பமுல்வே (Pemulwuy, 1750 – 2 சூன் 1802)[1] ஈயோரா வம்சாவளியைச் சேர்ந்த ஆத்திரேலியத் தொல்குடி அரசியல் தலைவர் ஆவார். இவர் 1750 ஆம் ஆண்டளவில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பொட்டனி விரிகுடா பகுதியில் பிறந்தார். 1788 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய ஐரோப்பிய குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவர்.[2] அவர் ஈயோரா மக்களின் பிட்ஜிகல் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.[3] . பிட்ஜிகல் மக்கள் சிட்னியில் உள்ள தூங்காபி மற்றும் பரமட்டா பிரதேசங்களின் பூர்வகுடிகளாவார்.[4] .
பொட்டனி விரிகுடா அருகே வசித்து வந்த பமுல்வே, தான் வேட்டையாடும் இறைச்சியை போதிய உணவு இல்லாமல் இருந்த குடியேற்ற வாசிகளுடன் பண்டமாற்று முறையில் பகிர்ந்திருக்கிறார்.[5] ஆயினும் 1790 ஆம் ஆண்டில் அவர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கொரில்லாப் போர் தொடங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் வரை நீடித்த இந்த போர் அவர் ஆங்கிலேயரால் படுகொலை செய்யப்படும் வரை தொடர்ந்தது.[2]
பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போர்களில் முக்கியமான ஹோக்ஸ்பெரி மற்றும் நேப்பியன் போர்களில் பமுல்வே ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தார். 1797ல் பமுல்வேயின் தலைமையில் இடப்பெற்ற பரமட்டா போர் அந்த காலகட்டத்தின் ஒரு முக்கியமான போராக கருத்ப்படுகிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 100 பிட்ஜிகல் வீரர்கள் பக்குபற்றியிருக்காலம் என்று மதிப்பிடப்படுகிறது.[6]