நைட்ரசன் மோனோபுளோரைடு (Nitrogen monofluoride) என்பது FN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளோரோயிமிடோசன் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. சீரொளி ஆய்வுகளில் காணப்பட்ட ஒரு சிற்றுறுதி நிலை இனமாக இச்சேர்மம் அறியப்படுகிறது. ஆக்சிசனுடன் சமஎலக்ட்ரான் அமைப்பைக் கொண்டுள்ளது. போரான் மோனோபுளோரைடு போலவே, இதுவும் ஓர் அரிதான பல்பிணைப்பு புளோரின் அணுவிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.[1][2] இதன் முறையான இருபடியான இருநைட்ரசன் இருபுளோரைடு, நைட்ரசன், புளோரின் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இதன் நிலைப்புத்தன்மை குறைவானதாகும்.
நைட்ரசன் இருபுளோரைடு (NF2) சேர்மத்திலிருந்து ஒரு புளோரின் அணுவை இயங்குறுப்புகளான (H, O, N, CH3) ஆகியவை எடுக்கும்போது நைட்ரஜன் மோனோபுளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. விகிதவியல் ரீதியாக இவ்வினை மிகவும் திறமையானதாகும். நீண்ட கால சங்கிலிப் பரவலுக்கான ஓர் இயங்குறுப்பை இவ்வினை மீண்டும் உருவாக்குகிறது. இருப்பினும், இறுதி விளைபொருளில் உள்ள இயங்குறுப்பு அசுத்தங்களும் அந்த விளைபொருளின் சிதைவை ஊக்குவிக்கின்றன. அசைடு சிதைவு வினை குறைந்த செயல்திறன் கொண்டது என்றாலும் மிகவும் தூய்மையான தொழில் நுட்பத்தை வழங்குகிறது: அணுநிலை புளோரினை ஐதரசோயிக்கு அமிலத்துடன் சேர்த்து தளத்திலேயே உருவாக்கப்பட்ட புளோரின் அசைடை சிதைவுக்கு வினைக்கு உட்படுத்தி நைட்ரசன் மோனோபுளோரைடு உருவாக்கப்படுகிறது. நைட்ரசன் தனித்துப் பிரிகிறது.[3][4]
நைட்ரசன் மோனோபுளோரைடு உற்பத்தி செய்யும் பல வினைகள், குணாதிசயமான வேதியொளிர்வுடன் ஒரு கிளர்வுநிலை விளைபொருளைக் கொடுத்தன. இதனால் இவை ஓர் இரசாயன சீரொளியாக உருவாக்கப்படுவதற்காக ஆய்வு செய்யப்பட்டன.[4][5]