வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | பெரியதாள் |
உரிமையாளர்(கள்) | காமா குடும்பம் |
நிறுவுனர்(கள்) | ஃபர்தூன்ஜீ மர்சபான் |
ஆசிரியர் | நிலேஷ் எம் டேவ்[1] |
நிறுவியது | 1822 |
மொழி | குஜராத்தி |
தலைமையகம் | இந்திய ஒன்றியம், மும்பை, கோட்டை, ஹார்னிமன் வட்டம் தோட்டங்கள் |
இணையத்தளம் | bombaysamachar |
பம்பாய் சமாச்சர் (Bombay Samachar), இப்போது மும்பை சமாச்சார் என்பது இந்தியாவில், தொடர்ந்து வெளியிடப்பட்டுவரும் மிகப் பழமையான செய்தித்தாள் ஆகும். 1822 ஆம் ஆண்டில் ஃபர்தூன்ஜீ மர்சபான் என்பவரால் நிறுவப்பட்ட இது குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. [2]
ஆசியாவின் மிகப் பழமையான, தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட செய்தித்தாளான பம்பாய் சமாச்சார் முதன்முதலில் 1822 சூலை முதல் நாள் வெளியிடப்பட்டது. அப்போது மூன்று சிறிய குவார்டோ தாள்களை மட்டும் கொண்டிருந்தது. 10க்கு 8 அங்குலம் அளவில் 14 பக்கங்கள் அச்சிடப்பட்ட விஷயங்களைக் கொண்டிருந்தது.
இந்த முதல் இதழின் உள்ளடக்கங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமானது, அந்த நாட்களில் ஒரு இந்திய பத்திரிகை என்பது எப்படிபட்டது என்பது பற்றிய ஒரு புரிதலை தரும். முதல் தாளில் விளம்பரங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு இறப்பு செய்திகளைப் பற்றியும், ஒன்று சில சொத்துக்களை விற்பது பற்றியும் என, இவை அனைத்தும் பார்சிகளுடன் தொடர்புடையவை. அரசு மற்றும் நீதிமன்ற நியமனங்கள் மற்றும் மாற்றங்கள் பற்றிய செய்திகள் நான்கு பத்திகளில் குறிப்பிடப்பட்டன. மேலும் வணிகம் சார்ந்த செய்திகள்; சொத்து விற்பனை, பம்யாயிலிருந்து கப்பல்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வருவது, ஐரோப்பியரின் இறப்புச் செய்திகள், துறைமுகத்தில் புறப்படவிருக்கும் கப்பல்கள் போன்ற விசயங்கள்; இந்திய அரசிதழ் மற்றும் கல்கத்தா குரோனிக்கிள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கல்கத்தா (இப்போது கொல்கத்தா) செய்திகளுக்கு ஆறு பத்திகள் கொடுக்கப்பட்டன; ஒரு பத்தியில் மதராசு (இப்போது சென்னை) நகரின் அரசிதழின் செய்தி; லண்டன் செய்திகளுக்கு இரண்டு பத்திகள், அதே நேரத்தில் பத்து வரிகளில் குறுகிய பத்தியில் சீனாவின் கேன்டனில் இருந்து வந்த அபின் விலையைப் பற்றிய செய்திகளுக்கு அளிக்கபட்டிருந்தது. மேலேயுள்ள நியமனங்கள் பற்றிய சிறு பத்தியைத் தவிர உள்ளூரான பம்பாய் குறித்தவை மிகக் குறைவே.
இந்த பத்திரிக்கை 1832 வரை வார இதழாகவும், 1855 வரை வாரம் இருமுறை இதழாகவும், அதன் பின்னர் நாளிதழாகவும் தொடர்ந்து வளர்ந்து, மேற்கு இந்தியாவின் முதன்மையான செய்தித்தாள்களில் ஒன்றாக மாறியது. இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் குஜராத்தி மக்களில் பெரும் பகுதியினரால் படிக்கப்படுகிறது. இந்த பத்திரிக்கையின் நிறுவனரான ஃபர்தூன்ஜீ மர்சபன் ஒரு பார்சி அறிஞராவார். அவர் மேற்கு இந்தியாவின் பத்திரிகை மட்டுமல்லாமல், குஜராத்தி மொழியில் அச்சிடப்பட்ட அனைத்து இலக்கியங்களுக்கும் முன்னோடியாக இருந்தார். அவர் 1812 ஆம் ஆண்டில் முதல் பூர்வீக பத்திரிகையை நிறுவினார். முதல் வங்காள நாட்காட்டி கல்கத்தாவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே 1814 இல் குஜராத்தி நாட்காட்டியை கொண்டுவந்தார். பின்னர் அவர் 1822 இல் தனது செய்தித்தாளான பம்பாய் சமாச்சாரை வெளியிட்டார்.
பம்பாய் சமாச்சர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த பத்திரிக்கை அலுவலகத்துக்கு வந்து பல அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார்கள்.
1933 ஆம் ஆண்டில் இந்த இதழானது காமா குடும்பத்தின் கைகளில் வந்து சேர்நதது. தற்போதைய வெளியீட்டாளர் மற்றும் தற்போதைய இயக்குனர் ஹார்முஸ்ஜி என் காமா என்பவர் காமா குடும்பத்தின் தற்போதைய தலைமுறையினராவர். காமா குடும்பத்தின் கைகளில் இந்த பத்திரிக்கை வருவதற்கு முன்பு இது பல்வேறு கைகள் மாறியது. [3] இது பின்னர் வளர்ந்து விரிவடைந்துள்ளது. இன்று அச்சுத் துறையில் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதன் தினசரி பதிப்பு நான்கு வண்ணங்களில், கலை அம்சங்களை உள்ளடக்கியதாக முழு வண்ண அதிவேக மறுதோன்றி அச்சகங்களில் சிரமமின்றி அச்சிடப்படுகிறது.