பல்லிகாவி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 14°23′38″N 75°14′38″E / 14.3939°N 75.2439°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிமோகா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பல்லிகாவி (Balligavi) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்திலுள்ள சிகாரிபுரம் வட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது இன்று பெலகாமி அல்லது பலகாமே என்றும் அழைக்கப்படுகிறது. பாலிகிராமா, தட்சிண கேதாரா, பள்ளிகேம், பள்ளிகிரேம் போன்றவையும் இதன் பழங்கால பெயர்களாக அறியப்படுகிறது. (தட்சிண கேதரா என்றால் தெற்கின் கேதார்நாத். பழங்கால இடமான, இது பழங்கால நினைவுச்சின்னங்களுக்கும் பெயர் பெற்றது. கிராமம் சிமோகா நகரத்திலிருந்து 72 கி.மீ தொலைவிலும், சிகாரிபுரம் நகரத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலும், சிரலகொப்பாவிலிருந்து 2.3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கன்னடத்தில் பல்லி என்றால் தவழும் திராட்சை என்று பொருள்.
தொல்லியல் ஆய்வுகளின்படி, பல்லிகாவி சாதவாகனர்கள் - கதம்பர்கள் காலத்தைச் சேர்ந்தது. இங்குள்ள சதுர்முக இலிங்கம் (நான்கு முகம் கொண்ட இலிங்கம்) அவர்களின் பாணியில் அமைந்துள்ளது. கி.பி 4-5ஆம் நூற்றாண்டில் கதம்ப வம்சத்தின் பனவாசி பகுதியின் கீழ் இந்த பகுதி இருந்தது. பல்லிகாவிக்கு அருகிலுள்ள தலகுந்தா கல்வெட்டுகள் போன்ற முக்கியமான கதம்பர்களின் கால கல்வெட்டுகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[1]
பல்லிகாவியின் பொற்காலம் 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்ததெனத் தெரிகிறது.[2] பல்லிகாவி என்ற பெயரைக் குறிப்பிடும் முந்தைய கல்வெட்டு பொ.ச. 685 பாதமி சாளுக்கிய கல்வெட்டு ஆகும். இந்த காலங்களில் பல்லிகாவியில் ஆறு மடங்கள், மூன்று புரங்கள், ஐந்து வித்யாபீடங்கள், ஏழு பிரம்மபுரிகள் இருந்துள்ளது. இங்கிருந்த மடங்கள் சைவம், வைணவம், சைனம் , பௌத்தம் போன்ற சமயங்களைச் சார்ந்திருந்தது. கேதாரேசுவர மடம் காளாமுக சைவர்களின் ஆதரவையும், கோடியா மடம் போசளப் பேரரசர்களின் ஆதரவையும் கொண்டிருந்தது என்பது இந்த இடத்தை மதச் செயல்களில் ஒன்றாகக் குறிக்கிறது. ஒரு பண்டைய பல்கலைக்கழகம் இங்கு இருந்ததாகவும் பதிவுகள் குறிப்பிடுகின்றன.[3] இந்த நகரத்தில் 54 கோயில்களும் இருந்துள்ளன. அந்த நேரத்தில் 60,000 குடியிருப்பாளர்களையும் கொண்டிருந்தன எனவும் தெரிகிறது.
இன்று, பல்லிகாவி ஒரு அமைதியான நகரமாக, அதன் அன்றாட நடைமுறைகளில் விவசாயத்தைப் பின்பற்றி வருகிறது. மேலும், 11ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கேதேரேசுவரர் கோயிலையும், திரிபுரந்தகேசுவரர் கோயிலையும் சுற்றியே அதன் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
பல்லிகாவி ஒரு அசுர மன்னனின் தலைநகராக இருந்ததாகவும், எனவே பலிபுரா (மகாபலி நகரம்) என்றும் அழைக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தில் இருந்தபோது இங்கு வந்து பஞ்சலிங்கத்தை நிறுவியதாகவும் தெரிகிறது. எனவே இங்குள்ள நன்கு அறியப்பட்ட கோயிலுக்கு பஞ்சலிங்கேசுவரர் கோயில் என்று பெயர் வந்துள்ளது.
பல்லிகாவி வீசைவத் துறவியான அல்லாமா பிரபு [4] என்பவரின் பிறப்பிடமாகும். மேலும், அருகிலுள்ள உதுகானியில் (உடுதாடி என்றும் அழைக்கப்படுகிறது) பிறந்த வசன கவிஞர் அக்கா மகாதேவி நெருக்கமாக தொடர்புடையது.[5] இவர் அல்லாமா பிரபு, வீரசைவ இயக்கத்தின் நிறுவனர் பசவண்ணா ஆகியோரின் சமகாலத்தவர். போசள மன்னன் விஷ்ணுவர்தனனின் இராணியான சாந்தலா தேவியின் பிறப்பிடமும் இதுதான்.[6] பல பிரபலமான போசள சிற்பிகளான தசோஜா, மல்லோஜா, நடோஜா, சித்தோஜா ஆகியோரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இங்கு அமைந்துள்ள மூன்று கோபுரங்களுடன் கேதாரேசுவர் கோயில் இடைக்கால மேலைச் சாளுக்கிய-போசளக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.[7] மைசூர் தொல்பொருள் துறையின் அறிக்கையின்படி கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு கூட்டு பாணியின் பழமையான எடுத்துக்காட்டு இது. இந்த கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. மேலும், மூன்று பக்கங்களிலும் நுழைவு வாயில் உள்ளது. பக்கங்களிலுள்ள நுழைவாயில் மேலைச் சாளுக்கிய பாணியில் அமைந்துள்ளது.[8] கருவறையில் கருப்புப் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட இலிங்கம் உள்ளது. தெற்கே உள்ள சன்னதியில் பிரம்மாவின் சிலையும், வடக்கே உள்ள சன்னதியில் விஷ்ணுவும் சிலையும் உள்ளது. கோயிலின் வெளிப்புறத் திட்டம் போசளர்களின் வடிவமைப்பாகும்.[9] மண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களில் பெண்கள் நகைகளை அணிந்திருப்பது போன்ற சிறப்பான சிற்பங்கள் காணப்படுகின்றன. கி.பி 1060இல் போசள மன்னன் வினயாதித்யானால் இரண்டு போசளச் சின்னங்கள் சேர்க்கப்பட்டன.
திரிபுரந்தகர் கோயில் (திரிபுரந்தகேசுவரர் என்றும் அழைக்கப்படும் இந்தக் கோயில் பொ.ச. 1070 களில் [10] மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. இந்தக் கோயில், தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், கோவில் வெளிப்புறச் சுவர்களிலுள்ள அலங்கார வளைவுகள் பாலினச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இந்த சித்தரிப்புகள் சாளுக்கிய கலையில் அரிதாகவே கருதப்படுகின்றன.[11] இடைக்காலத்தில், பல்லிகாவி பல மத நம்பிக்கைகளைக் கற்கும் இடமாகவும், சாளுக்கியர்களால் கட்டப்பட்ட பல நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு இடமாகவும் இருந்தது.[12] 80க்கும் மேற்பட்ட இடைக்கால கல்வெட்டுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இந்து ( சைவம், வைணவம் ), சமணம், பௌத்த மரபுகளைச் சேர்ந்தவை. இந்த கல்வெட்டுகள் மற்றவற்றுடன், கோயில்களைக் கட்டுவதையும் விவரிக்கின்றன.[13]