நெடுமல்லி ஜனார்த்தன ரெட்டி (Nedurumalli Janardhana Reddy) (20 பிப்ரவரி 1935 - 9 மே 2014) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் விசாகப்பட்டினம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1990 முதல் 1992 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். இவரது மனைவி நெடுமல்லி ராஜ்யலட்சுமி 2004 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்தார்.
செப்டம்பர் 2007 இல், தீவிரவாத நக்சல் குழு உறுப்பினர்கள் ரெட்டியையும் இவரது மனைவியையும் படுகொலை செய்ய முயன்றனர்; இருவரும் காயமின்றி தப்பினர்.
ரெட்டி, 1935 பிப்ரவரி 20 அன்று வகாடுவில் பிறந்தார். கல்வியை முடித்த பிறகு சிறிது காலம் வகாடு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1972 இல் அரசியலில் நுழைந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில், இவர் மாநில காங்கிரசின் பொதுச் செயலாளராக ஆனார், பின்னர் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்க்கையில், இவர் மாநில அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983 வரை ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் டி. அஞ்சய்யா, பவனம் வெங்கட்ராம் மற்றும் கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். [1] பாபட்ல (1998), நர்சராவுபேட்டை (1999) மற்றும் விசாகப்பட்டினம் (2004) ஆகிய தொகுதிகளில் இருந்து தலா ஒருமுறை மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] இவர் விசாகப்பட்டினத்தை காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் 1988 இல் ஆந்திர பிரதேச காங்கிரசின் தலைவராக பணியாற்றினார் [1] [2] 1989 இல் சென்னா ரெட்டியின் அமைச்சரவையில் சேர்ந்து வருவாய் அமைச்சராக பணியாற்றினார்.
ஐதராபாத்தில் நடந்த வகுப்புவாத கலவரம் ஒரு சவாலாக இருந்தது; குறுகிய காலத்தில் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. [1] தீவிரவாத நக்சலைட் மக்கள் போர் குழுவை தடை செய்தார். [1] தொழில்முறை கல்வியை தனியார்மயமாக்கினார். [2] தனியார் துறையில் பல மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் இவரது ஆட்சிக் காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டன. கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி அக்டோபர் 1992 இல் இவரைத் தொடர்ந்து முதலமைச்சரானார் [3] [4] 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, நக்சலைட் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இவரைக் கொல்ல முயன்றனர். இவர் தனது சொந்த கிராமமான வாகடுவிற்கு தனது குடும்பத்துடன் பயணித்த போது இந்த முயற்சி நடந்துள்ளது. [4] இச்சம்பவத்தில் இவரது தொண்டர்கள் மூவர் இறந்தாலும், ரெட்டியும் இவரது மனைவியும் காயமின்றி தப்பினர். ரெட்டி 2010 இல் மீண்டும் மாநிலங்கவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு தான் இறக்கும் வரை பணியாற்றினார். [1] அவரது இறுதி ஆண்டுகளில், ரெட்டி கல்லீரல் நோய் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட இவர், [5] 2014 இல் இறந்தார். [2] [3] [6]