பந்து வீச்சாளர் என்பது துடுப்பாட்ட போட்டிகளின் போது பந்துவீசும் வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் நடுகளத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கும் மட்டையாளரை நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு வீச்சலகைத் தொடர்ந்து வீச முடியும். பிறகு மீண்டும் அடுத்த வீச்சலகிலும் வீசலாம். ஒரு பந்துவீச்சாளர் வீசக்கூடிய அதிகூடிய வீச்சலகுகள் போட்டி வகையைப் பொறுத்து வேறுபடும். பந்து வீச்சாளர் ஒருவர் திறமையான மட்டையாளராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் முழுவல்லாளர் என அழைக்கப்படுவார். பந்துவீச்சாளரைப் பந்துவீச்சு முறையைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கலாம்.
வேகப்பந்து வீச்சாளர் பந்தை 160 கிமீ/ம வேகம் வரை வீசுபவர்களாவர். இவர்களே பொதுவாகப் போட்டியில் முதலாவதாகப் பந்து வீசுபவர்களாவர். இவர்கள் பந்தை வீசும் முன்னர் நீண்ட தூரம் ஓடி உந்தத்தைப் பெற்று அவ்வுந்தத்தைப் பயன்படுத்திப் பந்தை வேகமாக வீசுவர்.
மிதவேகப் பந்துவீச்சாளர், இவர்கள் பந்தை மித வேகத்தில் வீசுபவர்களாவர்.
சுழற்பந்து வீச்சாளர், இவர்கள் பந்தை மிக மெதுவாக வீசுபவர்களாவர். இவர்கள் நடுகளத்தில் படும் பந்தைச் சுழற்றுவதன் மூலம் பந்து வீசுவர். பொதுவாக சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை விட்டு கொடுப்பர் ஆனால் அவர்கள் மட்டையாளர்களை தனது தந்திரமான பந்து வீச்சின் மூலம் வீழ்த்துவர்.