பல்லினவைரம் (Heterodiamond) என்பது போரான், கார்பன், நைட்ரசன் தனிமங்களால் ஆக்கப்பட்ட ஒரு மீக்கடின வேதிப்பொருளாகும். உயர் வெப்பநிலை, உயர் அழுத்தத்தில் இப்பொருள் உருவாகிறது. உதாரணமாக வெடிக்ககூடிய அதிர்ச்சி அலைகள் வைரமும் கனசதுர போரான் நைட்ரைடும் கலந்த கலவையின் மீது செலுத்தப்படுகின்றன. பல்லின வைரம் என்பது நானோ-படிகங்களுடன் உறைந்த ஒரு பல்படிகப் பொருளாகும். மற்றும் இதன் நுண்தூள் வடிவம் ஆழ்ந்த கருநீலம் தோய்ந்து காணப்படுகிறது. பல்லினவைரம் வைரத்தைப் போன்ற கடினத்தன்மையும் கனசதுர போரான் நைட்ரைடு போல சிறந்த வெப்பத்தடைப் பொருளாகவும் செயல்படுகிறது. கார்பன் மற்றும் பல்லின அணுக்களுக்கு இடையில் உள்ள sp3 σ- பிணைப்புகள் வைரத்தின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளமை இச்சிறப்புப் பண்புகளுக்கு காரணமாகின்றன[1].
கனசதுர BC2N சேர்மத்தை கிராபைட்டு போன்ற BC2N சேர்மத்திலிருந்து தயாரிக்க முடியும். இதற்கு 18 கிகாபைட்டு அழுத்தமும் 2200 கெல்வினுக்கு மேற்பட்ட வெப்பநிலையும் தேவைப்படும். கனசதுர போரான்கார்பைடுநைட்ரைடின் பருமக்குணகம் 282 கிகாபாசுக்கல் ஆகும். திண்மங்கள் அனைத்திலும் இதுவே அதிகபட்ச பருமக் குணகமாகும். வைரம் மற்றும் கனசதுர போரான்நைட்ரைடின் பருமக்குணகம் மட்டுமே இதைவிட அதிகமாகும். கனசதுர-போரான் நைட்ரைடு ஒற்றைப்படிகங்களின் கடினத்தன்மை கனசதுர-போரான்கார்பைடுநைட்ரைடின் கடினத்தன்மையை காட்டிலும் அதிகமாகும்[2].