நேர்மையான மரம்வெட்டி | |
---|---|
நாட்டுப்புறக் கதை | |
பெயர்: | நேர்மையான மரம்வெட்டி |
தகவல் | |
பகுதி: | கிரேக்கம்; உலகம் முழுவதும் |
நேர்மையான மரம்வெட்டி என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளில் ஒன்றாகும். ஒருவரது சுயநலத்தை விடவும் நேர்மை முக்கியம் என இந்த நீதிக்கதை வலியுறுத்துகிறது.[1]
ஒரு மரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்போது கை தவறி ஆற்றில் விழுந்துவிடுகிறது. தன் வாழ்வாதாரத்துக்கு ஒரே வழியான கோடாரி விழுந்துவிட்டதால் அவர் உட்கார்ந்து அழுகிறார். அவர் மீது இரக்கம் கொண்ட ஒரு தேவதை தண்ணீரில் மூழ்கி ஒரு தங்கக் கோடாரியுடன் வெளியே வருகிறது. "நீ தொலைத்த கோடாரி இதுதானா?" எனக் கேட்கிறது. மரம்வெட்டி இல்லை என்கிறார். தேவதை ஒரு வெள்ளிக் கோடாரியுடன் வந்தபோதும் அவர் இதே பதிலைக் கூறுகிறார். அவருடைய கோடாரியைத் தேவதை கொண்டு வந்து காட்டியபோது தான் அவர் தன்னுடையது என்கிறார். அவருடைய நேர்மையைக் கண்டு மகிழ்ந்த தேவதை அந்த மூன்று கோடாரிகளையும் அவரையே வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறது. இந்நிகழ்வைப் பற்றி அறிந்த, பொறாமையுடைய அவரது அண்டைவீட்டு மனிதன் அந்த ஆற்றுக்குச் சென்று தன்னுடைய கோடாரியையும் தண்ணீருக்குள் வீசுகிறான். அங்கு உட்கார்ந்து புலம்புகிறான். அந்த தேவதை தோன்றியது. தண்ணீருக்குள் மூழ்கி அவனிடம் ஒரு தங்கக் கோடாரியைக் காட்டியது. பேராசை கொண்ட அவன் அது தன்னுடையது தான் என்கிறான். பொய் கூறியதற்காக தங்கக் கோடாரி மற்றும் அவனது சொந்தக் கோடாரி இரண்டையுமே அவனுக்குக் கிடைக்காமல் செய்கிறது அந்தத் தேவதை.
இந்நீதிக்கதையின் பெயரைக் கொண்டுள்ள சில ஓவியங்கள் அகண்ட நிலப்பரப்புகளையும் சிறிய நபர்களை நடுப்பகுதியில் கொண்டும் காணப்படுகிறது. தேசிய அருங்காட்சியகம், லண்டனில் உள்ள சால்வடோர் ரோசா என்ற ஓவியரின் மெர்க்குரி மற்றும் நேர்மையற்ற மரக்காரர் அண். 1650இல் வரையப்பட்டதாகும்.[2] சியார்ச் ராபர்ட்சன் என்ற ஓவியர் வரைந்த 18ஆம் நூற்றாண்டு நீர் வண்ண ஓவியம் இதில் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது.[3] சார்லசு ஆன்ட்ரே வான் லூ என்ற பிரெஞ்சு ஓவியர் தன்னுடைய ஒரு ஓவியத்தில் இந்நீதிக்கதையில் வரும் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.[4] அந்த ஓவியத்தில் கடவுள் அந்தரத்தில் பறந்தவாறு, ஆச்சரியத்துடன் மண்டியிட்டிருக்கும் மரக்காரருக்கு கோடாரிகளை அளிக்கிறார்.
1987ஆம் ஆண்டு இக்கதையானது கிரீசு நாடு வெளியிட்ட ஈசாப்பின் நீதிக்கதைகள் பற்றிய 8 தபால் தலைகளில் ஒன்றாக இருந்தது. அதில் கடவுள் ஆற்றில் உள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து மூன்று கோடாரிகளையும் கரையில் உள்ள தாடியுடைய ஒரு மரக்காரருக்குக் கொடுக்கும் படம் இருந்தது.[5]
நைஜீரியா,[6] தாய்லாந்து,[7] திபெத்து[8] மற்றும் யப்பான்,[9] ஆகிய நாடுகளில் இதே கதையானது உள்நாட்டு வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது. எனினும் அடிப்படை கதையானது ஈசாப்பின் கதையில் உள்ளது போலவே உள்ளது. எபிரேய வேதாகமத்தில் ஆற்றில் இருந்து அதிசயமாக ஒரு கோடாரி எடுக்கப்படுவது இந்நீதிக்கதையை ஒத்துள்ளதாக உள்ளது.[10] அதில் இறைதூதர் எலிசா தொலைந்து போன ஒரு கோடாரியை ஆற்றின் மேற்பரப்பில் மிதக்க வைக்கிறார்.[11]
honest woodcutter.