பாக்கியசெல்வம் அரியநேத்திரன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம் | |
பதவியில் 2004–2015 | |
முன்னையவர் | கிங்ஸ்லி ராசநாயகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (Pakkiyaselvam Ariyanethran; பிறப்பு: 1 பெப்ரவரி 1955)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் 2004 முதல் 2015 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.
அரியநேத்திரன் விடுதலைப் புலிகளின் தமிழ் அலை செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] இவர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஐந்தாவதாக வந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3] ஆனாலும், கிங்சுலி இராசநாயகம் பதவி விலகியதை அடுத்து அரியநேத்திரன் 2004 மே மாதத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4]
2010 தேர்தலில் அரியநேத்திரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[5] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படவில்லை.[6]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான அரியநேத்திரன், 2024 அரசுத்தலைவர் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், குடிசார் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள், தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்த "தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு" மூலமாக தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.[7][8] சுயேச்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்டார்.[9] இனப் படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாகவும், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை உலகிற்கும், இலங்கைக்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.[9] தேர்தலில் இவர் நாடளாவிய ரீதியில் 226,343 வாக்குகள் பெற்று ஐந்தாவதாக வந்தார்.[10]
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு | |
---|---|---|---|---|---|
2004 நாடாளுமன்றம்[3] | மட்டக்களப்பு மாவட்டம் | ததேகூ | 35,377 | தெரிவு செய்யப்படவில்லை | |
2010 நாடாளுமன்றம்[5] | மட்டக்களப்பு மாவட்டம் | ததேகூ | 16,504 | தெரிவு | |
2015 நாடாளுமன்றம் | மட்டக்களப்பு மாவட்டம் | ததேகூ | 21,308 | தெரிவு செய்யப்படவில்லை[11] | |
2024 அரசுத்தலைவர் | இலங்கை | சுயேச்சை | 2,26,343 | தெரிவு செய்யப்படவில்லை[10] |