பாகிஸ்தானில் பெண்ணியம் (Feminism in Pakistan) என்பது பாக்கித்தானில் பெண்களின் உரிமைகளை வரையறுத்தல், நிறுவுதல், உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. இது சமமான வாய்ப்புகளுடன், சமமான அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெறுவதையும் உள்ளடக்கியது.[1] [2] [3] குடியேற்றவியம், தேசியவாதம், சர்வாதிகாரம், மக்களாட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உள்ளிட்ட அதிகாரத்தின் தேசிய மற்றும் உலகளாவிய மறுசீரமைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த இயக்கங்கள் வரலாற்று ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் இயக்கத்திற்கும், பாக்கித்தான் அரசுக்கும் இடையிலான உறவு பரஸ்பர இணக்கத்திலிருந்து நேரெதிர் எதிர்ப்பு, மோதலுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் பாலின சமநிலை குறியீட்டில் 153-ல் பாக்கித்தான் மோசமான 151வது கடைசி இடத்தில் உள்ளது.[4] பாக்கித்தானின் பெண்களின் கல்வியறிவு மிகவும் குறைவாக உள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் கூற்றுப்படி, 18 சதவிகித பாக்கித்தான் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.[5] கட்டாய மனமாற்றமும், திருமணத்தின் பரவலும், நிகழ்வுகளின் குறைபாடுகளும், குற்றத்தின் சிக்கலான தன்மை ஆகியவற்றாலும் இதனை துல்லியமாக மதிப்பிடுவது கடினம். எனவே வருடத்திற்கு 100 முதல் 700 பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ பெண்கள் வரை மதிப்பீடுகள் உள்ளன. இந்து சமூகத்தைப் பொறுத்தவரை, மிகவும் பழமைவாத மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 300 ஆகக் கொண்டுள்ளன.[6] பாலின இடைவெளியைக் கட்டுப்படுத்துவது பாக்கித்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 30 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று பாக்கித்தானுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் பிணை எடுப்பு திட்டம் கூறுகிறது. [7]
சோயா ரகுமான் என்பவரின் கூற்றுப்படி, பாக்கித்தானியப் பெண்மையின் உருவம் என்பது, பாக்கித்தான் அரசின் தொடக்கத்திலிருந்தே ஒரு கட்டுமானமாகும். பாக்கித்தான் பெண்கள் வாதிடுகையில், தங்களின் பாலுணர்வை பாதுகாப்பார்கள் என்றும், அதனை கட்டுப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர்கள் கலாச்சார எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதபோது கௌரவக் கொலைகளில் கூட கொல்லப்படலாம்.[8] ஆபியா எஸ். ஜியா என்பவரின் கூற்றுப்படி, இந்த கலாச்சார மரபுவழியானது அரசாலும், அதன் நிறுவனமான பாக்கித்தான் ஆயுதப்படைகளின் ஊடக மற்றும் மக்கள் தொடர்பு பிரிவால் தயாரிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும், பொருத்தமற்றதாக கருதுவதை தணிக்கை செய்யவும் முயல்கிறது. அரசு, தேசிய வாதத்தைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடாமல், சட்டபூர்வமான மற்றும் அனுமதிக்கப்பட்ட 'பாக்கித்தான் கலாச்சாரம்' என்பது எதுவென்பதையும் முடிவு செய்ய பொது, தனியர் வாழ்க்கையில் ஊடுருவுகிறது.[9]
பாக்கித்தானின் சுதந்திரத்திற்குப் பிறகு, பாக்கித்தானில் உள்ள உயரடுக்கு முஸ்லிம் பெண்கள் சட்ட சீர்திருத்தங்கள் மூலம் தங்களின் அரசியல் அதிகாரமளிப்புக்காக தொடர்ந்து வாதிட்டனர். மேலும் இதற்காக அவர்கள் ஆதரவைத் திரட்டினார்கள், 1948ஆம் ஆண்டில் இசுலாமியச் சட்ட முறைமையில் முஸ்லிம் தனிநபர் சட்டத்தை நிறைவேற்ற வழிவகுத்தது. இச்சட்டம் அனைத்து வகையான சொத்துக்களையும் பெண்கள் பெறுவதற்கான உரிமையை அங்கீகரித்தது. 1956 ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்கள் உரிமைகள் சாசனத்தை அரசாங்கம் சேர்க்க முயற்சி செய்தது. ஆனால் இது தோல்வியடைந்தது. திருமணம், விவாகரத்து ஆகியவை உள்ளடக்கிய 1961 ஆண்டு முஸ்லிம் குடும்பச் சட்ட கட்டளை, பாக்கித்தானில் பெண்ணிய உந்துதலைக் கொண்டிருந்த மிக முக்கியமான சமூக சட்ட சீர்திருத்தம், இன்னும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக பரவலாகக் கருதப்படுகிறது.[10] [11]