நிரந்தரத் தீர்வு, வங்காளம் (Permanent Settlement or Permanent Settlement of Bengal) என்பது, வங்காள நிலப்பகுதியிலிருந்து வசூலிக்கப்படும் வேளாண்மை நிலவரி வருவாய்களை, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஜமீந்தார்கள் எவ்வாறு தங்களுக்குள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என இருதரப்பும் செய்து கொண்ட நிரந்தத்தீர்வுக்கான ஒப்பந்தம் ஆகும்.
1793-இல் வங்காள ஆளுநர் காரன்வாலிஸ் தயாரித்த காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பின்படி இந்த நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.[1] காரன்வாலிஸ் வகுத்த சட்டத்தொகுப்பின் படி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள் வருவாய்த் துறை, வணிகத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று துறைகளின் கீழ் இயங்கினர். விவசாயிகளிடமிருந்து, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவான நிலவுடமையாளர்களான ஜமீந்தார்கள் மூலம் நில வருவாயை, கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த்துறையினர் வசூலித்தனர்.[1]
நிரந்தரத்தீர்வு முதன்முதலில் வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அப்போதைய சென்னை மாவட்டத்திலும்; வாரணாசி மாவட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த நிரந்தரத் தீர்வுத் திட்டம் வட இந்தியாவில் முழுமையாக 1 மே 1793-இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
1833-இல் செயிண்ட் ஹெலினா சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், நிரந்தரத்தீர்வு முறை நீக்கப்பட்டு, ரயத்துவாரி முறை மற்றும் மகால் வாரி முறைகள் மூலம், நிலவரியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிழக்கிந்தியக் கம்பெனியர் வசூலித்தனர். இதனால் ஜமீந்தார்கள் நிலவரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.