நைமூர் ரகுமான் துர்ஜாய் (Naimur Rahman Durjoy) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் செப்டமபர் 19, 1974 இல் மணிக்கஞ் மாவட்டத்தில் பிறந்தார். இவர் தாக்கா மாகாண அணி மற்றும் தாக்கா மெட்ரோபொலிஸ் அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். துடுப்பாட்டத்தில் சகலத் துறையராக விளங்கினார்.[1]
2014 ஆம் ஆண்டில் இவர் மணிகஞ்ச் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[2][3]
வலதுகை புறத் திருப்பப் பந்துவீச்சாளரான இவர் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ சிசி வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்ற வங்காளதேச அணியில் விளையாடினார்.2000ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 10 இல் டாக்காவில் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். இதன் முதல் ஆட்டப் பகுதியில் 44 ஓவர்கள் வீசி 136 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார் இதில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோரின் இலக்கினையும் கைப்பற்றினார்.[4].இதில் 9 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 44 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து ஜோசி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 32 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து ஜவகல் ஸ்ரீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது.[5]
பின் 2002 ஆம் மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 8 இல் டாக்காவில் நடைபெற்ற போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 36 ஓவர்கள் வீசி 118 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 11 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து காலின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 11 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 310 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[6]
1995 ஆம் வங்காளதேச அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 8 இல் சார்ஜா அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 7 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 6 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.
2002 ஆம் மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 3 இல் டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 15 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து கிறிஸ் கெயில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[7]