பம்பா சரோவர் Pampa Sarovar | |
---|---|
அமைவிடம் | கருநாடகம் |
ஆள்கூறுகள் | 15°21′13.55″N 76°28′38.55″E / 15.3537639°N 76.4773750°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
பம்பா சரோவர் (Pampa Sarovar, கன்னடம்:ಪಂಪ ಸರೋವರ) இது கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத்தின் ஹம்பியிலுள்ள ஒரு ஏரி. துங்கபத்திரை ஆற்றுக்குக்குத் தெற்கே அமைந்துள்ள புனிதமான ஏரியாக இந்துக்கள் கருதுகின்றனர். இந்து சமய இறையியல் படி, ஐந்து புனித ஏரிகள் உள்ளன. அவை கூட்டாக பஞ்ச-சரோவர் என அழைக்கப்படுகின்றன: மானசரோவர், பிந்து சரோவர், நாராயணன் சரோவர், பம்பா சரோவர் மற்றும் புஷ்கர் சரோவர்.[1] இவை பாகவத புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இந்து இதிகாசங்களுள் பார்வதியின் வடிவமான பம்பா, சிவபக்தியைக் காண்பிப்பதற்காக தவம்செய்த இடமாக பம்பா சரோவர் கருதப்படுகிறது.[3] இராமனின் வருகைக்காக அவரது பக்தையான சபரி காத்திருந்த இடமாக இராமாயணத்தில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹொசபேட்டேயிலிருந்து ஆனேகுந்திக்கு செல்லும் வழியில் மலைகளின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் பம்பா சரோவர் ஏரி அமைந்துள்ளது. அனுமன் கோயிலின் அடிவாரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஏரியில் தாமரை மலர்கள் நிறைந்துள்ளது. ஏரியைப் பார்த்தவாறு ஒரு இலட்சுமி கோயிலும் சிவன் கோயிலும் உள்ளன. ஏரியையடுத்து மாமரத்தின் கீழ் சிறிய பிள்ளையார் சன்னதி உள்ளது.[4]