படயணி (ஆங்கிலம்: Padayani) படேணி என்றும் அழைக்கப்படும் கேரள நடனமாகும். தமிழிலும் மலையாளத்திலும் போர்ப் படைக் குழுவைக் குறிக்க படையணி/படயணி என்ற சொல் பயன்படுத்தப்படும். போர்ப்படையை நினைவுகூரும் விதமாக, கேரளத்தில் ஏற்பட்ட இந்த நடன வகைக்கும் இப்பெயர் வழங்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடனம் மட்டுமல்லாது, ஒரு சடங்காகவும் நடத்தப்படுகிறது.[1] இது இந்திய மாநிலமான கேரளாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள பகவதி கோவில்களில் பழங்காலந்தொட்டே நிகழ்த்தப்படுகிறது. பத்ரகாளியின் நினைவாக இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. படயணி என்பது இசை, நடனம், நாடகம், நையாண்டி, ஓவியங்கள், ஆகியவற்றை உள்ளடக்கிய கலை வடிவமாகும். இது பத்ரகாளியின் வழிபாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. திசம்பர் நடுப்பகுதி முதல் மே மாதத்தின் நடுப்பகுதி வரை தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் அரங்கேற்றப்படுகிறது. கேரளாவின் பத்தனந்திட்டாமாவட்டத்தை உள்ளடக்கிய மத்திய திருவிதாங்கூருக்கு படயணி தனித்துவமானது. படயணி பிராமணியத்தின் வருகைக்கு முன்னர் இருந்த திராவிட வழிபாட்டு முறைகளின் எச்சமாகவும் கருதப்படுகிறது[2]
படயணி வடக்கு கேரளாவிலுள்ள தெய்யம் போன்றது. படயணியில் படயணி தப்பு, செண்டை, பறை, கும்பம் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
படயணி என்பது கோலம் துள்ளலின் ஒரு நவீன வடிவமாகும். இது ஒரு சடங்கு நடனம். இது கேரளாவின் மந்திரவாதிகளால் நிகழ்த்தப்படுகிறது.[3] பழைய நாட்களில், இந்த விரிவும் மதிப்பும் மிக்க நிகழ்வு, ஆழ்ந்த உளவியல் நோய்களைக் குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. [4] கோலம் துள்ளல் என அழைக்கப்படும் இவ்வகையான உளவியல்/ஆன்மீகவழி குணப்படுத்துதல், கணக சமூகத்தின் திண்டா துணை பிரிவினரால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இது பேயோட்டும் முறையாக நிகழ்த்தப்பட்டது. [5] கேரளாவின் பகவதி (பத்ரகாளி) கோயில்களின் திருவிழா நிகழ்வுகளுடன், ஒரு தெய்வீக சடங்கு பாரம்பரியமாக, இந்த நடன நிகழ்ச்சியிலிருந்து படயணி நாட்டுப்புறக் கலையாக உருவெடுத்தது.[6] [7]
படயணி இந்தியாவின் கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது ஒரு வழிமுறையாக, காளி தெய்வத்தை வணங்க பயன்படுகிறது. தாருகாசுரனைக் கொன்ற பிறகு, தெய்வம் மிகவும் கோபமாக இருந்ததாகவும், இறைவன் சிவனின் ஊழியர்களான பூதகணங்கள், அவரது கோபத்தைக் குறைக்க அவர் முன் நடனமாடியதாகவும் இல்லையென்றால் அவருடைய கோபம் உலகம் முழுவதையும் அழிக்கும் என்று கதைகள் கூறுகின்றன. இந்த சம்பவத்தின் நினைவாக, பங்கேற்பாளர்கள் ஒன்று முதல் நூற்றுக்கணக்கானவற்றைப் பயன்படுத்தி பாக்கு மரத்தின் கடைசலால் செய்யப்பட்ட முகமூடிகளை (கோலம்) அணிவார்கள். கோலம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் முற்றிலும் இயற்கையானவை. அவை பச்சை நிறம், கரி (கார்பன்), மஞ்சள்பொடி, செந்தூரம் போன்றவை.
படயணியின் ஒரு முக்கிய ஈர்ப்பு அதனுடன் தொடர்புடைய பாடலாகும். பாரம்பரியமாக பாடலை இணைக்க ஒரு வகை தப்பு ருவி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாடல்கள் எளிமையான மலையாள மொழியில் உள்ளன. இவை பல்லாண்டுகளாக முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டு வந்துள்ளன.
தப்பு (தப்பு சூடக்கல்) என்ற இசைக் கருவியை வெப்பப்படுத்துவதன் மூலம் கலை வடிவம் தொடங்குகிறது. கருவி நெருப்பை நோக்கி காட்டப்படுகிறது . கருவி சீர் செய்யப்படுகிறது. அதன் பிறகு, கலை வடிவம் தொடங்குகிறது. மதன், மருதா, யக்சி, பக்சி, காலன் கோலம், பைரவி கோலம் என பல்வேறு வகையான நடனங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன.
மருதா சிறியவர்களால் நாடகம் போன்று நடத்தப்படுகிறது. பாடல்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்க்க அவர்கள் நடனமாடுகிறார்கள். கோலம் ஆண்களாலும், குழந்தைகளாலும் செய்யப்படுகிறது.
படயணியில் காலன் கோலம் என்பது ஒரு முக்கிய ஈர்ப்பாகும். இது சிவனிடம் தனது உயிரை திருப்பித்தரக் கெஞ்சும் மார்க்கண்டேயன் என்ற சிறுவனைப் பற்றியது. அச்சிறுவனின் 16ஆவது பிறந்தநாளில் மரண காலம் வருகிறது. அந்த நேரத்தில் மரணத்தின் கடவுளான காலன் வருகிறார், அவர் மார்க்கண்டேயன் என்ற சிறுவனின் உயிரை எடுக்க முயற்சிக்கிறார்.
தெய்வத்தை வணங்குவதற்கான நடனம் பைரவி கோலம் என்பதாகும். இது மிகப்பெரிய கோலம். இது பாக்கு மரத்தின் பல கடைசல்களைப் பயன்படுத்தி முகமூடியாக அணியப்படுகிறது. கோலம் அதன் அதிக எடை காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் தலைமை தாங்குகிறது.
கோலம் துள்ளல் முடிந்ததும், படயணி பண்டிகையின் முடிவான பூப்பாதா என்ற சடங்கு நடக்கும். அதன் பிறகு, வண்ணங்களின் நாட்கள் முடிந்துவிடும், வண்ணமயமான நினைவுகள் மட்டுமே மனதில் இருக்கும்.
2007 ஆம் ஆண்டில், நடன வடிவத்தை மேம்படுத்துவதற்காக ஒரு படயணி கிராமத்தை உருவாக்க கவிஞர் கடம்மனிட்டா இராமகிருட்டிணன் முன்மொழிவை செயல்படுத்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. [8] 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, இதுபோன்ற முதல் கிராமம் கவிஞரின் சொந்த ஊரான கடம்மனிட்டாவில் ரூ. 1.9 கோடி செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. [9] படயணியின் முக்கிய பிரதிநிதி பேராசிரியர் கடம்மனிட்ட வாசுதேவன் பிள்ளை என்பவராகும். கடம்மனிட்டா இராமகிருட்டிணனுடனான அவரது தொடர்பும் அறிமுகமும் பல இலக்கிய பங்களிப்புகளுக்கு வழிவகுத்தது. இவரது இலக்கியப் படைப்பான "படயணியுடெ பல கோலங்கள்", "படயணி" ஆகியவை கேரள நாட்டுப்புறவியல் பற்றிய அதிகாரப்பூர்வ படைப்பாகும்.