பத்து மாவுங் | |
---|---|
ஆள்கூறுகள்: 5°17′5.0994″N 100°17′14.9″E / 5.284749833°N 100.287472°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | தென்மேற்கு பினாங்கு தீவு |
மாநகரம் | ஜார்ஜ் டவுன் |
அரசு | |
• நகராண்மை | பினாங்கு தீவு நகராண்மைக் கழகம் |
• மேயர் | இயூ துங் சியாங் |
இணையதளம் | mbpp |
பத்து மாவுங் (ஆங்கிலம்: Batu Maung; மலாய் Batu Maung;) என்பது மலேசியா, பினாங்கு, தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
இந்தப் பத்து மாவுங் நகர்ப் பகுதி பாயான் லெப்பாஸ் நகரம் மற்றும் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை ஒட்டி அமைந்து உள்ளது. அத்துடன் பினாங்குத் தீவில் இரண்டாவது பினாங்கு பாலத்தின் முனையத்தில் உள்ளது.[2]
பத்து மாவுங் (Batu Maung) குன்றில் அமைந்துள்ள, பினாங்கு போர் அருங்காட்சியகம் (Penang War Museum) 1930-களில் கட்டப்பட்ட பிரித்தானிய இராணுவக் கோட்டையாகும் (British Army Fort).[3] இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, டிசம்பர் 1941-இல் ஜப்பானிய இராணுவம் (Imperial Japanese Army) பினாங்கு தீவை ஆக்கிரமித்தது. அப்போது, பிரித்தானிய தளபதி ஆர்தர் பெர்சிவல் (Arthur Percival) தலைமையிலான பொதுநலவாயப் படைகள், அங்கு இருந்து பாதிப்புகள் இல்லாமல் பின்வாங்கின.[4]
பிரித்தானியர்களால் கைவிடப்பட்ட கோட்டை பின்னர் ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு அவர்களின் பயன்பாட்டின் கீழ் வந்தது. 2002-இல் போர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதுவரையில் இந்த இடம் மறக்கப்பட்ட இடமாக மறைந்து இருந்தது.[5]
பினாங்கு போர் அருங்காட்சியகத்தில் பதுங்கு குழிகள் (Bunkers), சுரங்கப்பாதைகள் (Tunnels) மற்றும் இயந்திர-துப்பாக்கி பொருத்தும் இடங்கள் (Machine-Gun Emplacements) போன்றவை பிரித்தானியப் படைகளால் விட்டுச் செல்லப்பட்ட நினைவுப் பொருட்களாகக் காட்சி அளிக்கின்றன.
இந்தக் கோட்டையின் பழைய அசல் இராணுவக் கட்டமைப்புகள் (Military Structures) மற்றும் உபகரணங்கள் இன்னும் உள்ளன. இந்த அருங்காட்சியகம் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான இடமாகவும் செயல்படுகிறது.[6]
பத்து மாவுங் நகர்ப்பகுதி பெர்மாத்தாங் டாமார் லாவுட் (Permatang Damar Laut) மற்றும் தெலுக் தெம்போயாக் (Teluk Tempoyak) போன்ற மீனவக் கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. முன்பு இது ஒரு விவசாய கிராமமாக இருந்தது. 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த நகர்ப்பகுதியும் வளர்ச்சி பெறத் தொடங்கியது.[7]
பாயான் லெப்பாஸ் கட்டற்றத் தொழில்துறை மண்டலத்தின் (Bayan Lepas Free Industrial Zone) ஒரு பகுதி உண்மையில் இந்த பத்து மாவுங் பகுதியில்தான் உள்ளது. உலக மீன் மையத்தின் தலைமையகமும் (WorldFish Center) ஆழ்கடல் மீன்பிடி துறைமுகமும் ஒரு சேர இங்கு உள்ளன.[7][8]
பத்து மாவுங் நகர்ப்பகுதி, பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருடன் வடக்குப் பகுதியில் துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை (Tun Dr Lim Chong Eu Expressway) வழியாக இணைக்கப்பட்டு உள்ளது. பினாங்கு இரண்டாவது பாலம் இந்த பத்து மாவுங் நகர்ப்பகுதியை, தீபகற்ப மலேசியாவின் செபராங் பிறை நிலப்பகுதியுடன் இணைக்கிறது.
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் அல்லது பினாங்கு இரண்டாவது பாலம் (ஆங்கிலம்: Sultan Abdul Halim Muadzam Shah Bridge அல்லது Penang Second Bridge) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது பாலம் ஆகும்.
தீபகற்ப மலேசியாவின் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் நகர்ப் பகுதியையும்; மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜார்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கிறது.
இந்த பாலம், மலேசியாவிலும்; தென்கிழக்கு ஆசியாவிலும் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. 2014 மார்சு 1-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாகத் திறக்கப்பட்டது.