திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பணி துறப்பு (Resignation of Pope Benedict XVI) 2013ஆம் ஆண்டு, பெப்ருவரி மாதம் 28ஆம் நாள் வியாழக்கிழமை, வத்திக்கான்/மைய ஐரோப்பிய நேரம் மாலை 8:00 மணிக்கு நிகழ்ந்தது.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தமது பணியைத் துறக்கப் போகிறார் என்ற அதிர்ச்சி அறிவிப்பு முதல் முறையாக வத்திக்கான் நகரில் 2013, பெப்ருவரி 11ஆம் நாள் காலையில் வெளியிடப்பட்டது.[1][2][3]
கடந்த சுமார் 600 ஆண்டுகளாக, திருத்தந்தையர் தம் பணியைத் துறந்ததில்லை. பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தம் இறப்பு வரை பதவி வகிப்பதே வழக்கமாக இருந்தது. இப்பின்னணியில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் பணி துறக்கப்போவதாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபையிலும் உலக அளவிலும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.[4][5]
தமது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தாம் பணி துறக்கவிருப்பதாகத் திருத்தந்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்டபோது அவருக்கு வயது 85.[6][7]
பணி துறப்பு பற்றிய அறிவிப்பைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட பெப்ருவரி 11ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையால் கடைப்பிடிக்கப்படுகின்ற உலக நோயாளர் நாள் என்னும் நிகழ்ச்சி ஆகும். தாமும் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காக அந்த நாளை அவர் தேர்ந்தெடுத்தார் என்று கருதப்படுகிறது. மேலும் சில மறைச்சாட்சிகளுக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான அறிவிப்பையும் அன்று திருத்தந்தை பெனடிக்ட் உரோமையில் கூடிய கர்தினால்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
தம் பணி துறப்பு அறிவிப்பைத் திருத்தந்தை பெனடிக்ட் இலத்தீன் மொழியில் வாசித்தார்.[8][9][10] தாம் அறிவிக்கவிருக்கின்ற முடிவு திருச்சபையின் வாழ்வைப் பொறுத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.[2][11]
தாம் பணி விலகினாலும், இறைவேண்டலில் ஈடுபட்டு, திருச்சபையின் நலனுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.[12]
2013 பெப்ருவரி 13ஆம் நாள், வழக்கமான புதன் உரைநிகழ்த்தலின் போது, தமக்காகவும், தமக்குப் பின் திருத்தந்தைப் பதவியை ஏற்பவருக்காகவும் இறைவனை மன்றாடும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.[13][14]
பல நூற்றாண்டுகளாக இத்தகைய பணி துறப்பு நிகழாததால், வத்திக்கான் நகர ஆட்சித் துறையினர் பல விவரங்களைப் படிப்படியாகத்தான் தெரிவித்தனர். ஓய்வு பெறுகின்ற திருத்தந்தை எப்பெயரால் அழைக்கப்படுவார், எவ்வித உடை அணிவார், எங்கே தங்கியிருப்பார் போன்ற பல கேள்விகளுக்குப் பதில் காண வேண்டியிருந்தது.
பணி துறந்த பதினாறாம் பெனடிக்ட் "ஓய்வுபெற்ற திருத்தந்தை" (Pope Emeritus) என்று அழைக்கப்படுவார். திருத்தந்தையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சூடிக்கொண்ட "பதினாறாம் பெனடிக்ட்" என்னும் பெயர் அவருக்குத் தொடரும். திருத்தந்தைக்கே உரிய வெண்ணிற அங்கியை அவர் அணிவார். ஆயினும் அந்த அங்கியில் வேறு அணிகள் இணைக்கப்படாது. அவர் வழக்கமாக அணிந்த சிவப்பு நிறக் காலணியைக் களைந்துவிட்டு, சாதாரண காலணிகளை அணிவார்.
வத்திக்கான் நகரத்திற்கு உள்ளேயே தாம் தங்கியிருக்க பதினாறாம் பெனடிக்ட் முடிவு செய்துள்ளார். ஓய்வுபெற்ற பின் இரு மாதங்கள் காஸ்டல் கண்டோல்ஃபோ என்னும் கோடையில்லத்தில் தங்கியிருப்பார். அப்போது அவருக்கு நிலையான இருப்பிடம் வத்திக்கான் நகருக்குள் தயாரிக்கப்படும்.
அந்த நிலையான ஓய்விடம் இதுவரை ஒரு துறவற இல்லமாக இருந்து வந்தது. அந்த இல்லத்தில் சில மாற்றங்கள் செய்து முடிந்ததும் பதினாறாம் பெனடிக்ட் அங்கு நிலையாகக் குடியேறி, ஓய்வெடுப்பார்.
பதினாறாம் பெனடிக்ட் தாம் பணி துறக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து, பெப்ருவரி 13ஆம் நாள் திருநீற்றுப் புதன் அன்றும், அதைத் தொடர்ந்து பெப்ருவரி 14, 17, 23, 24, 27 ஆகிய நாள்களிலும், பல உரைகள் ஆற்றி, பொதுமக்களிடமிருந்தும், உரோமை மறைமாவட்டத்தின் குருக்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டார்.[15]
2013, பெப்ருவரி 28ஆம் நாள் பதினாறாம் பெனடிக்ட் பணிதுறப்பது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் நடந்தன. காலையில் திருத்தந்தை தம் உறைவிடத்தில் கூடியிருந்த சுமார் 70 கர்தினால்மார்களை சந்தித்தார். ஏனைய கர்தினால்மார் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வத்திக்கானுக்கு வந்துகொண்டிருந்தனர். வத்திக்கானில் ஏற்கெனவே கூடியிருந்த கர்தினால்மார்களுக்கு உரையாற்றியபோது, தமக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அவர்கள் நடுவிலிருந்து வருவார் என்றும், அவருக்குத் தாம் "நிபந்தனையற்ற கீழ்ப்படிதலையும் மரியாதையையும் அளிப்பதாகவும்" பெனடிக்ட் வாக்களித்தார். கர்தினால்மார் ஒருவர் ஒருவராகத் திருத்தந்தையை அணுகி, மரியாதை தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர், திருத்தந்தை தமக்குத் திருச்சபை ஆட்சியில் நேரடியாக ஒத்துழைப்பு நல்கிய அனைவரையும் சந்தித்து, சிறிது உரையாற்றி, ஆசி வழங்கினார்.
பின்னர் மாலை 4:45 அளவில் வத்திக்கான் நகரில் அமைந்துள்ள சிறிய உலங்கு வானூர்தி தளத்திற்குச் சென்று வானூர்தியில் ஏறினார். சுமார் 15 நிமிட பயணத்திற்குப்பின் 5:00 மணிக்கு அல்பானி குன்றில் அமைந்துள்ள உலங்கு வானூர்தி தளத்தில் இறங்கி, அங்கிருந்து, காஸ்டல் கண்டோல்ஃபோ கோடையில்லம் சென்றார்.
கோடையில்ல வளாகத்தில் கூடிவந்திருந்த மக்களுக்குச் சிறிய உரையாற்றி இறுதியாக விடைபெற்றுக் கொண்டார்.
இவ்வாறு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் சுமார் எட்டு ஆண்டு பணிக் காலம் முடிவுக்கு வந்தது (ஆட்சி தொடக்கம்: 2005, ஏப்பிரல் 19; ஆட்சி முடிவு: 2013, பெப்ருவரி 28).
திருத்தந்தை பெனடிக்ட் வத்திக்கானை விட்டு, கோடையில்லம் செல்ல உலங்கு வானூர்தியில் ஏறும் வேளையில் தமது இறுதி டிவிட்டர் செய்தியை அனுப்பினார்.
“ | உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. கிறித்துவை உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்து, அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் எப்போதும் அனுபவித்திட வாழ்த்துகின்றேன். | ” |
இவரது பணி துறப்பு பல்வேறு சர்ச்சைகளையும் ஊகங்களையும் எழுப்பியது. ஒருவேளை வத்திக்கான் மையத்தின் உள்ளே ஏற்படும் அதிகாரத்திற்கான போட்டிகள், வத்திக்கான் ஓரினச்சேர்க்கை குற்றம் சாட்டப்பட்ட பாதிரிகள் குறித்த இவரது ரகசிய விசாரணை ஆவணங்கள் போப்பின் பட்லரால் வெளியே கசிய விடப்பட்டதாலும் பணி துறப்பு முடிவை இவர் எடுத்திருக்கலாம் என்று ஊடகங்கள் ஊகிக்கத் தலைப்பட்டன.[16][17]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)