பந்திங் | |
---|---|
Banting | |
ஆள்கூறுகள்: 2°49′N 101°30′E / 2.817°N 101.500°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | கோலா லங்காட் மாவட்டம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 93,497 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 42700 |
தொலைபேசி எண்கள் | +60-3 |
வாகனப் பதிவெண்கள் | B |
பந்திங், (மலாய்: Banting; ஆங்கிலம்: Banting; சீனம்: 万津); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[1]
பந்திங் சுற்றுப்புறங்களில் மலைகள், காடுகள் மற்றும் வேளாண்மைப் பண்ணைகள் உள்ளன. சிலாங்கூரின் முன்னாள் அரச நகரமான ஜுக்ரா, பந்திங் நகரத்திற்கு அருகில்தான் அமைந்து உள்ளது. இந்த நகருக்கு மிக அருகில் மோரிப் கடற்கரைகள் உள்ளன.[2]
1950-ஆம் ஆண்டுகளில் பந்திங் சுற்று வட்டாரங்களில் நிறைய ரப்பர் தோட்டங்கள்; தென்னை தோட்டங்கள்; காபி தோட்டங்கள்; இருந்தன. அவற்றுள் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
1882-ஆம் ஆண்டில் சிலாங்கூர் பந்திங், ஜூக்ரா, பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. முதலில் இது ஒரு வாழைத் தோட்டம். பின்னர் ஆமணக்கு (castor) தோட்டம்; அதன் பின்னர் காபி பயிர்த் தோட்டம். அதற்கு அடுத்து தென்னைத் தோட்டமாக மாறியது. இந்தத் தோட்டத்திற்குத் தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.
இந்தத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தமிழர்கள் சொந்தமாகவே தங்களின் வீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களின் வீடுகள் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவி இருந்தன.[3]
பந்திங் வட்டாரத்தில் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD1047 | பந்திங் | SJK(T) Sg Manggis[4][5] | சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி | 42700 | பந்திங் | 210 | 18 |
BBD1054 | ஜுக்ரா Jugra |
SJK(T) Ldg Jugra, Banting[6] | ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 41050 | பந்திங் | 148 | 15 |
BBD1058 | சிம்பாங் மோரிப் Simpang Morib |
SJK(T) Simpang Morib[7] | சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி | 42700 | பந்திங் | 135 | 15 |
BBD1060 | சுங்கை சீடு Sungai Sedu |
SJK(T) Sungai Sedu[8] | சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி | 42700 | பந்திங் | 50 | 10 |
BBD1061 | சுங்கை புவாயா | SJK(T) Sungai Buaya[9] | சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி | 42700 | பந்திங் | 86 | 12 |
BBD1063 | பந்திங் | SJK(T) Pusat Telok Datok[10] | தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி | 42700 | பந்திங் | 472 | 39 |
பந்திங் சுற்றுவட்டாரத்தில் இயங்கிய தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி; பந்திங் தோட்டத் தமிழ்ப்பள்ளி; கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளி; சுங்கை சீடு தோட்டத் தமிழ்ப்பள்ளி; மற்றும் பந்திங் பட்டணத் தமிழ்ப்பள்ளி ஆகிய ஐந்து தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைத்து கூட்டுத் தமிழ்ப்பள்ளியாக 1986-ஆம் ஆண்டு தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி இயங்கத் தொடங்கியது.
தொடக்கக் காலத்தில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை என சிறிய பள்ளியாக இருந்தது. பின்னர் 1990-ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம்; சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது.
1991-ஆம் ஆண்டு முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் துன் சாமிவேலு அவர்களின் ஆதரவுடன் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப் பட்டன. மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்ததால் பொதுப் பணி துறை அமைச்சு மூன்று மாடி கட்டிடம் ஒன்றை நிறுவியது.
தற்சமயம் 18 வகுப்பறைகள், மூன்று பாலர் பள்ளி, கணினி அறை, அறிவியல் கூடம், வாழ்வியல் பட்டறை, நல்லுரை வழிக்காட்டி பிரிவு அறை, நூல்நிலையம், குறை நீக்கல் அறை, பெரிய சிற்றுண்டிச் சாலை, திடல் போன்ற போதுமான வசதிகளுடன் சிறந்த தமிழ்ப்பள்ளியாகத் திகழ்கிறது.[11]