பத்து லஞ்சாங் (ஆங்கிலம்: Batu Lanchang; மலாய் மொழி: Batu Lanchang; சீனம்: 峇都兰樟; ஜாவி: باتو لنچڠ) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும்.[2]
பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் (George Town, Penang) நகர் மையத்தில் இருந்து தெற்கே சுமார் 2.7 கிமீ (1.7 மைல்) தொலைவில், ஆயர் ஈத்தாம் (Air Itam) புறநகர்ப் பகுதிக்கும் ஜெலுத்தோங் (Jelutong) புறநகர்ப் பகுதிக்கும் இடையில் உள்ளது.
முன்னர் விவசாயப் பகுதியாக இருந்த பத்து லாஞ்சாங், இப்போது உயரமான கட்டிடங்களின் கலவையுடன் புறநகர்க் குடியிருப்புப் பகுதியாக மாறி விட்டது. அங்குள்ள கிரீன் லேன் (Green Lane) பூங்கா பகுதி, ஒரு பொழுதுபோக்குச் சுற்றுப்புறமாக மாறியுள்ளது.
அதே வேளையில் ஜார்ஜ் டவுன் நகரத்தையும் மற்றும் குளுகோர் நகரத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடமாகவும் இந்தப் பத்து லஞ்சாங் நகர்ப்பகுதி செயல்படுகிறது.
பத்து லாஞ்சாங் ஒரு காலத்தில் பச்சைப் பயிர்கள் விளைவிக்கப்படும் ஒரு விவசாயப் பகுதியாக இருந்தது. தென்னந்தோப்புகள் ஆயர் ஈத்தாம் மலை அடிவாரம் வரையில் நீண்டு இருந்தன. அந்த நேரத்தில், கிரீன் லேன் சாலை மட்டுமே, பத்து லாஞ்சாங் வழியாகச் சென்ற ஒரே சாலையாக இருந்தது.
கிரீன் லேன் சாலை, பசுமை மரங்கள் நிறைந்த ஒரு நாட்டுப்புறப் பாதையாக இருந்தது. இப்பகுதியின் நகரமயமாக்கல் 1950-களில் தொடங்கியது. குடியிருப்புக்கான உயரமான கட்டடங்கள் முதலில் கிரீன் லேன் பகுதியில் கட்டப்பட்டன. பின்னர் ஐலண்ட் பார்க் (Island Park); ஐலண்ட் கிளேட்ஸ் (Island Glades) போன்ற குடியிருப்புத் தோட்டங்கள் (Residential Estates) உருவாக்கப் பட்டன.
இப்போது அந்தக் குடியிருப்புத் தோட்டங்கள் பத்து லாஞ்சாங்கை ஒரு பணக்காரப் புறநகர் சுற்றுப்புறமாக மாற்றி விட்டன. அண்மையக் கால வளர்ச்சிகள் படிப்படியாக பத்து லஞ்சாங் முழுவதும் பரவி உள்ளன. அந்த வகையில் சென்ட்ரல் பார்க் காண்டோமினியம் (Central Park Condominiums) போன்ற உயரமான குடியிருப்பு அடுக்குமாடி மனைகளும் தோன்றி உள்ளன.
பத்து லாஞ்சாங் நகர்ப்பகுதிக்குள் இரண்டு தொடக்கப் பள்ளிகள், ஏழு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு தொழிற்கல்விப் பள்ளி உள்ளன. கிரீன் லேனில் பினாங்கின் இரண்டு சிறந்த சமயப்பரப்பாளர் பள்ளிகள் உள்ளன.
பினாங்கு பிரி ஸ்கூல், மலேசியாவில் மட்டும் அல்ல; தென்கிழக்கு ஆசியாவிலேயே முதல் ஆங்கிலப் பள்ளி ஆகும். அதே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் தான் மலேசியாவின் முதல் தமிழ் வகுப்பும் தொடங்கப் பெற்றது.[3]
அப்போது பள்ளியின் தலைவராக இருந்தவர் ஆர்.எஸ். ஹட்சிங்ஸ் (Robert Sparke Hutchings). இவர்தான் மலாயாவில் தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்தவர்.[4]
1816 அக்டோபர் 21-ஆம் திகதி, முதன் முதலாக பினாங்கு லவ் லேன் (Love Lane) சாலையில், மாதம் 50 மலாயா டாலர் வாடகையில் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது.[5]
அதே ஆங்கிலப் பள்ளியில் தமிழ் வகுப்பும் மலாய் வகுப்பும் ஒரு சேர நடத்தப் பட்டன. தமிழ் வகுப்பில் முதலில் 25 மாணவர்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டது.
தமிழ் வகுப்பு தொடங்கிய மறு ஆண்டு 1817 அக்டோபர் 18-ஆம் தேதி பினாங்கு பிரி ஸ்கூல், லவ் லேன் சாலையில் இருந்து பார்குவார் சாலைக்கு (Farquhar Street) மாற்றம் கண்டது.[6]