பந்தள இராச்சியம் പന്തളം രാജവംശം | |
---|---|
அண். 79 (கிபி 903) [1]–995 (கிபி 1820) | |
தலைநகரம் | கோன்னி (100 ஆண்டுகளாக) பந்தளம் (1820 வரை) |
பேசப்படும் மொழிகள் | மலையாளம் தமிழ் |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாற்று சகாப்தம் | கொல்ல ஆண்டு |
• தொடக்கம் | அண். 79 (கிபி 903) [1] |
• முடிவு | 995 (கிபி 1820) |
தற்போதைய பகுதிகள் | India பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா |
பந்தளம் அரச மரபு (Pandalam dynasty) (மலையாளம்:പന്തളം രാജവംശം), (தமிழ்:பந்தள இராச்சியம்), கொல்லம் ஆண்டில், மலையாள நாட்டின் பந்தளம் பகுதியை ஆண்ட, மதுரை பாண்டிய அரச குடும்பத்தின் ஒரு கிளையினர் ஆவார்.
தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவர் மாலிக் கபூர், தென்னாட்டின் மீதான படையெடுப்புகளின் போது, 24 ஏப்ரல் 1311 அன்று மதுரை பாண்டிய நாட்டைத் தாக்கி யானைகள், குதிரைகள் உள்ளிட்ட தங்க கருவூலங்களுடன் தில்லி திரும்பினான்.[2][3] அப்போது பாண்டிய நாட்டின் பட்டத்திற்கு போட்டியிட்டுக் கொண்டிருந்த இளவரசர்களான சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியன் குடும்பத்தினர், மாலிக் காபூர் படைகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக, தற்கால மலையாள நாட்டின் கோட்டயம் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டனர். அவர்களின் ஒரு பிரிவின் வழித்தோன்றல்கள் கோட்டயம் பகுதியில் பூஞ்சார் அரசை நிறுவினர். மற்றொரு பிரிவினரான செம்பழனூர் என்பவர்கள், மலையாள நாட்டின் மலைகளில் அலைந்து திரிந்து இறுதியாக தற்கால பத்தனம்திட்டா மாவட்டத்தில் பந்தள அரசை நிறுவினர்.[4][5]
பின்னர் இப்பந்தள அரசிற்கு ஏற்பட்ட தொடர் தாக்குதலை எதிர்கொள்ள இயலாது, தற்கால திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கு அரசின் தலைமையிடத்தை மாற்றினர். இவர்களை தென்காசி பாண்டியர்கள் என்பவர். மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர், தென்காசி பாண்டியர்களின் மீதான தொடர் தாக்குதல்களால், பாண்டிய அரச குடும்பத்தினர் மலையாள நாட்டின் செங்கோட்டை, அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை வழியாக தற்கால பத்தனம்திட்டாவில் உள்ள கோன்னி பகுதியில் கொல்ல ஆண்டு 79ல் அரசமைத்தனர். சோழர்கள் திருவிதாங்கூர் அரசை முற்றுகையிட்ட போது, பாண்டியர்களின் வழித்தோன்றல்கள், கோன்னியை விட்டு, பந்தளத்தில் கொல்லம் ஆண்டு 370ல் (கிபி 1194) அரசமைத்தனர். வேணாடு ஆட்சியாளர் பந்தள அரசை நிறுவ உதவி செய்தார். [6] திருவிதாங்கூர் அரச ஆவணங்களின் படி, பந்தள அரசு, திருவிதாங்கூருடன் நெருங்கிய நட்பு பாராட்டினார் என்று அறியப்படுகிறது. 1000 சகிமீ பரப்பளவு கொண்ட பந்தள இராச்சியத்தில் கோன்னி, ஆரியங்காவு, குளத்துப்புழை, அச்சன்கோவில், தென்காசி மற்றும் சபரிமலையின் மலைக்காட்டுப் பகுதிகள் கொண்டது.
போர்த்துகேயர்களுக்கு எதிரான குளச்சல் போரில், திருவிதாங்கூர் அரசுக்கு ஆதரவாக பந்தள அரசின் படைகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்றது.
கொல்லம் ஆண்டு 969ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர் அரசின் மலபார் பகுதிகளை கைப்பற்றினார். திப்புசுல்தானுக்கு போர் ஈட்டுத்தொகை செலுத்துவதற்கு, பந்தள அரசரிடம் ரூ. 2,20,000 திருவிதாங்கூர் மன்னர் கேட்டார். சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களிடம் வரி வசூலித்து போர் ஈட்டுத் தொகையை தவணை முறையில் பந்தள அரசர் கட்டினார். பின்னர் பந்தள அரசை திருவிதாங்கூர் இராச்சியத்துடன் 1820ல் இணைக்கப்பட்டது. பந்தளம் அரச குடும்பத்தினர்களும், வழித்தோன்றல்களுக்கும் திருவிதாங் கூர் இராச்சியம் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியது. அது முதல் சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகத்தையும் திருவிதாங்கூர் இராச்சியத்தினரே மேற்பார்வையிட்டனர். தற்போது சபரிமலை கோயில் நிர்வாகம் கேரள அரசின் தேவஸ்தான குழுவிடம் உள்ளது.
புராணங்களின் படி மாலொருபாகனுக்குப் பிறந்தவர் அய்யப்பன். பந்தள நாட்டு மன்னர் இராஜசேகரன் காட்டில் வேட்டையாடச் செல்லும் போது பம்பை ஆற்றின்அ கரையில் கண்டெடுத்த அய்யப்பன் எனும் அக்குழந்தையை காட்டிலிருந்து அரண்மனைக்கு கொண்டு வந்து மணிகண்டன் எனப்பெயரிட்டு வளர்த்தார். குருகுலத்தில் கல்வி முடித்த மணிகண்டனுக்கு பட்டத்து இளவரசு சூட்டப்பட்டது.[7]
இதனை அறிந்த முதலமைச்சர் மற்றும் பட்டத்து ராணி, அய்யப்பனுக்கு மணி முடி சூடாதிருக்க திட்டம் தீட்டினர்கள். அதன்படி ராணிக்கு ஏற்பட்ட வயிற்று வலி நீங்க புலிப் பால் கொண்டு வர, அய்யப்பனுக்கு ஆனையிடப்பட்டது. புலிப்பால் தேடி காட்டிற்குச் சென்ற மணிகண்டன், காட்டில் திரிந்து கொண்டிருந்த மகிஷி எனும் அரக்கியைக் கொன்று, புலிகள் மற்றும் அதன் குட்டிகளுடன் அரண்மனை நோக்கி வந்தார். இக்காட்சியைக் கண்ட மக்களும், அரண்மனை குடும்பத்தினரும் மணிகண்டனை பார்த்து அய்யனே, அப்பனே எனத் துதித்தனர். இதனால் மணிகண்டனுக்கு அய்யப்பன் எனப் பெயராயிற்று. பின்னர் அரச வாழ்வை துறந்த அய்யப்பன் சபரிமலையில் பிரம்ம்ச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்தார்.[8]
ஆண்டுதோறும் சபரிமலை மகர ஜோதி அன்று, பந்தளம் அரண்மனையிலிருந்து, அய்யப்பனுக்கு அணிவிக்க, தங்க நகைகளை மூன்று மரப்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படும். [9]