பாக்கித்தானில் அரிசி உற்பத்தி (Rice production in Pakistan) அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு உற்பத்தியில் உலகின் 10ஆவது பெரிய நாடாக பாக்கித்தான் உள்ளது. உலகின் மொத்த அரிசி வர்த்தகத்தில் பாக்கித்தானின் ஏற்றுமதி 8% அளவிற்கும் அதிகமாக உள்ளது.[1] பாக்கித்தானின் விவசாயப் பொருளாதாரத்தில் அரிசி ஒரு முக்கியமான பயிராகும். மேலும் இது ஒரு முக்கியமான சம்பா பருவப் பயிராகவும் விளைவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் பாக்கித்தான் 7.5 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்து, பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்தது. 2016/17 ஆம் ஆண்டில் பாக்கித்தான் 6.7 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்தது. அதில் சுமார் 4 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. முக்கியமாக அண்டை நாடுகளான மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்த அரிசியைப் பெற்றன. சிந்து, பஞ்சாப் மற்றும் பலுசிசுத்தான் பகுதியின் வளமான நிலங்களில் அரிசி விளைகிறது. அங்கு மில்லியன் கணக்கான விவசாயிகள் தங்கள் முக்கிய வேலைவாய்ப்பாக நெல் சாகுபடியை நம்பியுள்ளனர்.பாக்கித்தானில் உற்பத்தி செய்யப்படும் மிகவும் பிரபலமான அரிசி வகைகளில் பாசுமதி அரிசியும் அடங்கும். அதன் சுவை மற்றும் தரம் புகழ்பெற்றதாகும். பாக்கித்தான் இந்த வகை அரிசியின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது [2]