பாக்கித்தானில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பது காடழிப்பு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு, காலநிலை மாற்றம், பூச்சிக்கொல்லிகளின் தவறான பயன்பாடு, மண் அரிப்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் பாலைவனமாக்கல் ஆகியவை அடங்கும்.[1] இந்தக் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகள், நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்து மக்கள் தொகை பெருகும்போது அவை மேலும் மோசமடைகின்றன. இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசாங்கத் துறைகளும் முன்முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இன்னும் அப்படியேதான் உள்ளது.
பாக்கித்தானின் பெரும்பான்மையான தொழில் துறைகள், எடுத்துக்காட்டாக மீன்பிடி தொழில் மற்றும் வேளாண்மை போன்றவை பாக்கித்தானின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாகவும், ஐந்தில் இரண்டு பங்கு வேலைவாய்ப்பையும் தருகிறது.[1] இது நாட்டின் இயற்கை வளங்களை அதிகம் சார்ந்துள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க ஏற்கனவே உள்ள பற்றாக்குறை இயற்கை வளங்களுக்கு அதிக தேவை உள்ளது. எவ்வாறாயினும், நாடு அதன் வளர்ச்சியைப் பொறுத்தது என்பது நாட்டின் எதிர்கால நலனுக்கும் வெற்றிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது முரண்.[2] பாக்கித்தானின் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், ஏற்கனவே அதிக வறுமை நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தங்கள் வருமானத்தை பெற இயற்கை வளங்களை நம்பியிருக்கிறார்கள் மற்றும் இந்த வளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இது சுற்றுச்சூழலை மேலும் சீரழிப்பதற்கு வழிவகுக்கிறது. இதனால் வறுமை அதிகரிக்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, பாக்கித்தானை "வறுமை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் மோசமான நிலையை நோக்கி செல்கிறது" என்று குறிப்பிடுவதற்கு வழிவகுத்தது.
பாக்கித்தானின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காற்று மாசுபாடு ஒன்றாகும். கலப்படமற்ற குடிநீர் போதுமானதாக இல்லை. 2013 இல் ஒலி மாசுபாடு மற்றும் மாசு காரணமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது என்று உலக வங்கி தன்து அறிக்கையில் கூறியது. இந்த சுற்றுச்சூழல் கவலைகள் பாக்கித்தான் குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன. தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் மோட்டார் மயமாக்கல் ஆகியவற்றின் அதிகரிப்பு தவிர்க்க முடியாமல் இந்த சிக்கலை மோசமாக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.[3]
உலக வங்கி பாக்கித்தானை நீர் பற்றாக்குறை நாடு என்று வகைப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து நுழையும் காபூல் நதி மற்றும் சிந்து நதி, ஜீலம் நதி, செனாப் நதி, ராவி நதி, மற்றும் இந்தியாவிலிருந்து பாயும் சத்லஜ் நதி உட்பட பாக்கித்தானுக்குள் பாயும் ஏழு முக்கிய ஆறுகள் உள்ளன. இவற்றில் ரவி மற்றும் சட்லெஜ் ஆறுகள் நீரோட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்கு திருப்பி விடப்படுகிறது, இதற்காக 1960 ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்ட சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு இந்த நுகர்வு பயன்பாடு வழங்கப்பட்டது [1] சிந்து நதி, ஜீலம் நதி மற்றும் செனாப் நதி ஆகியவற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் பஞ்சாப் மற்றும் சிந்துவில் உள்ள விவசாய சமவெளிகள் முழுவதும் தண்ணீரை வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்கு மற்ற புதிய நீர்நிலைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நீர் பற்றாக்குறை பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், இலட்சக்கணக்கான பாக்கித்தானியர்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் இராவல்பிண்டி போன்ற பெரிய நகரங்கள் ஒலி மாசுபாட்டை எதிர்கொள்கின்றன. இந்த மாசுபாட்டின் முக்கிய ஆதாரம் பேருந்துகள், கார்கள், லாரிகள், ரிக்ஷாக்கள் மற்றும் நீர் வண்டிகள் ஆகியவற்றால் ஏற்படும் போக்குவரத்து சத்தமேயாகும். கராச்சியின் பிரதான சாலைகளில், சராசரி சத்த அளவு 90 டெசிபலாக இருந்தது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. மேலும் இது சுமார் 110 டெசிபலாக எட்டும் திறன் கொண்டதெனவும் கூறுகிறது. இது ஐஎஸ்ஓவின் சத்த நிலை தரமான 70 டெசிபலை விட மிக அதிகம் ஆகும்.[4]
காற்று மாசுபாடு பாக்கித்தான் மிக முக்கிய நகரங்களில் வளரும் சுற்றுசூழ் பிரச்சனையாக உள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, "கராச்சியின் நகர்ப்புற காற்று மாசுபாடு உலகில் மிகக் கடுமையானது. இது மனித ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்துகிறது". ஆற்றலின் திறனற்ற பயன்பாடு, தினசரி பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, கட்டுப்பாடற்ற தொழில்துறை கழிவுகளின் அதிகரிப்பு மற்றும் குப்பை மற்றும் நெகிழி எரிப்பு ஆகியவை நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டிற்கு அதிக பங்களிப்பு செய்துள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, பெரிய நகரங்களில் மாசுபாட்டின் சராசரி அளவு உலக சுகாதார அமைப்பின் வரம்புகளை விட சுமார் நான்கு மடங்கு அதிகம் என்று சிந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை கூறுகிறது. இந்த உமிழ்வுகள் சுவாச நோய்கள், பார்வைத்திறன் குறைதல், தாவரங்களின் இழப்பு மற்றும் தாவரங்களின் வளர்ச்சியில் ஒரு விளைவு உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும்.
காற்று மாசுபாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று தொழில்துறை செயல்பாடடாகும். போதிய காற்று உமிழ்வு சிகிச்சைகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் ஒழுங்குமுறை கட்டுப்பாடு இல்லாதது முக்கிய நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் மோசமடைய பங்களித்தது. கூடுதலாக, நெகிழி மற்றும் ரப்பர் உள்ளிட்ட அதிக அளவிலான திடக் கழிவுகளை பொதுமக்கள் தெரு மூலைகளில் எரிக்கும் பொதுவான நடைமுறை, நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. அவை அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
காலநிலை மாற்றம் பாக்கித்தானின் மக்களையும் சுற்றுச்சூழலையும் வெவ்வேறு வழிகளில் பாதித்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பாக்கித்தான் பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் அளவு குறைவாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கங்களால் அந்த நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.[5] 2014-15 ஆம் ஆண்டின் பாகிஸ்தான் பொருளாதார கணக்கெடுப்பின்படி,[6]] "தீவிரமான வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தின் அதிகரிப்பு, மற்றும் ஒழுங்கற்ற பருவமழை போன்றவை காரணமாக அடிக்கடி ஏற்படும் கடுமையான வெள்ளம் மற்றும் வறட்சி" போன்ற காலநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தான் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் ஆகும். வானிலை முறைகளில் ஏற்பட்ட மாற்றம் உள்கட்டமைப்புகளை அழித்துள்ளது. பல உயிர்களை பறித்துள்ளது மற்றும் விவசாயத் துறையில் பேரழிவு தரக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்று கணக்கெடுப்பு முடிவு செய்தது.
பாக்கித்தானின் மாறுபட்ட நிலம் மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக, இது பூகம்பங்கள், வெள்ளம், சுனாமி, வறட்சி, சூறாவளி உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை பேரழிவுகளுக்கு ஆளாகிறது.[1] கில்கிட்-பால்டிஸ்தான் (ஜிபி), பலூசிஸ்தான் மற்றும் ஏ.ஜே.கே மாகாணங்கள் பாதிக்கப்படக்கூடிய நில அதிர்வுப் பகுதிகள் என்றும், எனவே பூகம்பங்களால் மிகவும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பேரழிவு மேலாண்மை அறிக்கை கூறுகிறது. அதே சமயம் தாழ்வான பகுதிகள் என்பதால் சிந்து மற்றும் பஞ்சாப் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன.[7]