![]() பாகன் செராய் நெல் வயல்கள் | |
அடைபெயர்(கள்): குட்டி நகரம் (Kota Kecil) | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°01′08″N 100°31′55″E / 5.018889°N 100.531944°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிரியான் |
உருவாக்கம் | 1840 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdkerian.gov.my/en |
பாகன் செராய் (Bagan Serai) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிரியான் நெல் அறுவடை திட்டத்தின் கீழ், பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்குகிறது. இதற்கு கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் (Kerian Irrigation Scheme) என்றும் பெயர். மலேசியாவில் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டம் ஆகும்.[1]
மலாய் மொழியில் “பாகன்” எனும் சொல்லுக்குப் படகுகள் அணையும் இடம் அல்லது சில வணிக நடவடிக்கைகளுக்குத் தரையிறங்கும் இடம் என்று பொருள். “செராய்” என்றால் எலுமிச்சை புல். மலாய் மக்கள் உணவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது இங்கு பெரும் அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது.[2]
பாகன் செராய் நகருக்கு அருகில் செமாங்கோல்; அலோர் பொங்சு; பாரிட் புந்தார்; கோலா குராவ்; கோலா கூலா நகரங்கள் உள்ளன. பாகன் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் பாகன் செராய் என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் உள்ளன.
கிரியான் மாவட்டத்தில் 8 துணை மாவட்டங்கள் உள்ளன. அவையாவன: பாரிட் புந்தார்; பாகன் தியாங்; தஞ்சோங் பியாண்டாங்; கோலா குராவ்; பெரியா; பாகன் செராய்; குனோங் செமாங்கோல்; மற்றும் செலின்சிங். இவற்றுள் பாகன் செராய் ஒன்றாகும்.
இங்குள்ள மலாய் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் பஞ்சர்மாசின் எனும் இடத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். உள்ளூர் பேச்சுவழக்குகளில் இவர்கள் பேசும் மொழியை பஞ்சர் மொழி என்று அழைக்கிறார்கள். இவர்கள் ஒரு தனித்துவமான பேச்சு வழக்கைக் கொண்டு உள்ளனர்.
இவர்கள் பேசும் மொழி பெரும்பாலான மக்களுக்கு புரியவில்லை. ஆனால் அனைத்து மலேசியர்களையும் போலவே இவர்கள் ழக்கமான மலாய் மொழியைப் பேசுகிறார்கள்.
இங்குள்ள கடைகள் பெரும்பாலும் சீனர் மலாய்ச் சந்ததியினருக்கு சொந்தமானவையாக உள்ளன. இந்தியர்கள் கணிசமான அளவு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். மலாய் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். பாகன் செராயில் அதிகமாக நெல் வயல்கள்; செம்பனை தோட்டங்கள் உள்ளன.
பொது போக்குவரத்தைப் பொறுத்த வரையில் தி ரெட் ஆம்னிபஸ் (The Red Omnibus) எனும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. பாகன் செராய் நகரம் ஒரு முக்கியப் பேருந்து நிலையத்தைக் கொண்டு உள்ளது. பாகன் செராய் புதிய நகரத்தில் பாகன் செராய் பிரதான சந்தைக்கு அருகில் அமைந்து உள்ளது. பேருந்து நிலையத்தில் வாடகைக்கார் சேவையும் உள்ளது.
விரைவு பேருந்துகள் பாகன் செராய் நகரில் இருந்து கோலாலம்பூர்; ஜார்ஜ் டவுன்; கூலிம்; அலோர் ஸ்டார்; ஈப்போ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. ஓர் இரயில் நிலையமும் உள்ளது. ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்க இரட்டைக் கண்காணிப்புத் திட்டத்திற்கு (Ipoh-Padang Besar Electrified Double Tracking Project) முன்னர், இந்தப் பாகன் செராய் இரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டது.
1850-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் காபி; கரும்பு தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கங்காணி முறையில் கொண்டு வரப்பட்டார்கள்.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட தமிழர்கள் ஒப்பந்தக் காலம் முடிந்ததும்; அவர்களுக்கு நிலம் வழங்கி அதில் வீடு கட்டிக் கொள்ளவும்; காய்கறிகள் பயிரிட்டுக் கொள்ளவும் ஓர் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் முதல் தமிழர் குடியிருப்புப் பேட்டை இந்தப் பாகன் செராய் இடத்தில் தான் வழங்கப்பட்டது.
மலாயா தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்று சொல்லப் படுகிறது.[3] 1884-ஆம் ஆண்டு 700 ஏக்கர் நிலத்தில் 400 தமிழர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது.
நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் இவ்வாறு ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட் தமிழர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது. 1932-ஆம் ஆண்டில் இராமநாதபுரம் (சுவா) என்ற கிராமத்தில் 243 ஏக்கர் நிலம் தரப்பட்டது. அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்கள் அவர்களின் தமிழக மாவட்டத்தின் பெயர் இராமநாதபுரம் என்பதையே இங்கும் வைத்தனர். ரப்பர் தோட்டங்களில் 20 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தீபகற்ப மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாகன் செராய் நகரமும் ஒன்றாகும். இந்தியர்கள் கிராமம் (Kampung India) எனும் பெயரில் இங்கு ஒரு கிராமம் உள்ளது.[4]
பாகன் செராய் தமிழ்ப்பள்ளி 1913-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் பாகன் செராய் அரசு தமிழ்ப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. 1920-ஆம் ஆண்டில் ஜாலான் மாக்காமா எனும் நீதிமன்றச்சாலைக்கு அருகே ஒரு துணைக் கட்டடம் கட்டப்பட்டது. 1978-ஆம் ஆண்டில் மூன்றாவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஓட் இரட்டைமாடி கட்டடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தில் 3 வகுப்பறைகள், ஓர் அலுவலகம், ஒரு நூல் நிலையம், ஒரு கிடங்கு மற்றும் ஒரு சிற்றுண்டிச் சாலை இயங்கின.
பின்னர் 5.10.1990 டிசம்பர் 5-ஆம் தேதி 4 வகுப்பறைகளைக் கொண்ட ஒரு துணைக் கட்டடம் கட்டப்பட்டது. அப்போதைய ம.இ.கா.வின் தலைவர் துன் சாமிவேலு அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளிக்கு நூறாயிரம் மலேசிய ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் 2 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்பட்டன. பள்ளியின் அலுவலகம், ஆசிரியர் அறை மற்றும் கழிவறைகள் தரம் உயர்த்தப்பட்டன.
2002-ஆம் ஆண்டில் 13 கணினிகளுடன் அடங்கிய ஒரு கணினியகம் கட்டப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் பாலர் பள்ளி இயங்கத் தொடங்கியது. இரு வேளை பள்ளியாக இயங்கி வந்த இந்தப் பள்ளி, ஒரு வேளை பள்ளியாக இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. அந்த வகையில் 2011-ஆம் ஆண்டில் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் புதிதாக நான்கு மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 323. ஆசிரியர் எண்ணிக்கை 26. தலைமையாசிரியர் ஜெயகோபாலன். இவருடைய காலத்தில் இந்தப் பள்ளி நன்கு வளர்ச்சி கண்டது. பல அரிய சேவைகளை வழங்கி இருக்கிறார். தற்சமயம் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் அவ்வப்போது தன்னால் இயன்ற சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.[5]