்க்கிற்குச் சென்று இதன் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநராக இருந்தார்.[3]
நினா, வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கபில் சிபலை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மருமகள்கள் கோரும் தொழிலைத் தொடர்ந்தாலும், அரசியல்வாதி, தூதர் மற்றும் எழுத்தாளர் என சசி தரூரின் கூற்றுப்படி, இவர்கள் "கண்டம் கடந்த" திருமண வாழ்வினை பராமரித்தனர்.[4] இவர் சூன் 2000-ல் நியூயார்க்கில் மார்பக புற்றுநோயால் காலமானார்.[4][5] நினா சிபல் நினைவு விருது இவரது கணவரால் நிறுவப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதுமையான முறைகளைப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றில் முன்னணி பங்கு வகிக்கும் நபருக்கு அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கம் ஆண்டுதோறும் இந்த விருதை வழங்குகிறது.[6]
1985-ல் சிபலின் புனைகதை வாட் எ பிளேஸ் ஆப் குளோரி, ஆசியாவீக் சிறுகதைப் போட்டியில் வென்றபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.[1] இது பின்னர் 1991-ல் வெளியிடப்பட்ட பரிசு வென்ற ஆசியப் புனைகதை என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது.[7]
நினா யாத்ரா எனும் நாவலை 1987-ல் வெளியிட்டார். இந்நாவல் சீக்கிய குடும்பத்தின் வாழ்க்கையை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளடக்கியது. காலப்போக்கில் அவர்களின் இயக்கங்கள் தலைப்பைப் பிரதிபலிக்கின்றன: "யாத்ரா" என்றால் பயணம் அல்லது யாத்திரை.[1] விமர்சகர்கள் புத்தகத்தின் மேஜிக்கல் ரியலிசம் குறித்து கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ஒரு கதாபாத்திரத்தின் தோல் நிறம் மாறுவது குறித்து. மேலும் சல்மான் ருஷ்டியின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் உடன் இதனை ஒப்பிடுகின்றனர்.[1] ஆசிரியர் தனது கதையில் புராணக் கூறுகளைப் பயன்படுத்துகிறார்.[8] சிப்கோ இயக்கம், பஞ்சாபின் வரலாறு, வங்காளதேசத்தின் தோற்றம் மற்றும் கதாநாயகியின் தந்தைக்கான தேடல் ஆகியவை கருப்பொருள்களில் இது அடங்கும்.[9] நாவல் பல கருப்பொருள்களுடன் மிகவும் நெரிசலானதாக விமர்சிக்கப்படலாம்,[1] ஆனால் ஒட்டுமொத்தமாக இது பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இது 1987-ல் அல்ஜியர்ஸில் இலக்கியத்திற்கான பன்னாட்டு பெரும் பரிசினை (கிராண்ட் பிரிக்சை) வென்றது.[1]
சிபலின் சிறுகதைத் தொகுப்பான குஜ்ஜர் மாலின் சீக்கரட் லைப் 1991-ல் வெளியிடப்பட்டது. கதைகள் பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கற்பனையான பெயர்களுடன் மாறுவேடமிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மல்கேரி பனிப்போரின் போது பல்கேரியாவை எதிரொலிக்கிறது.[2] இந்த அமைப்புகள் வெறுமனே அரசியல் அல்லது வண்ணமயமான பின்னணியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன.[2] தலைப்புக் கதையுடன், தொகுப்பில் மேலும் ஆறு கதைகள் உள்ளன. இவை: பை கிசு டெத், , சிவிம்மிங், தி பேசு ஆப் தாதாராவி, பர் பூட்ஸ், சாங்குதுரி மற்றும் தி மேன் கூ சீக்சு என்லைட்மெண்ட்.[10]
நினாவின் 1998ஆம் ஆண்டு நாவலான, தி டாக்ஸ் ஆப் ஜஸ்டிஸ், காஷ்மீரை பின்னணியாகக் கொண்டது. ஒரு பணக்கார முஸ்லீம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. சிபலின் முந்தைய இரண்டு புத்தகங்களை விட இது குறைவான வரவேற்பைப் பெற்றது. ஒரு விமர்சகர் இது முந்தைய படைப்புகளின் நம்பிக்கையினை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.[1]