நேரு விலங்கியல் பூங்கா | |
---|---|
நேரு விலங்கியல் பூங்கா Nehru Zoological Park | |
17°21′04″N 78°26′59″E / 17.35111°N 78.44972°E | |
திறக்கப்பட்ட தேதி | 12 அக்டோபர் 1963 |
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா, IN |
நிலப்பரப்பளவு | 380 ஏக்கர்கள் (153.8 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 1100 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 100 |
உறுப்புத்துவங்கள் | மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் |
நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மிர் ஆலம் நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத்தில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். மிருகக்காட்சிசாலையின் பார்வை நேரம் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும். திங்கள் கிழமை வார விடுமுறை. அன்றைய தினம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.[1]
ஐதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்கா அரசாணை எண் 247, 26 அக்டோபர் 1959 தேதியிட்டது மூலம் நிறுவப்பட்டு அக்டோபர் 6ஆம் நாள், 1963 அன்று திறக்கப்பட்டது. தெலுங்கானா அரசாங்கத்தின் வனத்துறையால் இந்த பூங்கா நிர்வகிக்கப்படுகிறது. இந்த பூங்காவிற்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரிடப்பட்டது.
இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 380 ஏக்கர் நிலப்பரப்பில் மிர் ஆலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் சுமார் 100 வகையான பறவைகள், விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளன. இதில் இந்தியக் காண்டாமிருகம், ஆசியச் சிங்கம், வங்காளப் புலி, சிறுத்தை, இந்தியக் காட்டெருது, இந்திய யானை, தேவாங்கு, மலைப்பாம்பு, மான், மறிமான் உள்ளிட்ட பல பறவைகள் உள்ளன. சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் வளைவுகளுடன் அமைந்த கரைகளைக் கொண்ட மிர் ஆலம் நீர்த்தேக்கம், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. இது மிருகக்காட்சி சாலைக்கு வருபவர்களின் கவனத்தினை மேலும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. [1]
மிருகக்காட்சி சாலையில் உள்ள இரவு வீட்டில் இரவு பகல் பொழுதுகள் செயற்கையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எனவே பார்வையாளர்கள் மிருகக்காட்சி சாலையில் இருக்கும்போது இரவு நேர விலங்குகள் சுறுசுறுப்பாக இருக்கும் காட்சியினைப் பகல் பொழுதில் காணலாம். இந்த கண்காட்சியில் சிம்பன்சி, ஒட்டகச்சிவிங்கி, [2] பழந்தின்னி வெளவால்கள், தேவாங்கு, பெரிய தேவாங்கு, புனுகுப்பூனை, சிறுத்தை பூனைகள், முள்ளெலி, கூகை ஆந்தைகள், பொரிப்புள்ளி ஆந்தைகள், மீன்பிடி ஆந்தைகள் மற்றும் பெரிய கொம்பு ஆந்தைகள் காணப்படுகின்றன. மீன் காட்சிச் சாலை, டைனோ பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை வீடு போன்றவையும் உள்ளன. இந்த மிருகாட்சிச் சாலையில் விலங்குகள் தத்தெடுப்புத் திட்டம் 2014 முதல் செயல்படுகிறது. இதன் கீழ் மக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஏதேனும் ஓர் விலங்கு அல்லது முழு அமைப்பினையும் தத்தெடுத்து அவற்றின் பராமரிப்பிற்குப் பணம் செலுத்துகின்றனர். [3]
மிருகக்காட்சிசாலையில் உள்ள ஆசியச் சிங்கம், வங்காள புலி, தேன் கரடி விலங்குகளைக் காண ஒவ்வொரு நாளும் பல பயணங்கள் நடைபெறுகின்றன. மிருகக்காட்சிசாலையில் ஒவ்வொரு நாளும் திட்டமிடப்பட்ட சிறப்புக் கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் விலங்குகளுக்கான உணவூட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் இரயில் முதலியன பிற கவர்ச்சி காட்சிகளாக உள்ளன.
மிருகக்காட்சிசாலையில் பல விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் இந்தப்பூங்காவில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட மான்கள் பல்வேறு பூங்கா மற்றும் சரணாலயங்களில் விடப்பட்டு புணர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளன. பிணந்தின்னிக் கழுகுகளின் இனப்பெருக்க மேம்பாட்டிற்காக வனத்துறையினர் மகாராட்டிரா அரசின் உதவியினைக் கோரியுள்ளனர்.[4]