நேனே ராஜூ நேனே மந்த்ரி | |
---|---|
இயக்கம் | தேஜா |
தயாரிப்பு | டி. சுரேஷ் பாபு கிரண் ரெட்டி பாரத் சௌத்ரி |
கதை | தேஜா லட்சுமி பூபால் (உரையாடல்) சிவகோபால் கிருஷ்ணா (இந்தி உரையாடல்) |
இசை | அனூப் ரூபின்ஸ் |
நடிப்பு | ரானா தக்குபாடி காஜல் அகர்வால் காத்ரீன் திரீசா நவ்தீப் அஷுத்தோஷ் ராணா சிவாஜி ராஜா |
ஒளிப்பதிவு | வென்கட் சி. திலீப் |
படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் |
கலையகம் | சுரேஷ் புரொடக்சன்ஸ் ப்ளூ பிளானட் எண்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | சுரேஷ் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 11 ஆகத்து 2017 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹12 கோடி[1] |
நேனே ராஜூ நேனே மந்த்ரி (Nene Raju Nene Mantri) (பொருள்; நானே ராஜா நானே மந்திரி) என்பது 2017 ஆண்டைய இந்திய தெலுங்கு மொழி அரசியல் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் தேஜா ஆவார். படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ரானா தக்குபாடி, காஜல் அகர்வால், காத்ரீன் திரீசா, நவ்தீப் ஆகியோர் நடித்துள்ளனர்.[2]
2016 ஏப்ரலில் படத் தயாரிப்புப் பணிகள் துவங்கி[3] 2016 அக்டோபரில் முதன்மைப் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது.[4] ராணாவின் பாட்டனார் டி. ராமா நாயுடு அவர்களின் 81 வது பிறந்த நாளான சூன் 6 ம் தேதி அன்று டீசர் வெளியானது.[5] காஜல் அகர்வால் நடித்த 50 கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு சிறப்பு டீஸர் அவரின் பிறந்த நாளான சூன் 19, அன்று வெளியானது. இந்தப் படம் இந்தி மொழியில் மெயின் ஹெ ராஜா மெயின் ஹெ மந்த்ரி என்ற பெயரிலும்,[6] தமிழில் நான் ஆணையிட்டால் என்ற பெயரிலும், மலையாளத்தில் ராஜ கிரீடம் என்ற பெயரில் சில காட்சிகளை உள்ளூர் நடிகர்களைக் கொண்டு மறு படப்பிடிப்பு நடத்தி மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[7]
2017 ஆகத்து 11 அன்று வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.[8]
2016 பிப்ரவரியில், இயக்குநர் தேஜா, தெலுங்கு நடிகர் ராஜசேகரை தன் படமான அஹம் என்றப் படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இதே படத்தில் முன்னணி பெண் பாத்திரத்தில் நடிக்க நடிகை சினேகாவை அணுகினார்.[9] சில காரணங்களால் இப்படம் 2016 ஏப்ரல் மாதம் கைவிடப்பட்டது. படத்தயாரிப்பாளரான பி. சத்யநாராயண ரெட்டி, வேறு ஒரு முன்னணி நடிகரின் நடிப்பில் படத்தை எடுக்க விரும்பினார்.[10] தேஜா ரானா தக்குபாடியை அணுகி அவரது ஒப்புதலைப் பெற்றார். காஜல் அகர்வாலை படத்தின் முன்னணிப் பெண் பாத்திரத்துக்கு நடிக்க வைக்க ராணாவின் தந்தை டகுபதி சுரேஷ் பாபு பரிந்துரைத்தார், பிறகு அவர் படத்துக்கு ஒப்பந்தமானார்.[11] ராணா காஸி (2017) படத்தில் தனது பகுதியை முடித்துக் கொண்டு பாகுபலி 2 படத்தில் தன் கவனத்தைச் செலுத்திய நேரத்தில்: தேஜா அவரை அணுகினார். அவர்கள் எட்டு மாதங்கள் திரைக்கதைக்கான பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு பதிப்புகளை எழுதினர்.[12] உரையாடலை எழுத லட்சுமி பூபால் தேர்வுச் செய்யப்பட்டார்.[13] படத்தின் ஒளிப்பதிவுக்கு தேஜாவால் ஆர். ரத்னவேலு அணுகப்பட்டார்.
நேனே ராஜு நேனே மந்திரி என பெயரிடப்பட்ட இப்படத்துக்கு, வெங்கட் சி. திலீப் மற்றும் கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டனர். படத்துக்கு அனூப் ரூபென்ஸ் இசையமைத்தார்.[14] பாபு, கிரண் ரெட்டி, பாரத் சௌத்ரி ஆகியோர் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ப்ளூ பிளானட் என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் பதாகையின் கீழ் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.[15] நேனே ராஜு நேனே மந்திரி படமானது நடிகை காஜல் அகர்வாலின் 50 வது படமாகும். படத்தின் பிற பாத்திரங்களில் காத்ரீன் திரீசா, நவ்தீப், அஷ்தோஷ் ராணா ஆகியோர் நடித்துள்ளனர்.[16]
படத்தின் துவக்கத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜொகேந்திரா (ரானா தக்குபாடி) காண்பிக்கப்பட்டு அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற முன்கதை விரிகிறது. ஜோகேந்திரா ஒரு பணக்காரர், அவர் எதையும் ஈடு வைத்துக் கொள்ளாமல் யாருக்கும் கடன் கொடுக்கமாட்டார். அவரது மனைவியான ராதாவின் மீது (காஜல் அகர்வால்) மிகுந்த அன்பு கொண்டவர். ராதா கர்ப்பமானதால், முதல் விளக்குக்கு ஏற்ற அவள் ஒரு நல்ல நாள் அன்று கோயிலுக்கு செல்கிறார். இதை அனுமதிக்காத ஊராட்சி தலைவரின் மனைவி ராதாவைத் தள்ளி விடுகிறார். இதனால் ராதாவுக்கு கருகலைப்பு ஏற்படுகிறது. இந்த நிகழவு ஜோகைந்திராவுக்கு வேதனையை உருவாக்குகிறது. ஊராட்சித் தலைவரின் மனைவியாக இருந்தால் தான் கோயிலில் முதல் விளக்கு ஏற்றும் மரியாதை கிடைக்கும் எனக் கருதிய ஜோகேந்திரா, அடுத்து வரவிருக்கும் தேர்தலில் ஊராட்சித் தலைவராக ஒரு திட்டத்தை வகுத்து அதன்படி தலைவராகிறார். அதன் பின்னர் ராதா கோவிலில் முதல் விளக்கு ஏற்றுகிறார்.
ஊராட்சித் தலைவரான பிறகு, ஜோகேந்திரா அவரது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகிறார். அதன்பிறகு உள்துறை அமைச்சரின் இடத்தைக் கைப்பற்றி அமைச்சர் பதவிக்கு வந்தவர், அடுத்து முதலமைச்சர் பதவியைக் குறிவைக்கிறார்.