பரமார்த்தி | |
---|---|
பரம-பட்டாரக மகாராஜாதிராஜா பரமேசுவரன், கலஞ்சராதிபதி | |
செகசபுக்தியின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1165-1203 பொ.ச. |
முன்னையவர் | மதனவர்மன் அல்லது இரண்டாம் யசோவர்மன் |
பின்னையவர் | திரைலோக்கியவர்மன் |
அரசமரபு | சந்தேலர்கள் |
தந்தை | இரண்டாம் யசோவர்மன் |
பரமார்த்தி (Paramardi) (பொ.ச. 1165-1203 ) என்பவர் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தார். பொ.ச.1182-1183இல், பிருத்திவிராச் சௌகான் சந்தேலர்களின் தலைநகரான மகோபாவைத் தாக்கி இவரைத் தோற்கடித்தார். பரமார்த்தி அடுத்த சில ஆண்டுகளில் சந்தேல அதிகாரத்தை மீட்டெடுத்தார். ஆனால் பொ.ச.1202-1203இல் கோரி ஆட்சியாளர் குத்புத்தீன் ஐபக்கால் தோற்கடிக்கப்பட்டார்.
பரமார்த்தியின் பட்டேசுவரக் கல்வெட்டு, இவர் தனது தந்தை யசோவர்மனுக்குப் பின் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகிறது. இருப்பினும், மற்ற சந்தேல கல்வெட்டுகள் (இவரது சொந்த கல்வெட்டுகள் உட்பட) இவர் தனது தாத்தா மதனவர்மனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகிறது. மதனவர்மன் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதால், யசோவர்மன் மிகக் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்திருக்கலாம் அல்லது ஆட்சி செய்யவில்லை. [1]
நாட்டுப்புற புராணமான பார்மல் ராசோவின் கூற்றுப்படி, பரமார்த்தி 5 வயதில் அரியணை ஏறியதாகத் தெரிகிறது. ஒரு அஜய்கர் கல்வெட்டு இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதாகத் தோன்றுகிறது: பரமார்த்தி சிறுவயதில் தலைவராக இருந்ததாகக் கூறுகிறது. [2]
இவர், கல்வெட்டுகளில் பரமார்த்திதேவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அல்ஹா-காண்ட் போன்ற இடைக்கால பார்டிக் புராணக்கதைகள் இவரை பரமளா அல்லது பரிமளா என்று அழைக்கின்றன. நவீன வடமொழிகளில், இவர் பரமார்திதேவ், பார்மர், பரமள தேவ் அல்லது பரிமள சந்தேலன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட ஒரு தங்க நாணயம், அமர்ந்திருக்கும் தேவியின் உருவத்துடன், இவரது பெயரை சிறீமத் பரமார்த்தி என்று வழங்குகிறது. [3]
சந்தேல ஆட்சியாளர்களின் சக்திவாய்ந்த கடைசி ஆட்சியாளராக இருந்தார். பரமலா ராசோ ( பர்மல் ராசோ அல்லது மஹோபா காண்ட் ), பிருத்விராஜ் ராசோ மற்றும் அல்ஹா-காண்ட் ( அல்ஹா ராசோ அல்லது அல்ஹாவின் பாடல்கள்) போன்ற பல நாட்டுப்புற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த நூல்கள் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், அவற்றின் பெரும்பாலான உள்ளடக்கம் பிருத்விராஜ் சௌஹானையோ அல்லது பரமார்தியையோ புகழ்வதற்காக புனையப்பட்டது. எனவே, இந்த நூல்கள் சந்தேகத்திற்குரிய வரலாற்றுத்தன்மை கொண்டவை. எனவே, பரமார்த்தியின் ஆட்சியின் பெரும்பகுதி தெளிவற்ற நிலையில் உள்ளது. [4] [5]