பாக்கிஸ்தானில் சூரிய மின் ஆற்றல் (Solar power in Pakistan) சூரிய வெப்ப ஆற்றல் அல்லது ஒளிமின்னழுத்தியம் முதலானவற்றிலிருந்து மின்சாரமாக உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தும் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. பாக்கிஸ்தானிய காசுமீர், பஞ்சாப், சிந்து மாகாணம், பலுச்சிசுத்தானம் ஆகிய பகுதிகளில் பாக்கிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான சூரிய மின் நிலையங்கள் இருக்கின்றன. சர்வதேச புதுப்பிக்கத் தக்க எரிசக்தி முகமை, சப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், சீன நிறுவனங்கள், மற்றும் பாகிஸ்தானிய தனியார் துறையின் எரிபொருள் நிறுவனங்கள் முதலிய நிறுவனங்கள் பூர்வாங்க வளர்ச்சிப்பணி முயற்சிகளை மேற்கொண்டன. காயிதே அசாம் சோலார் பவர் பார்க் என்ற உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி பூங்காவை பஞ்சாப் மாகாணத்திலுள்ள காலிசுதான் பாலைவனத்தில் அமைப்பது பாக்கிஸ்தானின் திட்டமாகும். 1 கிகாவாட் திறன் கொண்ட நாட்டின் இம்மின் நிலையத்தை 2017 ஆம் ஆண்டிற்குள் அமைத்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் 3,20,000 வீடுகளுக்கான மின்தேவையை நிறைவு செய்யும் என்று கருதப்படுகிறது[1]
2012 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் பாக்கித்தான் தனது முதலாவது சூரிய மின்நிலையத்தை இசுலாமாபாத்தில் தொடங்கியது. சப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியுடன் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் கூட்டு ஒத்துழைப்பு திட்டத்துடன் நடைபெற்றது. 178 கிலோவாட்டு மின்திறனுள்ள இரண்டு ஒளிமின்னழுத்தியங்களை, பாக்கித்தான் திட்டக் குழு மற்றும் பொறியல் ஆட்சிக்குழு வளாகங்களில் நிறுவும் நோக்கத்தை இத்திட்டம் உள்ளடக்கியிருந்தது.
சூரிய ஒளிமின்னழுத்தியம் மூலம் தயாரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு மின்சாரம் வழங்கிய முதலாவது திட்டம் இதுவாகும். உபரி மின்சாரத்தை இசுலாமாபாத்தின் மின்சாரப்பகிர்வு நிறுவனமான இசுலாமாபாத் மின்பகிர்வு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நிலையும் ஏற்பட்டது. இத்திட்டத்திற்காக 2010[2] ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக 480 மில்லியன் யென்கள் அதாவது தோராயமாக 553.63 , மில்லியன் பாக்கித்தானிய ரூபாய்கள் நிதிஉதவியாக அளிக்கப்பட்டுள்ளது.
லாகூர் நகரில் உள்ள ஒளிகாட்டி கோபுரத்தில் முதல் உயர்தர ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் அமைப்பு நிறுவப்பட்டது. அமெரிக்க நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு முன்னோடித்திட்டமாக இது விளங்கியது. மேலும் அமெரிக்க வர்த்தக மற்றும் மேம்பாட்டு முகமையின்[3] ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் 50 முதல் 100 மெகா வாட்டு ஒளிமின்னழுத்தியங்களை நிறுவுவதும் , 2014 இல் [4]குறைந்தது 300 மெகாவாட்டு மின் திறனுள்ள ஒளிமின்னழுத்தியங்கள் நிறுவுதல் முதலான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டப்பட்டன. 2015 ஆம் ஆண்டில், காயிதே அசாம் சோலார் பவர் பார்க்கில் 1000 மெகா வாட்டு மின் திட்டமும் தொடங்கப்பட்டது[5].
பாக்கித்தானின் சூரிய ஒளிவீச்சு அளவு 5.3 கிலோவாட்மணி/மீ2/நாள் ஆகும்[6]. 2030 ஆம் ஆண்டில் தோராயமாக 10 கிகாவாட்டு மின்சாரத்தை இச்சூரிய ஒளிசக்தியிலிருந்து தயாரிப்பது என்ற இலக்கை பாக்கித்தான் நிர்ணயித்துள்ளது. மேலும், 2015 இல் 5% டீசல் மற்றும் உயிரி எரிபொருளுக்கு மாற்றாகவும் 2025 [7]இல் 10% எரிபொருளுக்கு மாற்றாகவும் இவ்வொளி வீச்சை பயன்படுத்துவது என்றொரு இலக்கையும் பாக்கித்தான் திட்டமிட்டுள்ளது.
ஆண்டு | அமைப்பு மெகா வாட்டில்p | குறிப்பு | |
---|---|---|---|
கூட்டு கொள்திறன் |
கூடுதலான கொள்திறன் | ||
2014 | 400 | 2015 ஆம் ஆண்டிற்கு பின்னரான சேர்க்கப்பட்ட கொள்திறன் தரவு.[8] | |
2015 | 1,000 | 600 | முதனிலைத் தரவு [8] |
நீர் மற்றும் ஆற்றல் துறையின், முன்னாள் மத்திய அமைச்சரான ராசா பர்வேசு அசுரப், சூரிய ஆற்றல் மின்சாரத்தைப் பயன்படுத்தி 2014 ஆம் ஆண்டிற்குள் 7,000 கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்தப்படும் என்று சூலை 2, 2009 அன்று அறிவித்தார்.
நிலக்கரி, சூரிய ஆற்றல், காற்று சக்தி மூலம் மின் உற்பத்தியை இலக்காகக் கொண்ட புதிய திட்டங்களை பஞ்சாப் அரசு தொடங்கும் என்று மூத்த ஆலோசகர் சர்தார் சுல்பிக்கார் கோசா தெரிவித்துள்ளார். இதன்மூலமாக கூடுதல் மின் ஆதாரங்கள் அதிகரிக்கும் என்று கருதப்பட்டது. சிந்து மாகாண அரசை, அதனால் செயலாக்கக்கூடிய ஆய்வுகளை நடத்த பாக்கித்தான் அரசு அனுமதித்துள்ளது. சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவவும் பாக்கித்தான் அரசு திட்டமிடப்பட்டுள்ளது.