பமீலா ரூக்ஸ் | |
---|---|
பிறப்பு | பமீலா ஜூனேஜா 28 பெப்ரவரி 1958[1] கொல்கத்தா, India |
இறப்பு | 1 October 2010 இந்தியா, புது தில்லி |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–2005 |
வாழ்க்கைத் துணை | Conrad Rooks (div. 1985) |
பமீலா ரூக்ஸ் (Pamela Rooks, 28 பிப்ரவரி 1958-1 அக்டோபர் 2010) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் பிரிவினையை மையமாக கொண்டு குஷ்வந்த் சிங் எழுதிய புதினத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட டிரெயின் டு பாக்கித்தான் (1998) என்ற படத்திற்காக இவர் புகழ்பெற்றார். இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்த சாதனையைத் தவிர இவர் மிஸ் பீட்டிஸ் சில்ரன் (1992) மற்றும் டான்ஸ் லைக் எ மேன் (2004) போன்ற விருதுகளைப் பெற்ற பல ஆவணப் படங்களை உருவாக்கியுள்ளார்.[2]
இவர் கர்னல் ஏ. என். ஜூனேஜா மற்றும் குடி ஜூனேஜா ஆகியோருக்கு இராணுவக் குடும்பத்தில் பமீலா ஜூனேஜா என்ற பெயரில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை நைனித்தால் மற்றும் சிம்லாவில் உள்ள உறைவிடப் பள்ளிகளில் பயின்றார். அங்கு இவர் நாடகங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.[3] பின்னர், 1970 களில் தில்லியில் மக்கள் செய்தித் தொடர்பியல் படிக்கும் போது, தில்லியை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான தியேட்டர் ஆக்சன் குழுவுடன் இணைந்து செயல்பட்டார். இது நாடக இயக்குனரான பாரி ஜான், சித்தார்த்த பாசு, ரோஷன் சேத், லிலெட் துபே, மீரா நாயர் ஆகியோரால் நிறுவப்பட்டது.[4][5]
இவர் ஒரு பத்திரிகையாளராகவும், தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில், ஒரு நேர்காணலுக்காக, இவர் சித்தார்த்தா (1972) திரைப்படத்திற்காக மிகவும் பாராட்டப்பட்ட இயக்குநர் கான்ராட் ரூக்சை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.[6]
இவரின் திருமணமானது இவர் ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளராக பின்னர் உருவாக வழிவகுத்தது. மேலும் இவர் சிப்கோ: எ ரெஸ்பான்ஸ் டு தி பாரஸ்ட் கிரைசிஸ், கேர்ள் சைல்ட்: பைட்டிங் பார் சர்வைவல், பஞ்சாப்: எ ஹியூமன் டிராகிடி, இண்டியன் சினிமா: தி விண்ட் ஆப் சேஞ்ச் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஆவணப்படங்களை உருவாக்கினார். [6] இவரது முதல் திரைப்படமானது, மிஸ் பீட்டிஸ் சில்ட்ரன் (1992), என்ற இவரது அதே பெயரிலான ஒரு புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[7] இந்தப் படம் இவருக்கு தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக இயகுநருக்கான இந்திரா காந்தி விருதைப் பெற்றுத் தந்தது. 1947 இந்தியப் பிரிவினையை அடிப்படையாக கொண்டு, எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய வரலாற்றுப் புதினமான, டிரைன் டு பாக்கிஸ்தான் (1956) புதினத்தை அடிப்படையாக கொண்ட படத்தை 1998 இல் பமிலா உருவாக்கினார். முன்னதாக இந்தப் புதினத்தை திரைப்படமாக மாற்ற பலர் முயன்ற நிலையில் தோல்வியைத் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் இந்தியத் திரைப்பட தணிக்கை வாரியத்தில் சிக்கலில் சிக்கியது ஆனால் இறுதியில் தீர்ப்பாயத்திற்குச் சென்ற பின்னர், அங்கு சில பகுதிகள் மௌனிக்கப்பட்டு வெளியிட அனுமதி வழங்கபட்டது.[8]
இவரது அடுத்த படமான டான்ஸ் லைக் எ மேன் 2004 இல் வெளியானது.[9][10] இப்படம் 2003 ஆம் ஆண்டுக்கான ஆங்கிலத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.
2005 நவம்பரில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது தில்லியில் வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் மாருதி ஆல்டோ கார் கட்டுப்பாட்டை இழந்து இவர் வந்த டொயோட்டா லேண்ட்க்ரூசர் மீது மோதியதில் இவருக்குப் பலத்த மூளைக் காயம் ஏற்பட்டது. பின்னர் இவர் கோமா நிலைக்குச் சென்று ஐந்து ஆண்டுகள் அந்த நிலையில் இருந்தார்.[11][12] கோமாவிலிருந்து மீளாமலேயே தன் 52 வது வயதில் 2010 அக்டோபர் முதல் நாளன்று அதிகாலையில் டிபன்ஸ் காலனியில் இருந்த இவரது வீட்டில் மாரடைப்பால் இறந்தார்.[2]