பதுவா ( Patua ) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம், பீகார், சார்க்கண்டு மற்றும் ஒடிசா மற்றும் வங்காளதேசத்தின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு கைவினைஞர் சமூகமாகும். சில பதுவாக்கள் இந்துக்களாகவும், மற்றவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கின்றனர். இந்து பதுவாக்கள் கொல்கத்தாவின் காளிகாட் மற்றும் குமார்துலி பகுதிகளிலும், மேற்கு வங்கத்தின் வேறு சில பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளனர். அங்கு இவர்கள் எண்ணிக்கையில் குறைவு. பெரும்பாலான பதுவாக்கள் உண்மையில் இந்து சமயத்திலிருந்து இசுலாத்திற்கு மாறியவர்கள் என்று நம்பப்படுகிறது. இன்று, இவர்கள் இயல்பாகவே இந்து மற்றும் இசுலாமிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பௌத்தர்களாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், இன்று இவர்களில் பெரும்பாலோர் ஏழ்மையான முஸ்லிம்களாக உள்ளனர். இவர்கள் முக்கியமாக இந்துக்களின் ஆதரவை நம்பியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களின் வர்ணம் பூசப்பட்ட சுருள்களை சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு விற்பனை செய்கின்றனர். எழுத்தாளர் பிராங்க் ஜே. கோரோம் தனது வில்லேஜ் ஆஃப் பெயின்டர்ஸ்: நெரேட்டிவ்ஸ் ஸ்க்ரோல்ஸ் ஃபிரம் வெஸ்ட் என்ற புத்தகத்தில் பதுவாக்களைப் பற்றி விவரித்து பகுப்பாய்வு செய்துள்ளார்.
பதுவாக்கள், முதலில் இந்துக்களாக இருந்தவர்கள் எனவும், தங்கள் வர்த்தகத்தைத் தொடர்வதில் நியமன நடவடிக்கைகளை பின்பற்றாததற்காக இந்து சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிஞர்கள் வாதிடுகின்றனர். [1] இவர்கள் பட்டிகர் அல்லது சித்ரகார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சித்திரக்காரர்களின் தோற்றம் பற்றி துல்லியமாக தீர்மானிப்பது கடினமாக இருந்தாலும், வரலாற்று மற்றும் புராண நினைவுகள் 13 ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் இருப்பைக் கண்டறியக்கூடியதாக உள்ளன. இந்திய சாதி அமைப்பில் இவர்களின் நிலைப்பாட்டை வெவ்வேறு கணக்குகள் விளக்குகின்றன. பதுவா மக்கள் ஒரு இந்து சமூகம் எனவும், இந்துக் கடவுள்களை ஓவியமாக வரைவதும், அதை பிரதியெடுப்பதும் இவர்களின் பாரம்பரிய தொழில். இருப்பினும் இவர்களில் பலர் முஸ்லிம்களாக உள்ளனர். இவர்களின் பெயரான “பதுவர்” என்பது “செதுக்குபவர்” என்று பொருள்படும் “போட்டா” என்ற வங்காள வார்த்தையிலிருந்து உருவானது. இவர்கள் சித்ரகார் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார்கள். அதாவது சுருள் ஓவியர் என்று பொருள். இந்த சமூகத்தின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. சென் வம்சத்தின் போது உருவாக்கப்பட்ட துணை சாதிகளின் படிநிலையால் ஏற்படும் ஒடுக்குமுறையைத் தவிர்ப்பதற்கான ஒரு உத்தியாக சித்ரகாரர்கள் இசுலாத்திற்கு மாறியிருக்கலாம்.[2][1] ஒவ்வொரு பதுவாவிற்கும் ஒரு இந்து மற்றும் ஒரு முஸ்லிம் என இரண்டு பெயர்கள் இருப்பதால், இவர்களிடையே இது மிகவும் மெதுவான செயல்முறையாக இருந்தது.
குமாரர்களைப் போலவே பதுவாக்களும் கிராம பாரம்பரியத்தில் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பிரபலமான மங்கலக் கதைகளைச் சொல்லும் சுருள்கள் அல்லது பட்டைகளை வரையும் ஓவியர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். தலைமுறைகளாக, இந்த சுருள் ஓவியர்கள் அல்லது பதுவாக்கள் பணம் அல்லது உணவுக்காக தங்கள் சுருள்கள் அல்லது பாடும் கதைகளுடன் கிராமம் கிராமமாகச் சென்றுள்ளனர். பலர் மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் இருந்து அல்லது 24 பர்கானாக்கள் மற்றும் பிர்பும், முர்சிதாபாத்திலிருந்தும் வருகிறார்கள். தட்டுகள் அல்லது சுருள்கள் சமமான அல்லது வெவ்வேறு அளவுகளில் காகிதத் தாள்களால் தயாரிக்கப்படுகின்றன. அவை ஒன்றாக சேர்க்கப்பட்டு சாதாரண சுவரொட்டி வண்ணங்களால் வரையப்படுகின்றன. முதலில் அவை துணியில் வரையப்பட்டு அதில் இடைக்கால மங்கல் கவிதைகள் போன்ற மதக் கதைகளைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டது. இன்று அவை திரைப்படங்களின் தீமைகள் அல்லது கல்வியறிவை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க பயன்படுத்தப்படுகிறது.
பதுவாக்கள் முக்கியமாக மிட்னாபூர், பிர்பூம், பாங்குராஹூக்லி, 24 பர்கானாஸ், ஹவுரா, மற்றும் புருலியா,முர்சிதாபாத் மாவட்டங்களில் காணப்படுகின்றனர். கர்பெலியா, பஞ்ச்துபி, கண்டி, கோகர்னா, அம்லாய், தோக்சின்கண்டா, ஜில்லி போன்றவை கிராமங்களிலும் இவர்கள் காணப்படுகின்றனர்.
பீகாரில் இவர்கள் முக்கியமாக மகாஹி மற்றும் மைதிலி பேசும் பகுதிகளிலும், சார்க்கண்டின்அருகிலுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றனர். வங்காளத்தில் இவர்கள் பெங்காலி பேசும் சமூகமாக இருக்கின்றனர். இவர்களுக்கு உருது பற்றி சிறிதளவே உள்ளதுஅல்லது எந்த அறிவும் இல்லை. சமூகம், தங்கள் சமூகத்திற்குள்ளாகவே நடக்கும் திருமணங்களை விரும்புகிறது. பதுவாக்கள் கிராமங்களுக்குச் சென்று தாங்கள் வரைந்த படச்சுருள்களுடன் வீட்டுக்கு வீடு செல்கின்றனர். அவர்கள் தங்கள் சேவைகளுக்கு ஈடாக ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ பெற்றுக்கொண்டு சுருள்களை அவிழ்க்கும் போது கதைகளை விவரிக்கிறார்கள். [1]
பதுவாக்களின் பாரம்பரிய தொழில் சுருள் ஓவியம், உருவப்படம் தயாரித்தல் மற்றும் பிற அலங்கார வேலைகள் ஆகும். இவர்கள் கரடுமுரடான துணிகளில் இந்து கடவுள்களின் உருவங்களை வரைகிறார்கள். இந்த ஓவியங்கள் பதாசு (பாட்) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவிலுள்ள மற்ற முஸ்லிம் கைவினைஞர்கள் குழுக்களைப் போலவே, இவர்களும் தங்கள் பாரம்பரிய தொழிலில் சரிவைக் கண்டுள்ளனர்.[1] இப்போது தினசரி கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.
பதுவா மக்கள் சுன்னி முஸ்லிம்கள். ஆனால் பல நாட்டுப்புற நம்பிக்கைகளை உள்ளடக்கியவர்கள். சிலை தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மற்ற பதுவாக்களை விட குறைவான மரபுவாதிகள். முஸ்லிம் சடங்குகள் இவர்களின் அனைத்து முக்கியமான விழாக்களிலும் இடம் பெறுகின்றன. ஆனால் இவர்களின் சுருள் ஓவியங்களில் இந்து கதைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பல இந்து பண்டிகைகளையும் இவர்கள் கொண்டாடுகின்றனர்.