பஞ்சா வம்சம் (Bhanja dynasty) என்பது குப்தப் பேரரசு ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுவதற்கு முன்பு நவீன ஒடிசாவின் உத்கலப் பகுதியில் தோன்றிய ஒரு பண்டைய வம்சமாகும். இது பண்டைய சூரியவம்ச சத்திரிய பரம்பரையின் வம்சம்.[1][2] இந்தியவியலாளர் ஹெர்மன் குல்கே ஆவணப்படுத்தியபடி, பத்மாவதியின் நாகர்களின் விந்தியதாபி கிளைக்குப் பிறகு, இவர்கள் சத்ருபஞ்சாவை உள்ளடக்கிய ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்திலிருந்து ஆட்சி செய்தார்கள் என அசன்பட் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது.[3][4] பின்னர் இவர்கள் பௌமாகர வம்சத்தின் நிலப்பிரப்புகளாக மாறினர்.[5]
பஞ்சா ஆட்சியாளர்களின் கிளைகள் கீழைக் கங்க வம்சத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளான கஜபதி இராச்சியத்திற்கு உள்ளூர் நிலப்பிரபுக்களாக மாறியது. இறுதியில் பிரிட்டிசு ஆட்சியின் வருகையுடன் இப்பகுதியின் சமஸ்தானங்களும் ஜமீன்தாரிகளும் ஆளும் வம்சங்களாக மாறியது. முக்கிய கிளைகளில் மயூர்பஞ்ச் சமஸ்தானமும் கியோஞ்சர் சமஸ்தானமும் அடங்கும்.
முந்தைய நாகா ஆட்சியாளர் சத்ருபஞ்சாவின் களங்களிருந்தும் உத்கலிலிருந்தும் (வடக்கு ஒடிசா ) ஏற்பட்ட குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கேந்துசர், மேற்கு ஒடிசா பிராந்தியத்தில் விந்தியதாபி ஆட்சியாளர்களின் நாகர்களுக்குப் பிறகு ஆரம்பகால பஞ்சாக்கள் முன்னணி தலைவர்களாக உருவெடுத்தனர். உத்கல் பகுதியில் பௌமாகர வம்ச ஆட்சியின் மேலாதிக்கத்துடன் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். [6][7][8]
பஞ்சாக்களின் ஆரம்ப கால கல்வெட்டுகளின்படி, இவர்கள் மயிலிலிருந்து தங்கள் தோற்றத்தை விவரிக்கிறார்கள். இது பண்டைய பஞ்சா குலங்களின் ஆரம்பகால மயில் தொடர்பான மரபுகளை சுட்டிக்காட்டுகிறது. இது இவர்களின் சின்னங்களில் அனுசரிக்கப்பட்டது. அவை அடுத்தடுத்த கிளைகளால் பகிரப்பட்டன.[9][10]
கிஞ்சலி மற்றும் கிஜ்ஜிங்கா ஆகிய மண்டலங்களை பௌமாகர ஆட்சியின் கீழ் உள்ள முக்கிய மண்டலங்களில் அடங்கும்.[11]
கிஞ்சலி மண்டலம் நவீன கால பௌத், புல்பானி, நாயகர், குமுசர் மற்றும் சோனேபூர் பகுதிகளை உள்ளடக்கியது. இதன் தலைநகரம் திரிதிபுராவில் (நவீன பௌத்) இருந்தது.[12] டேங்கானாள் - அனுகோள் பகுதியை ஆண்ட நெட்டபஞ்சா என்பவர், நவ-அங்குலகபட்டனத்தை தனது தலைநகராக மாற்றினார். வரலாற்று அறிஞர்களான ரக்கல்தாஸ் பானர்ஜி மற்றும் ரமேஷ் சந்திர மஜும்தார் ஆகியோர் கிஞ்சலி மண்டலத்தில் ஆட்சி செய்தவர்கள் ஆரம்பகால பஞ்ச மன்னர்களாக இருந்தனர் எனக் கருதினர். ஆரம்பகால பஞ்சாக்கள் ஆரம்பகால இடைக்கால ஒடிசாவில் சுதந்திர இறையாண்மை கொண்ட அதிபர்களின் சக்திவாய்ந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களாக இருந்தனர். இரணபஞ்சாவிற்குப் பிறகு சோமவன்சிகளின் கைகளுக்கு இந்தப் பிரதேசம் சென்றது. பின்னர் அவரது மகன் நெத்ரிபஞ்சா கிஞ்சலியின் பெயரில் ஒரு புதிய பிரதேசத்தை நிறுவினார். யசோபஞ்சா, அவரது சகோதரர் ஜெயபஞ்சா (அந்திரிகாம்), கனகபஞ்சா (பௌத்) ஆகியோரின் செப்புப் பட்டயக் கல்வெட்டுகள் கிஜாலி பகுதியில் இவர்கள் பொ.ச.12-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்ததைக் காட்டுகிறது.[10]
பொ.ச.10- ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பௌமாகர இராச்சியத்தில் ஏற்பட்ட அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக, அண்டை நாடுகளான சோமவம்சி மற்றும் பஞ்சா வம்சத்தினர் இப்பகுதியை கைப்பற்ற முயன்றனர். இது கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு வழிவகுத்தது. கிஞ்சலியின் பஞ்சாக்கள் தங்கள் இளவரசிகளில் இருவரை (வகுல மகாதேவி மற்றும் தர்ம மகாதேவி) பௌமாகர மன்னர்களான மூன்றாம் சாந்திகரனுக்கும், அவனது மகன் ஐந்தாம் சுபாகரனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் மூலம் பௌமா-கர இராச்சியத்தை கட்டுப்படுத்தினர். பௌமாகர பிரதேசம் இறுதியில் ஆதிக்க சோமவம்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.[13]
மயூர்பஞ்ச், கியோஞ்சர், பௌத், கும்சூர் மற்றும் கனிகாவின் பஞ்சா குடும்பங்கள், கி.பி முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வடக்கு ஒடிசா, மத்திய மகாநதி பள்ளத்தாக்கு, தெற்கு ஒடிசாவின் சில பகுதிகளில் பல கிளைகளில் ஆட்சி செய்த பண்டைய பஞ்சாக்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன..