நுசா செனிங்கன் (Nusa Ceningan) என்பது இந்தோனேசியாவின் பாலி, குலுங்குங் பிராந்தியம், நுசா பெனிடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். இதன் வடமேற்கில் உள்ள நுசா லெம்பொங்கன் தீவும் தென்கிழக்கில் உள்ள நுசா பெனிடா இடையே இத்தீவு அமைந்துள்ளது. இந்த மூன்று தீவுகளும் பாலி பிரதான நிலப்பகுதியின் தென்கிழக்கில், படுங் நீரிணையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. மூன்று தீவுகளிலும் வானூர்தி நிலையம் இல்லாததால், நுசா செனிங்கனுக்கு படகுகள் வழியாகவே செல்லவேண்டும்.
நுசா செனிங்கனில் குறிப்பிடத்தக்க அளவில் நீர்சறுக்குக்கு ஏற்ற இடங்கள் உள்ளன. இது நுசா லெம்போங்கனில் அதிக நெரிசலை விரும்பாத நீர்சறுக்கிகளை ஈர்க்கிறது.
இந்தத் தீவானது சில அழகிய சாலைகளையும், பாதைகளையும் கொண்டுள்ளது. மேலும் நுசா லெம்போங்கன் முதல் பாலி வரையிலான மேற்கு நோக்கிய காட்சிகள் சுவாரசியம் தருவனவாக உள்ளன. மத்திய செனிங்கன் முகட்டில் இருந்து பாலி தீவின் மீது ஏற்படும் சூரியன் மறைவைப் பார்ப்பது மிகவும் அருமையான காட்சியாகும். லெம்போங்கன் மற்றும் செனிங்கன் இடையேயான கழிமுகக் கால்வாய் பல கடற்பாசிகள் மற்றும் அழகிய சதுப்புநிலக் காடுகளுக்கு உறைவிடமாக உள்ளது. [1]
2009 ஆம் ஆண்டு முதல் நுசா செனிங்கன் மெல்லமெல்ல பிரபலமடைந்து வருகிறது. இது ஒரு குறுகிய தொங்கு பாலத்தினால் லெம்போங்கன் தீவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் தீவில் பல ஓய்வு விடுதிகளும், உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மகானா குன்றிலிருந்து கடலில் குதித்தல் ஆகும். இது நுசா செனிங்கனின் தென்கிழக்கு பக்கத்தில் மகானா முனையில் அமைந்துள்ளது. இங்கு 5 மற்றும் 13 மீட்டர் உயரத்தில் இரண்டு குதிப்புத் தளங்கள் உள்ளன. அலை அளவு அதிகமாக இருக்கும்போது மட்டுமே இங்கு குதிக்க அனுமதிக்கப்படுகிறது.