பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் (Bhandarkar Oriental Research Institute) இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் அமைந்துள்ள ஓர் ஆய்வு மையம் ஆகும்..[1] இந்த மையம் ஜூலை 6, 1917 ஆம் நாளன்று நிறுவப்பட்டது. இதற்குஇந்தியாவில் இந்திவியலின் ( ஓரியண்டலிசம் ) நிறுவனர் என்று நீண்ட காலமாக கருதப்பட்டு வருகின்ற ராமகிருஷ்ண கோபால் பண்டர்கர் (1837-1925) பெயர் சூட்டப்பட்டது. இந்த நிறுவனம் பழைய சமஸ்கிருதம் மற்றும் பிரகிருத கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பிற்கு நன்கு அறியப்பட்டதாகும்.
இந்த நிறுவனம் 1860 ஆம் ஆண்டின் சட்டம் XXI இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு பொது டிரஸ்ட் என்ற அமைப்பு ஆகும். ஆரம்பத்தில், இந்த நிறுவனம் பம்பாய் அரசிடமிருந்து ஆண்டு தோறும் 3000 ரூபாய் மானியமாகப் பெற்று வந்தது. தற்போது, மகாராஷ்டிரா அரசின் வருடாந்திர மானியத்தைக் கொண்டு இது ஓரளவு இயங்கி வருகிறது. குறிப்பிட்ட சில ஆய்வுத் திட்டங்களுக்காக இந்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்திடமிருந்தும் இந்த நிறுவனம் மானியங்களைப் பெற்று வருகிறது.
பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் தெற்காசியாவின் மிகப் பெரிய அரிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதில் 125,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 29,510 கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. இந்த நிறுவனம் ஆண்டுக்கு நான்கு முறை பண்டர்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனத்தின் அன்னல்ஸ் என்ற பருவ இதழினை வெளியிட்டு வருகிறது. இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சின் திட்டமான இந்தியச் சுவடிகள் இயக்கத்தின் ஆதரவில் கையெழுத்துப் பிரதி வள மற்றும் பாதுகாப்பு மையத்தையும் இயக்கி வருகிறது.2007 ஆம் ஆண்டில், நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்ட ரிக் வேத கையெழுத்துப் பிரதிகள் யுனெஸ்கோவின் உலக பதிவேட்டில் சேர்க்கப்பட்டன .[2][3]
பம்பாய் அரசு, 1866 ஆம் ஆண்டில், ஒரு இந்திய கையெழுத்துப் பிரதி சேகரிப்பு திட்டத்தைத் தொடங்கியது. மிகப் பிரபலமான அறிஞர்களான ஜியார்ஜ் பஹ்லர், எஃப் கீல்கான், பீட்டர் பீட்டர்சன், ராம்கிருஷ்ண கோபால் பண்டார்கர், எஸ். ஆர். பண்டார்கர், கதாவதே மற்றும் காதே ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் 17,000 க்கும் மேற்பட்ட முக்கியமான கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்தனர். இவ்வாறாகச் சேகரிக்கப்பட்ட. இந்தத் தொகுப்பு முதலில் பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் ஒரு வைப்பாக பாதுகாத்து வைக்கப்பட்டது. பின்னர் அது மேலும் சிறந்த பாதுகாக்கும் நோக்கில் டெக்கான் கல்லூரிக்கு (புனே)விற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. 1917 ஆம் ஆண்டில் பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் நிறுவப்பட்ட பின்னர், இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் இன்னும் சிறந்த பாதுகாப்பு மற்றும் ஆய்வுகளை வழங்க முன்மொழிந்தனர். எனவே, அப்போதைய பம்பாய் பிரசிடென்சியின் ஆளுநரும், போரியின் முதல் தலைவருமான லார்ட் வில்லிங்டன், மதிப்புமிக்க அரசாங்க கையெழுத்துப் பிரதிகளை 1918 ஏப்ரல் 1 ஆம் நாளன்று போரிக்கு மாற்றினார். முதல் காப்பாட்சியாளரான பி.கே. கோட் இந்த தொகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது, இந்த நிறுவனத்தில் 29,000 கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.
சேகரிப்பின் மிகப்பெரிய பகுதியாகக் (17,877 கையெழுத்துப் பிரதிகள்) " கருதப்படுவது அரசு கையெழுத்துப் பிரதி நூலகத்தின்" ஒரு பகுதியாகும். அதே சமயம் 11,633 கையெழுத்துப் பிரதிகளின் கூடுதல் தொகுப்பும் இங்கு உள்ளன. உள்ளது. அவற்றுள் மிகவும் அரிய கையெழுத்துப்பிரதியாகக் கருதப்படுவது 1320 ஆம் ஆண்டைச் சேர்ந்த சிகித்சாசரசங்கரகா கையெழுத்துப் பிரதியும் 906 ஆம் ஆண்டைச் சேர்ந்த உபமிதிபவபிரபஞ்சகதா கையெழுத்துப் பிரதியும் ஆகும்.