பரிமேலழகர்

பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். இவை பலரும் அறிந்த செய்தி. அத்துடன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை செய்துள்ளதாக ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது (அது இவருடையதன்று என்றும் சிலர் கூறுவர்[1]). இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் பிற்பட்டவர் இவரே. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புகளும் காணப்படுகின்றன. காலிங்கர், பரிதியார் காலம் 13 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், இவரது காலம் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளலாம் என்பது பொதுக் கருத்து.

தமது உரையில் இவர் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார்.

காலம்

[தொகு]

இவரது காலம் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு என்பதை உறுதி செய்யத் தெளிவான சான்றுகள் உள்ளன. [2]

  1. உமாபதி சிவாசாரியார் [3] செய்ததாகக் கூறப்படும் பாடல் ஒன்று பரிமேலழகர் உரையைக் குறிப்பிடுகிறது. [4] எனவே பரிமேலழகர் காலம் உமாபதியார் காலத்துக்கு முந்தியது எனக் காட்டுவர். இந்தப் பாடலில் சித்தியார் முதலான பிந்திய கால நூல்கள் சொல்லப்படுவதால் இப்பாடலை உமாபதியார் பாடல் எனக் கொள்வதற்கில்லை.
  2. நச்சினார்க்கினியார் [5] திருமுகாற்றுப்படைக்குத் தாம் எழுதிய உரையில் பரிமேலழகர் உரையை மேற்கோள் காட்டி மறுத்துள்ளார். இதனை உ. வே. சாமிநாதையர் சுட்டிக்காட்டியுள்ளார். [6] இதனால் பரிமேலழகர் நச்சினார்க்கினியருக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.
  3. பரிமேலழகர் தம் உரையில் போசராசன் [7] வடமொழி நூலைக் குறிப்பிட்டுள்ளார். [8] எனவே 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
  4. பரிமேலழகர் தொல்காப்பியத்தில் இல்லாத நன்னூல் [9] குறியீட்டு ஒருபொருட் பன்மொழி என்பதனைப் பயன்படுத்துவதால் [10] 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
  5. காஞ்சி அருளாளப் பெருமான் கோயில் கல்வெட்டு [11] குறிப்பிடும் பரிமேலழகிய பெருமான் தாதரே [12] திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் என்பது அறிஞர் [13] கருத்து. இதனால் பரிமேலழகர் காலம் 1271ஐ ஒட்டியது எனத் தெரிகிறது.

தொண்டைமண்டல சதகத்தில்

[தொகு]
"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற்
பரித்த உரையெல்லாம் பரிமே லழகன் 
தெரித்தவுரை யாமோ தெளி"

என்று தொண்டை மண்டல சதகம் பரிமேலழகரின் பெருமை கூறுகின்றது.

தொண்டை மண்டல சதகம் 41ஆம் செய்யுள் இவர் காஞ்சிபுரத்தவர் என்று குறிப்பிடுகின்றது.[1]

பரிமேலழகர் உரை எழுதிய நூல்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. 1.0 1.1 திருக்குறள் பரிமேலழகருரையுடன், திருக்குறள் பதிப்பு நிதி வெளியீடு; ஸ்ரீ காசிமடம் ; திருப்பனந்தாள்; 1968
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 64. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. காலம் கி.பி. 1313-ஐ ஒட்டி
  4. வள்ளுவர் சீர் அன்பர் மொழி வாசகம் தொல்காப்பியமே,
    தெள்ளு பரிமேலழகர் செய்த உரை - ஒள்ளிய சீர்த்,
    தொண்டர் புராணம் தொகு சித்தி ஓர் ஆறும்,
    தண்டமிழின் மேலாம் தரம். (இது வெண்பா)

  5. 14 ஆம் நூற்றாண்டு
  6. திருமுருகாற்றுப்படை அடி 106 இருவர் உரை ஒப்பீடு
  7. வடநாட்டில் தாரா நகரைத் தலைநகராகக் கொண்டு 11 ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன். இவன் செய்த 'சிருங்கார பிரகாணம்' என்னும் நூலின் முதல் பிரகாசத்து ஆறாம் சுலோகத்தில் உள்ள உரையையே பரிமேலழகர் குறிப்பிடுகிறார் என்று மு. ராகவையங்கார் குறிப்பிட்டிருக்கிறார்
  8. ஈண்டு இன்பம் என்பது ஒரு காலத்து ஒரு பொருளான் ஐம்புலனும் நுகர்தல் சிறப்புடைத்தாய காம இன்பத்தினை. இச் சிறப்பு பற்றி வடநூல் போசராசனும் சுவை பல என்று கூறுவார் கூறுக. யாம் கூறுவது இன்பச் சுவை ஒன்றனையுமே என இதனையே மிகுத்துக் கூறினான் (பரிமேலழகர் - காமத்துப் பால் முன்னுரை)
  9. நன்னூலின் காலம் 1212
  10. திருக்குறள் 571, 863 உரை
  11. கி. பி. 1271 (சகம் 1193) தெலுங்கச் சோழன் விசயகண்டன் என்பானது 22 ஆம் ஆண்டு
  12. ஆமூர் நீலகங்கரையன் என்ற சிற்றரசன் ஒருவன் வண்துவரைப் பெருமாளான பரிமேலழகிய பெருமான் தாதருடைய 500 குழி நந்தவனத்தை விலைக்குப் பெற்று அதனை அக் கோயில் பெருமாளுக்கு திருமாலைப் புறமாக அளித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி
  13. மு. ராகவையங்கார்