பக்குன் அணை Bakun Dam சரவாக் | |
---|---|
2009 ஜூன் மாதம் பக்குன் அணை கட்டப்படும் போது | |
அமைவிடம் | மலேசியா சரவாக் காப்பிட் பிரிவு பெலாகா மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 02°45′23″N 114°03′47″E / 2.75639°N 114.06306°E |
கட்டத் தொடங்கியது | 1996 |
திறந்தது | 2011 |
உரிமையாளர்(கள்) | சரவாக் எரிசக்தி நிறுவனம்[1] சரவாக் அயிட்ரோ நிறுவனம் (நடத்துனர்) |
அணையும் வழிகாலும் | |
வகை | கரைக்கட்டு; கான்கிரீட் பாறை நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | பாலுய் ஆறு |
உயரம் | 205 m (673 அடி) |
நீளம் | 750 m (2,461 அடி) |
வழிகால் வகை | கட்டுப்படுத்தப்பட்ட படிநிலை சரிவு |
வழிகால் அளவு | 15,000 m3/s (530,000 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | பக்குன் அணை |
மொத்தம் கொள் அளவு | 43,800,000,000 m3 (35,500,000 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 14,750 km2 (5,695 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 695 km2 (268 sq mi) |
மின் நிலையம் | |
சுழலிகள் | 8 × 300 மெகாவாட் |
நிறுவப்பட்ட திறன் | 2,400 மெகாவாட்[1] |
இணையதளம் [1] |
பக்குன் அணை (மலாய்: Empangan Bakun; ஆங்கிலம்: Bakun Dam); மலேசியா, சரவாக், காப்பிட் பிரிவு, பெலாகா மாவட்டத்தில், பாலுய் ஆற்றில் (Balui River) கட்டப்பட்ட ஓர் அணை ஆகும். பெலாகா (Belaga) நகரில் இருந்து கிழக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
சீனாவிற்கு அடுத்து, ஆசியாவின் மிகப்பெரிய அணையாக பக்குன் அணை அறியப்படுகிறது. இந்த அணை பெலாகாவிற்குச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும்; தீபகற்ப மலேசியாவிற்கும் மின்சாரம் வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த அணை 205 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது[3]
பொருளாதாரக் காரணமாக இதன் கட்டுமானம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே பல பில்லியன் ரிங்கிட் செலவழிக்கப் பட்டு விட்டதால், இந்தத் திட்டத்தைத் தொடர மலேசிய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த அணைத் திட்டத்தின் மொத்தச் செலவுத் தொகை RM 10 பில்லியன் (1,000 கோடி ரிங்கிட்).
1996-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அணைத் திட்டம், 2011 ஆகஸ்டு 6-ஆம் தேதி முடிக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பக்குன் அணை மிகப்பெரிய அணையாகப் பதிவு செய்யப்பட்டது.[4]
வளர்ந்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதே அணைக் கட்டுமானத்தின் முதன்மையான நோக்கமாகும். இருப்பினும், அந்த நோக்கத்தில் பெரும்பாலானவை; தீபகற்ப மலேசியாவிற்கு (Peninsular Malaysia) சாதகமானவை என்றும், அணை அமைந்துள்ள கிழக்கு மலேசியாவிற்கு (East Malaysia) சாதகமானவை அல்ல என்றும் கூறப்படுகிறது.
தீபகற்ப மலேசியாவில் கூட, மின்சார உற்பத்தி மிகையாக உள்ளது. அந்தக் கட்டத்தில், தெனாகா நேசனல் பெர்காட் (Tenaga Nasional Berhad) எனும் தேசிய மின்சார நிறுவனம், தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் (Independent Power Producers) சாதகமற்ற கொள்முதல் ஒப்பந்தங்களைக் (Unfavourable Purchasing Agreements) கொண்டு இருந்தது.
பக்குன் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 30%, கிழக்கு மலேசியாவில் பயன்படுத்தப்படும்; மீதமுள்ள 70% தீபகற்ப மலேசியாவிற்கு அனுப்பப்படும் என்பதே அசல் திட்டமாக இருந்தது.
அந்தத் திட்டத்தில் கிழக்கு மலேசியாவில் 730 கி.மீ. தொலைவிற்கு மின்கம்பி வடங்களை அமைப்பது (High-voltage Direct Current Transmission Lines); 670 கி.மீ. கடலடி மின்கம்பி வடங்களை அமைப்பது (Undersea High-voltage Direct Current Cable); தீபகற்ப மலேசியாவில் 300 கி.மீ. மின்கம்பி வடங்களை அமைப்பதும் அடங்கும்.[5]
16 ஆகஸ்ட் 2017-இல், சரவாக் எனர்ஜி (Sarawak Energy) எனும் சரவாக் மின் வாரியம் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பக்குன் புனல்மின் நிலையத்தைக் (Bakun HEP) கையகப்படுத்தியது.[6] ஓர் ஒப்பந்தத்தின் கீழ், சரவாக் அரசாங்கம் மத்திய அரசுக்கு RM 2.5 பில்லியன் செலுத்தி, மீதமுள்ள RM 6.4 பில்லியன் கடன்களையும் ஏற்றுக் கொள்வதாக அமைந்தது. பிரதமர் நஜீப் ரசாக் (Najib Razak) 2018 ஏப்ரல் 5-ஆம் தேதி, சரவாக் மாநில அரசிடம் பக்குன் அணையின் அரசாங்க ஒப்பந்தப் பத்திரங்களை ஒப்படைத்தார்.[7]