பர்கூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°28′00″N 74°44′59″E / 13.4668°N 74.7498°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | குந்தகன்னடம், துளு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பர்கூர் (Barkur) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பிரம்மவரம் வட்டத்திலுள்ள ஓசலா, கனேஅள்ளி, கச்சூர் ஆகிய மூன்று கிராமங்களின் தொகுப்பாகும். இந்த இடம் சீதா ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இது 'கோயில் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.[1]
பண்டைய நகரமான உடுப்பியிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், பிரம்மவரத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. சீதா ஆறு இதன் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் இணைகிறது.[2]
அலுபா இராச்சியத்தின் பண்டைய தலைநகராக பர்கூர் இருந்தது. அலுப அமன்னர்கள் கதம்ப மன்னர்களின் கீழ் ஆளுநர்களாக இருந்துள்ளனர். இது பரகண்யபுரம் என்றும் பின்னர் பரக்கனூர் என்றும் அழைக்கப்பட்டது.[3] ஆட்சியாளர்கள் 'துளுவ ஆட்சியாளர்கள்' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் துளு மொழி பேசினார்கள். இங்கு காணப்படும் பல பழங்காலக் கல்வெட்டுகள் கன்னட மொழியில் உள்ளன. சில சமசுகிருதத்திலும், சில துளுவிலும் உள்ளன. இவை கர்நாடக வரலாற்றின் இன்றியமையாத பகுதியாகும். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கரையோர நகரமான பர்கூர் ஒரு செழிப்பான துறைமுகமாக இருந்தது.
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் பர்கூர் விஜயநகர இராச்சியத்தின் கீழ் ஒரு மாகாணமாக இருந்ததாக தொல்பொருள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் ஹரிஹர ராயனின் ஆட்சியின் கீழ் இந்த மாகாணத்தின் ஆளுநராக பண்டரிதேவன் என்பவன் இருந்துள்ளான்.[4] அலுபாக்களாலும், விஜயநகர ஆளுநர்களாலும் கட்டப்பட்ட இரண்டு கோட்டைகளின் எச்சங்கள் உள்ளன. இது சில காலத்திற்கு போசள மன்னர்களின் துணை தலைநகராகவும் இருந்தது.
கேரள முஸ்லிம் பாரம்பரியத்தின் படி , இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாக பர்கூர் இருந்தது. சேரமான் பெருமாள்களின் தொன்மக்கதைகளின்படி, இந்தியாவின் முதல் பள்ளிவாசல் பொ.ச. 624 இல் கொடுங்கல்லூரில் கட்டப்பட்டது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளில் இஸ்லாத்திற்கு மாறிய (சி. 570). –632) சேர வம்சத்தின் கடைசி ஆட்சியாளரின் (சேரமான் பெருமாள்) ஆணையில் இதைப் பற்றிய விவரம் காணப்படுகிறது.[5][6][7][8] சேரச் சக்கரவர்த்திகளின் கதை என்ற நூலின் கூற்றுப்படி, கொடுங்கல்லூர், கொல்லம், மடாய், பர்கூர், மங்களூர், காசர்கோடு, கண்ணூர், தர்மடம், கொயிலாண்டி, சாலியம் (சாலியம் பரப்பநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது) ஆகிய இடங்களில் காணப்படும் பள்ளிவாசல்கள் மாலிக் தினாரின் காலத்தில் கட்டப்பட்டவை. மேலும், இந்தியத் துணைக்கண்டத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று.[9] காசர்கோடு நகரிலுள்ள தளங்கரையில் மாலிக் தினார் இறந்தார் என்று நம்பப்படுகிறது.[10]
பர்கூரிலுள்ள கோயில்களில் ஒரு தனித்துவமான கட்டிடக்கலை உள்ளது. சாய்வான பூச்சுகள்-ஓடுகள் கொண்ட கூரைகள் கேரள கோவில்களுடன் ஒத்திருக்கின்றன. ஆனால் அவற்றில் கோபுரங்கள் இல்லை. இது திராவிட பானியிலான தென்னிந்திய கோயில்களின் பொதுவான அம்சமாகும்.
இங்குள்ள சௌலிகேர் கணபதி கோயில் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது,[11] சோழர் காலத்தில். பைராகி கணபதி கோயில் முழுக்க முழுக்க கல்லிலிருந்து சாய்ந்த கல் கூரை மற்றும் பொறிக்கப்பட்ட கல் தூண்களால் வெட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கல் சுவர்கள் அழகிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பஞ்சலிங்கேசுவரர் கோயில், பர்கூரின் மிகப்பெரிய, பாமையான கோயிலாகும். கோயிலின் சுற்றுவட்டப் பாதையைச் சுற்றியுள்ள தூண்கள் புராணக் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விஜயநகரப் பேரரசின் நிறுவனர் முதலாம் ஹரிஹரர் என்பவனால் பர்கூர் கோட்டை கட்டப்பட்டது. கோட்டை 20 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. கோட்டை இடிபாடுகளுடன் காணப்படுகின்றன. படைப்பிரிவினர் பயன்படுத்திய குதிரைகளையும், யானைகளையும் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தூண்கள் உள்ளன. இந்த கோட்டை பல ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஒரு சில ஏக்கர் நிலத்தில் தோண்டப்பட்டது,.இது இப்போது ஒரு சுற்றுலா தளமாக உள்ளது.[12]